விசுவாசத்தை வெளிப்படுத்துவது கிரியைகள் Shreveport, Louisiana USA 65-1126 1மறுபடியுமாக இன்றிரவு இங்கு வந்திருப்பது நல்லது. நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகின்றேன் என்று அவர்கள் எப்படி கண்டு கொண்டார்களென்று தெரியவில்லை. எல்லோருமே ஜெபித்துக் கொள்வதற்காக வந்துள்ளனர். நீங்கள் ஆவியானவரின் வழி நடத்துதலை பின்பற்றினால் நல்லது என்று நம்புகிறேன். அதுவே சிறந்தது. அதுவே ஒருபோதும் தவறாத செய்தி. இன்று நான் அறையில் உட்கார்ந்து கொண்டிருந்த போது... என் இருதயத்துக்கு மிகவும் அன்பான போதகர் ஒருவர் (மூன்று பேர்), எனக்கு நெருங்கின மூன்று நண்பர்கள், பகல் உணவுக்கு என்னை வந்து கூட்டிக்கொண்டு போவதாக கூறினர். ''அது மிகவும் நல்லது,'' என்று எண்ணினேன். 2எனவே நான் சிறிதளவு காலை உணவு மாத்திரம் அருந்தினேன். ஏனெனில் பகல் உணவுக்கு அவர்கள் பணம் கொடுத்துவிடுவார்கள் என்று நான் உறுதியாக அறிந்திருந்ததனால் முழு பகல் உணவு அருந்தலாம் என்று எண்ணினேன். 12.00 மணி அடித்தது, 1.00 மணி அடித்தது, 2.00 மணி அடித்தது, யாருமே வரவில்லை. எனவே அங்கு... முற்றத்தில் குற்றவாளி ஒருவனை காவல் படையினர் துரத்திக் கொண்டு வந்தனர். அதைக் காண நான் கீழே இறங்கிச் சென்றேன். சகோ. ஜாக் வரவேயில்லை. முடிவில் நான் அறிந்து கொண்டது என்னவெனில், ஓட்டல் நிர்வாகத்தினர் நான் தங்கும் அறையின் எண்ணை அவருக்குக் கொடுக்காமல் வேறெதோ ஒரு எண்ணைக் கொடுத்துவிட்டனர். எனவே நான் தங்காத வேறொரு அறைக்கு சென்று அவர் அறையின் மணியை அடித்துக் கொண்டிருந்தாராம். வேறொரு சமயம் அவர் என் உணவுக்காக பணம் செலவழிக்கும்படி செய்துவிடுகிறேன். அவரையும், சகோ. ட்ரேஸியையும், சகோ. ப்ரவுனையும் இன்றிரவு காண்பதில் எனக்கு நிச்சயம் மகிழ்ச்சி. அவர்களை காணும் போது அரிசோனாவுக்கு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. 3அன்றொரு நாள் அந்த வனாந்தரத்தை நான் கடந்து வந்து கொண்டிருந்த போது, என் மனைவியிடம், “இந்த இடத்தில் சகோ. ஜாக், தன் ஷெவர்லே காரின் பின்னால் உட்கார்ந்து கொண்டு சகோ. பிரவுனுடன், சிருஷ்டிப்பு ஆறு நாட்களில் முடிவடைந்ததா அல்லது அதற்கு அறுபது லட்சம் ஆண்டுகள் பிடித்ததா என்று தீவிரமாக விவாதித்தது என் நினைவுக்கு வருகிறது,'' என்றேன். அந்த விவாதம் மிகவும் நன்றாயிருந்தது. அவர்களுடைய விவாதம் மிகவும் தீவிரமடைந்து, அவர்கள் காரை விட்டு இறங்கி, கை நிறைய பாறைகளை எடுத்துக் கொண்டு, ஒருவர் மேல் ஒருவர் வேகமாக எறியத் தொடங்கினர். ஒருவர் கம்பத்தின் பின்னால் ஒளிந்து கொண்டார். ''நான் உன்னை மிஞ்சி விட முடியும்“ என்று அந்த விதமாக அவர்களால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை. அவர்கள் சாலையில் நடந்து கொண்டு; சகோ. ஜாக் குள்ளமானவர், உடலை அவரால் இயன்றவரை நெளித்தார். அவர்களுடன் கூட இருந்த சகோ. யங்குக்கு நீண்ட கால்கள். நான் அன்று சிரித்தது போல் என் வாழ்நாளில் சிரித்ததேயில்லை. பிறகு சகோ. ஜாக் காரில் ஏறிக்கொண்டு காலணிகளைக் கழற்றினார். சகோ. ஷாரிட் எங்களுக்கு சாக்கு நிறைய ஆரஞ்சு பழங்கள் கொடுத்திருந்தார். நாங்கள் ஷ்ரீவ் போர்டை அடைவதற்கு முன்பு அவர் சாக்கிலிருந்த பாதி பழங்களை தின்று முடித்துவிட்டார். 4உங்களுக்குத் தெரியுமா, அவை பொன்னான நாட்கள். ஆம், ஐயா, அவை பொன்னான நாட்கள். அது நகைச்சுவையாகத் தென்படலாம், ஆனால் அது உண்மை. நாங்கள்... அதில் ஏதோ ஒன்றுண்டு. நமக்கு வயதாகுந்தோறும், அந்த நாட்கள் நினைவுக்கு வந்து கொண்டேயிருக்கின்றன. அப்படிப்பட்ட வாலிப நாட்களை நாம் மறுபடியும் வாழ்ந்தால் நலமாயிருக்கும் என்னும் எண்ணம் உண்டாகின்றது. அது உண்மை. நமக்கு வயதாகுந்தோறும் இவை காட்சிகளாக நம் முன் எழுகின்றன. அது தூய்மையும், பரிசுத்தமும், அன்பில் சகோதர ஐக்கியமுமாய் இருந்ததற்காக மகிழ்வுறுகிறேன். நாம் முதியவர்களாகக் கூடாத ஒரு தேசத்துக்கு செல்லவிருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும் போது... அப்பால் உள்ள அந்த மகத்தான தேசம். அங்கு நமக்கு வயதாகாது. நாம் மரிக்கவும் மாட்டோம். 5நமது விலையேறப் பெற்ற சகோதரர்களில் ஒருவர், நம் அனைவருக்கும் அன்பார்ந்தவர், சில நாட்களுக்கு முன்பு தான் எல்லையைக் கடந்து அந்த தேசத்தை அடைந்தார். இந்த மேடைக்கு நான் வரும் போதெல்லாம். சகோ. லையிலை நினைப்பேன் என்று எண்ணுகிறேன். நேற்றிரவு சிறுமி ஜீடி இங்கு உட்கார்ந்திருக்கக் கண்டேன். என் இருதயம் அவளுக்காக வேதனைப்பட்டது. அவளால் எப்படி இதை தாங்க முடிகிறது என்று எண்ணினேன். என் தகப்பனார் இறந்த போது எனக்கு எப்படி இருந்தது. மற்றவருடைய வேதனையை அறிந்துக்கொள்ள நாமும் இந்த வேதனைகளின் பள்ளி வழியாய்ச் செல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம். 6என் பழைய போதகர் நண்பரை இப்பொழுது நோக்கிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அவருடைய பெயர் ஞாபகம் வரவில்லை. அது சரியா? அநேக ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் இங்கு வியாதியஸ்தருக்காக ஜெபிப்பது வழக்கம். இல்லையா? கெர்ஹோல்ட்சர். அந்த - அந்த ஜெர்மன் பெயர். அதை என்னால் உச்சரிக்க முடியவில்லை. சகோ. ட்ரேஸி அவரை அங்கு சந்தித்தார். அவரை நான் ஏறக்குறைய பத்து ஆண்டுகளாக அறிவேன். நான் அவரிடம், “இந்த பத்து ஆண்டுகளில் உங்களுக்கு ஆறு மாதம் வயதான மாதிரியும் கூட இல்லை,” என்றேன். என்றாவது ஒரு நாளில் முடிய வேண்டிய உலகில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். 7இப்பொழுது, இன்றிரவு, நான்... நேற்றிரவு உங்களை நீண்ட நேரம் பிடித்து வைத்துவிட்டேன். இன்றிரவு அப்படி செய்யப் போவதில்லை. என் கதையை சொல்லி முடிக்கவேண்டும். இன்றிரவு நான் சபைக்கு எடுத்துக் கொள்ளப்படுதல் என்னும் பொருளின் மேல் பிரசங்கம் செய்யலாம் என்று நினைத்திருந்தேன். நான் வேத வசனங்களில் இதைக் குறித்து காண்பதென்ன? எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு சபை எந்நிலையில் இருக்க வேண்டும். எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன்பு என்ன நடக்கும், எப்படி நடக்கும் என்றெல்லாம், எடுத்துக்கொள்ளப்படுதல் உண்டென்று நாம் அனைவரும் விசுவாசிக்கிறோம், இல்லையா? நாம் விசுவாசிக்கிறோம். ஆனால் திடீரென்று அவர் என்னிடம், “இன்றிரவு வியாதியஸ்தருக்கு ஜெபி,” என்றார். நான் மெக்ஸிகன் சகோதரன் ஒருவருடன் பகல் உணவு அருந்திக் கொண்டிருந்தேன். அவரை நான் சாலையில் காரில் ஏற்றிக் கொண்டேன். அவரும் அவருடைய மனைவியும் இன்றிரவு இங்குள்ளனர் என்று நினைக்கிறேன். அப்பொழுது ஒருத்தி வந்து என்னிடம் சாட்சி கூறினாள். அவள், “சபையின் திறந்த வெளியில் ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு முன்பு என்று நினைக்கிறேன் ஒரு மனிதன் சிந்தனைகளைப் பகுத்தறியும் வரிசையில் வந்து கொண்டிருந்தார்,” என்றாள். சகோ. ஜாக் செய்வது போல் இன்றிரவு பழங்காலத்து ஜெப வரிசையை அமைக்கலாம் என்று நினைத்தேன். 8சகோ. யங் ப்ரவுன் என் கூட்டங்களுக்கு ஜெப அட்டைகள் விநியோகிப்பது வழக்கம். அவர் மிகவும் நேர்மையுள்ளவராக செயலாற்றி வந்ததை நான் கண்டிருக்கிறேன். அவர் அட்டையை விற்றதாக ஒரு முறையாவது பிடிபடவில்லை, அல்லது வேறெந்த தவறான காரியங்களையும் செய்யவில்லை. அவர் மிகவும் நேர்மையானவர். மற்றவர்கள் அட்டைகளை விற்க முயன்ற போது, அவர்களை நாங்கள் பிடித்திருக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியும். எனவே நாம்... சகோ. ப்ரவுன் விசுவாசமுள்ளவராக ஒவ்வொரு முறையும் அந்த வேலையை சரிவர செய்து வந்தார். அவர் அங்கு நின்று கொண்டு, அட்டைகளை வாங்கிக் கொண்டு, அவர்களை வரிசையில் அனுப்புவது என் நினைவுக்கு வருகிறது. அவர்களுக்காக நான் ஜெபித்துக் கொண்டே செல்வேன். அந்த ஜனங்கள் கலப்பில்லாத விசுவாசத்தைப் பெற்றிருந்தனர். அவர்கள் அருகில் வரும்போதே சுகமாகிவிடுவார்கள். அன்று இருபது பேர் சுகமடைந்தால், இன்று ஒருவர் சுகமடைகிறார் என்னும் விகிதத்தில் அது உள்ளதென்று நினைக்கிறேன். 9இன்று பிற்பகல் அந்த மனிதனைக் குறித்த வரலாறு சொல்லப்பட்டது. அவர் ஒருக்கால் இங்கு இருக்கக்கூடும். ஒரு ஆண்டுக்கு முன்பு அவர் ஜெப வரிசையில் வந்து கொண்டிருந்தாராம். அவருக்கு. அவருக்கு முன்பு பொட்டலம்மை (mumps) இருந்ததாக பகுத்தறிந்து கூறப்பட்டது. அது குணமான பிறகு, அவருக்கு பெண் குழந்தையே இனிமேல் பிறக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். அவருக்கு பெண் குழந்தை வேண்டுமென்ற ஆசை இருந்தது. அவருக்கு ஒரு பையன் இருந்தான் என்று நினைக்கிறேன். ஆனால் கர்த்தரிடத்திலிருந்து உண்டான தரிசனத்தில், “உமக்கு பெண் குழந்தை பிறக்கும்,” என்று அவரிடம் கூறப்பட்டது. 10இன்றிரவு அவர் அந்த பெண் குழந்தையை கொண்டு வந்திருப்பதாக கூறினாராம். அந்த மனிதனை எனக்குத் தெரியாது. ஒருக்கால்... நான் குறிப்பிட்ட அவர் கூட்டத்தில் எங்காவது இருக்கக்கூடும். எனக்குத் தெரியவில்லை. யாரோ ஒருவர் என்னிடம் கூறினார். ஒருக்கால் அவர் வெளியே இருக்கக்கூடும். ஓ, இதோ அந்த குழந்தை இங்குள்ளது. அவர் இங்கிருக்கிறார். அது நல்லது. அது மிகவும் நல்லது. எவ்வளவு அழகான குழந்தை! எல்லோருமே அதனிடம் நடந்து சென்று அதைக் காண அது அருகில் உள்ளது... உண்மையில் அழகான குழந்தை. அதன் தாய் இங்கு வந்து சாட்சி கூற வைக்கலாம். ஒருக்கால் அவள் நாளை சாட்சி கூறுவாள், அல்லது எப்பொழுதாவது நமது ஆராதனைகள் நடக்கும் போது. நாளை காலை வர்த்தகரின் காலை உணவுக் கூட்டம் நடைபெறும். அதை ஏற்கனவே அறிவித்துவிட்டீர்களா?... மிகவும் நல்லது. 11இப்பொழுது தெய்வீக சுகமளித்தலைக் குறித்து ஒரு சிறு பாடத்தை பார்ப்போம். எத்தனை பேருக்கு தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் உண்டு? ஓ, என்னே, இப்படிப்பட்ட ஒரு விசுவாசம் இருக்கும் போது, இது மகத்தான இரவாக இருக்கும். ஜனங்களுடைய விசுவாசமே முக்கியம் வாய்ந்தது. அது விசுவாசிப்பவரைப் பொறுத்தது. நான் ஒரு பென்சிலை எடுத்துக் கொண்டு சில வேத வசனங்களை குறித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது பில்லி கதவைத் தட்டி, “அப்பா” என்று கூப்பிட்டான். நான், “சற்று நேரம் பொறு. இன்னும் எழுதி முடியவில்லை” என்றேன். அவன், “சகோ. ஜாக் உங்களுக்காக காத்திருக்கிறார்,” என்றான். எனவே நான் வர வேண்டியதாயிற்று. என்னிடம் காகித க்ளிப் (paper clip) இருக்கவில்லை. நான் மேடாவின் கொண்டை க்ளிப்பை அதற்கு பதிலாக உபயோகித்தேன். அதை 'ஜானி பின்' (johnny pin) என்று அழைப்பது வழக்கம். அதை இங்கு 'பாபி பின்' (bobby pin ) என்று அழைக்கின்றனர் - அப்படி ஏதோ ஒருவிதமான 'பின்' எனக்கு இவைகளைக் குறித்து அதிகம் தெரியாது. அது அங்கிருக்கக் கண்டேன். எனவே அதை காகித க்ளிப்பாக உபயோகித்து நான் எழுதி வைத்தவைகளை... இன்று காலை நான் எழுதின குறிப்புகளை தனித்தனியே பிரித்தேன். 12வயதாகும் போது... முன்பெல்லாம் வேத வாக்கியங்கள் போன்றவைகளை என்னால் எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியும். ஆனால் பாருங்கள், இப்பொழுது அது கடினமாயுள்ளது. சகோ. ஜாக், உங்களுக்கும் அதே தொல்லைதானா? அப்படித்தான், ஆம். அண்மையில் நான் சகோ. ஜாக்கிடம், “சகோ. ஜாக், உங்களுக்குத் தெரியுமா, எனக்கு வயதாவதனால் என்னால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. நான் ஏதாவதொன்றை கூறத் தொடங்கி, அது நினைவுக்கு வரும் வரைக்கும் காத்திருக்க வேண்டியதாயுள்ளது” என்றேன். அவர், “அவ்வளவு மோசமாகத்தான் அது உள்ளதா?” என்றார். நான், “அது போதிய அளவுக்கு மோசம் இல்லையா?” என்றேன். அவர், “இல்லை''. ''நான் யாரையாவது தொலைபேசியில் கூப்பிட்ட பிறகு, 'உங்களுக்கு என்ன வேண்டும்?' என்று கேட்கிறேன்'' என்றார். சகோ. ஜாக், நீங்கள் விளையாட்டாக கூறுகிறீர்கள் என்று நினைத்தேன். அது மிகவும் உண்மையென்று பிறகு கண்டு கொண்டேன். ஆம், ஐயா. என்னே, நமக்கு எப்படி மறந்துவிடுகிறது. நம்முடைய செயல்கள் அனைத்தையும் நாம் ஒழுங்காக செய்வோம். ஏனெனில் அவை ஒரு புத்தகத்தில் எழுதி வைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு நியாயத்தீர்ப்பின் நாளில் போட்டு காண்பிக்கப்படும். 13நாம் ஒரு பெரிய குடும்பம். நேற்றிரவு நான் பிரசங்கித்த போது இணைக்கப்பட்டிருந்தது போல் இன்றிரவு நாம் தொலைபேசியின் வழியாக நாடு முழுவதும் இணைக்கப்பட்டிருக்கவில்லை என்று எண்ணுகிறேன். இது உள்ளூர் சபைக்கு மாத்திரமே என்று நினைக்கிறேன். நேற்றிரவு நீங்கள் காண்பித்த அன்புள்ள உபசாரத்தை நான் நிச்சயம் பாராட்டுகிறேன்... நான் முயல்வதில்லை... சகோ. ஜாக் என்னிடம், “உங்களுக்கு விருப்பமானதை பேசுங்கள்” என்று கூறியுள்ளார். அதன் காரணமாக நான் இளக்காரம்———— எடுத்துக் கொள்ள முயல்வதில்லை. ஆனால் நான்... மேடைக்கு வரும்போது சிறு சிறு உபதேசங்களை பிரசங்கிக்கிறேன். ஆனால்... அதுவெறும்... நான் நினைக்கிறேன்... என் ஸ்தாபன சகோதரரில் சிலர். 14அன்றொரு காலை எனக்கு சொப்பனம் உண்டானது. நான் அடிக்கடி சொப்பனம் காண்பதில்லை, நான் சொப்பனக்காரன் அல்ல. அந்த சொப்பனத்தில் ஒரு இளைஞனைக் கண்டேன். அவனுக்கு விலங்கு பூட்டப்பட்டிருந்தது. அவன் அதிலிருந்து தப்ப முயன்று கொண்டிருந்தான். நான் சொன்னேன்... யாரோ அவனிடம், “அவர்கள் மோசமான ஜனங்கள். அவர்களிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்”, என்று கூறினார்களாம். இந்த இளைஞன் பூட்டியிருந்த விலங்கை கழற்றுவதைக் கண்டேன். அவனை நான் தனியே விட்டு விட்டு, “என்ன தான் செய்கிறான் பார்க்கலாம்,” என்று எண்ணினேன். அவன் விலங்கை கழற்றினான். அவன் நல்லவன். மற்றவர்களும் தங்களுக்குப் பூட்டியிருந்த விலங்குகளை கழற்ற முயல்வதைக் கண்டேன். 15இது ஒரு சொப்பனம். நான் இந்த பக்கம் நடந்து சென்றபோது, என் அருமை நண்பர் சகோ. ராய் பார்டர்ஸை கண்டேன். அவர் கலிபோர்னியாவில் வசிக்கிறார். அவருக்கு ஏதோ கோளாறு உள்ளது போல் தோன்றிற்று. அவருடைய கண் இமைகள் பாதி மூடப்பட்டிருந்தன. ஒரு பெரிய... புற்று நோய் போன்ற ஏதோ ஒன்று அவருடைய கண்களின் மேல் காணப்பட்டது. நான்... யாரோ ஒருவர் என்னை அவரிடமிருந்து இழுத்து கொண்டு போகப் பார்த்தார். நான், “சகோ. பார்டர்ஸ்! கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அது உங்களை விட்டுப் போவதாக,” என்று கூச்சலிட்டேன். அவரால் பேசவும் முடியவில்லை. அவர், ''சகோ. பிரான்ஹாம், அதைக் காட்டிலும் அதிகம் இதற்கு தேவை. என்னால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை, சகோ. பிரான்ஹாமே. என்னால் கிரகித்துக்கொள்ள முடியவில்லை“ என்றார். நான், “ஓ, சகோ. பார்டர்ஸ்” என்றேன். அவரை நான் நேசிக்கிறேன். 16யாரோ ஒருவர் என்னை அங்கிருந்து இழுத்துக் கொண்டு போனார். நான் பார்த்த போது, ஒரு ஸ்திரீ நின்றுக் கொண்டிருந்தாள். அங்கு... நான் சிறுவனாயிருந்த போது, அங்காடியிலிருந்து சரக்குகளை வண்டியில் தள்ளிக் கொண்டு போய் ஜனங்களுக்க கொடுப்பது வழக்கம். அவளுடைய பெயர் திருமதி. ஃபென்டன். அவள் ஜெபர்ஸன்வில்லில் வசிக்கிறாள். அவள் எனக்கும் மனைவிக்கும் சிநேகிதி. அவள், ''சகோ. பிரான்ஹாமே, எங்களை இதிலிருந்து விடுவியுங்கள். இது நரக வீடு. நீங்கள் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டிருக்கிறீர்கள். இந்த... நீங்களும் இந்த ஜனங்களைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இவர்கள் மிகவும் அருமையானவர்கள். ஆனால்...'' என்றாள். நான் பார்த்த போது ஒரு பெரிய அடித்தள அறை (Cellar)... இல்லை, கீழே ஒரு பெரிய குகையைக் கண்டேன். அதைச் சுற்றிலும் பெரிய சுவர்கள் எழுப்பப்பட்டிருந்தன. அதற்கு எட்டு அல்லது பத்து அங்குலம் கனமுள்ள இரும்புக் கம்பிகள் போடப்பட்டிருந்தன. உள்ளே இருந்த ஜனங்களின் கைகளும் கால்களும் முறுக்கப்பட்டு, அவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள் போல் தங்கள் தலைகளை இப்படி அடித்துக் கொண்டிருந்தனர். இந்த ஸ்திரீ, “சகோ. பிரான்ஹாமே, இந்த ஜனங்களை விடுவியுங்கள். எங்களுக்குதவி செய்யுங்கள். நாங்கள் தொல்லையில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றாள். அவளும் கூட. அவளை எனக்கு நன்றாக தெரியும். அவள்... கிறிஸ்து சபையையோ அல்லது ப்ரெதரன் சபையையோ சேர்ந்தவள் என்று நினைக்கிறேன். எனவே அவள்... 17நான் சுற்று முற்றும் பார்த்தேன். “என்னால் முடிந்தால் நலமாயிருக்கும்” என்றேன். நான் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டேயிருந்தேன்... நான் பெலவீனமுள்ளவன் அவைகளோ கனமான இரும்புக் கம்பிகள். அதற்குள் இந்த ஜனங்கள் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அருகில் செல்ல முடியாது. ஏனெனில் இரும்புக் கம்பிகள் நெருக்கமாக போடப்பட்டிருந்தன. நான் பார்த்த போது, அவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள் போல் தலையை இப்படி அடித்துக் கொண்டிருந்தனர். அங்கு சில விளக்குகள் மினுக்கு மினுக்கு என்று எரிந்துக் கொண்டிருக்கக் கண்டேன். நான் மேலே நோக்கின போது, கர்த்தராகிய இயேசு வானவில் வர்ண ஒளியுடன் அங்கு நின்றுக் கொண்டிருந்தார். அவர் என்னை உற்றுப் பார்த்து, “இந்த ஜனங்களை விடுவி” என்று சொல்லி விட்டு போய்விட்டார். “இவர்களை நான் எப்படி விடுவிப்பேன்? இந்த இரும்புக் கம்பிகளை உடைப்பதற்கு எனக்குப் போதிய பலம் கிடையாதே” என்று எண்ணினேன். எனவே நான், ''நரக வீடே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உடைந்து போ“ என்றேன். அப்பொழுது அது உடைந்து விழுந்தது. பாறைகள் உருண்டன, கம்பிகள் விழுந்தன. “நாங்கள் விடுதலையானோம்'' என்று உரக்க சத்தமிட்டுக் கொண்டு ஜனங்கள் வெளியே ஓடி வந்தனர். அவர்கள் எல்லோரும் விடுவிக்கப்பட்டனர். 18நான் அப்பொழுது, “சகோ. ராய் பார்டர்ஸ், எங்கேயிருக்கிறீர்கள்? எங்கேயிருக்கிறீர்கள்? தேவன் தமது ஜனங்களை விடுவித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் எங்கே? என்று உரக்க சத்தமிட்டேன். அதைக் குறித்து நான் வியந்ததுண்டு. உங்களுக்குத் தெரியுமா? சகோ. பார்டர்ஸுக்கு அதிக பயம். உங்களுக்கு அந்த தீர்க்கதரிசனம் தெரியும். மேற்கு கரையைக் குறித்த தீர்க்கதரிசனம் உங்கள் பலருக்கு தெரியும். நீங்கள் ஒலிநாடாக்களில் அதைக் கேட்கலாம். 19அது நிகழ்ந்த போது அங்கிருந்த ஒருவர் இன்றிரவு இங்கிருக்கிறார் (வேட்டை பயணத்தின் போது, நான் அங்கு நின்று கொண்டிருந்த போது), நேற்றிரவு செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு போதகர். அவருக்கு ஒரு கண்ணில் பார்வையில்லை. அவர் அங்கு வந்து சொன்னார். அவர் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் கறுப்பு நிறக் கண்ணாடி அணிந்திருந்தார் மலையின் மேல். அவர், ''சகோ. பிரான்ஹாம், என் பெயர் சகோ. மக்ஹ்யூஸ். ஒரு முறை கலிபோர்னியாவில் உங்கள் கூட்டத்தை நான் ஒழுங்கு செய்தேன்“ என்றார். நான், “சகோ. மக்ஹ்யூஸ், உங்களை அறிவதில் எனக்கு மகிழ்ச்சி” என்றேன். 20அங்கு ஏறக்குறைய இருபது பேர் நின்றுக் கொண்டிருந்தனர். நாங்கள் 'ஜாவலினா' பன்றி வேட்டைக்கு சென்றிருந்தோம். மலைக்கு போவதற்கு முந்தின நாள் நான் சகோ. பாங்க்ஸ் உட்டிடம் சொன்னேன்... உங்கள் எல்லோருக்கும் அவரைத் தெரியும். அவர் என் நண்பர். நான், ''சகோ. உட்...'' என்று அவரைக் கூப்பிட்டு, ஒரு கல்லை எடுத்து மேலே எறிந்தேன். அது கீழே வந்தது. நான் அவரிடம், “கர்த்தர் உரைக்கிறதாவது, ஏதோ ஒன்று நடக்கவிருக்கிறது” என்றேன். அவர், ''அது என்ன, சகோ. பிரான்ஹாம்?“ என்று கேட்டார். நான், “எனக்குத் தெரியாது. ஆனால் இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் ஏதோ ஒன்று நடக்கவிருக்கிறது. அது ஒரு பெரிய அடையாளம்” என்றேன். 21அடுத்த நாள்... அது ஒரு பிற்பகலின் போது, அடுத்த நாள்... ஏறக்குறைய பத்து மணிக்கு நாங்கள் புறப்படத் தயாரானோம். எல்லோருக்கும் தங்கள் தங்கள் ஜாவலினா பன்றிகள் கிடைத்துவிட்டன. நாங்கள் அங்கு நின்றுக் கொண்டிருந்தோம். சகோ. மக்நெல்லியும் இன்னும் மற்றவர்களும் பன்றிகளை வெட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தனர் நானும் சகோ. பார்டர்ஸும்; சகோ. ராய் ராபர்ஸன், போரில் ஊனமுற்ற போர் வீரர், எனக்கு மிகவும் அருமையான, விலையேறப் பெற்ற நண்பர் அங்கு நின்று கொண்டிருந்தார். நான் மேலே நோக்கினேன். சகோ. மக்ஹ்யூஸ் என்னிடம், 'சகோ. பிரான்ஹாமே, உங்கள் வேட்டை பயணத்தின் போது, கர்த்தருடைய தூதன் எப்பொழுதாவது உங்களுக்குத் தோன்றியிருக்கிறாரா?“ என்று கேட்டார். நான், ''ஆம், சகோ. மக்ஹ்யூஸ். அது உண்மை. ஆனால் நான் இளைப்பாறவே இங்கு வருகிறேன்“ என்றேன். அவர், ''சரி, சகோ. பிரான்ஹாம். உங்களைத் தொந்தரவு செய்ய நான் நினைக்கவில்லை“ என்றார். நான், ''நீங்கள் என்னைத் தொந்தரவு செய்யவில்லை'' என்றேன். 22நான் சுற்றிலும் பார்த்த போது, ஒரு மருத்துவர் அவருடைய கண்ணைப் பரிசோதிப்பதைக் கண்டேன். அவரை நான் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தார். அரிசோனாவில் சூரிய வெளிச்சம் மிகவும் பிரகாசமாக இருக்கும். நான் பார்த்த போது ஒரு மருத்துவர் அவரிடம், “ஐயா, நான் பல ஆண்டுகளாக, இரண்டு ஆண்டுகளாக அந்த கண்ணுக்கு சிகிச்சை அளித்து வருகிறேன். உங்கள் கண்ணிலுள்ள ''அலர்ஜி காரணமாக, உங்கள் கண் பார்வையை நீங்கள் இழந்துவிடுவீர்கள். அது உங்கள் பார்வையை அரித்துக் கொண்டே போகின்றது. அதை நிறுத்த ஒரு வழியும் இல்லை'' என்றார். நான் சகோ. மக்ஹ்யூஸிடம், “நீங்கள் ஏன் அப்படி என்னைக் கேட்டீர்கள் என்றால், உங்கள் கண்ணின் காரணமாகத் தான். அந்த கறுப்பு கண்ணாடியை நீங்கள் அணிந்திருப்பது உங்களுக்கு மோசமான கண் இருப்பதினாலே” என்றேன். அவர், ''அது உண்மை“ என்றார். நான், ''உங்கள் மருத்துவர் (அவரை நான் வர்ணித்தேன்). சில நாட்களுக்கு முன்பு உங்களிடம், அலர்ஜி உங்கள் பார்வையை அரித்துக் கொண்டிருப்பதனால், உங்கள் கண் பார்வையை நீங்கள் இழந்து விடுவீர்கள் என்று சொன்னார். அவர் இரண்டு ஆண்டுகளாக உங்களுக்கு சிகிச்சை அளித்து வந்தும், அவரால் அதை நிறுத்த முடியவில்லை“ என்றேன். அவர், “சகோ. பிரான்ஹாமே, அது உண்மை” என்றார். 23நான் திரும்பிப் பார்த்த போது, அவரைக் காட்டிலும் வயதான ஒரு ஸ்திரீ, சிறிது கறுப்பு நிறமுடையவர்கள். அவர்கள் ஆர்கன்ஸ்சாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பாவாடையை தூக்கி தன் மகனிடம் காலைக் காண்பித்து, “என் பாதங்களுக்காக ஜெபிக்கும்படி அவரிடம் சொல்'' என்று கூறுவதைக் கண்டேன். அவர்களுக்கு கால் விரல்களின் இடையில் நீண்ட கட்டி தொங்கிக் கொண்டிருந்தது. நான் அவரிடம், “உங்கள் தாய் தலை நரைத்தவர்கள். அவர்கள் பாவாடையைத் தூக்கி, காலுறையை அவிழ்த்து பாதங்களை உங்களிடம் காண்பித்து, நீங்கள் என்னைக் கண்டால் அவர்களுக்காக ஜெபிக்கும்படி என்னிடம் கூற வேண்டுமென்று சொன்னார்கள்” என்றேன். அவர், “ஓ, கிருபை” என்றார். நான் திரும்பிப் பார்த்த போது, தரிசனத்தில் அவர் கறுப்பு கண்ணாடி போடாமல் நின்றுக் கொண்ருப்பதைக் கண்டேன். நான், “கர்த்தர் உரைக்கிறதாவது, தேவன் உங்களையும் உங்கள் தாயையும் சுகமாக்கினார்” என்றேன். 24அந்த நேரத்தில், நான் திரும்பிப் பார்த்தேன். இப்பொழுது இங்கு உட்கார்ந்திருக்கிற ஒருவர் அன்று அங்கு நின்றுக் கொண்டிருந்தார். நான் ராய் பார்டர்ஸிடம்... இல்லை ராய் ராபர்ஸ்ன் தோள்மேல் என் கையை போட்டு அவர் முன்னாள் போர் வீரன் சகோ. ராய், எங்காவது வேகமாக ஏதாவதின் கீழ் ஒளிந்து கொள்ளுங்கள். ஏதோ ஒன்று நடக்க விருக்கிறது“ என்றேன். அவர், ''சகோ. பிரான்ஹாமே, நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?“ என்றார். நான், “பேசாதீர்கள், போய் வேகமாக ஏதாவதின் கீழ் ஒளிந்து கொள்ளுங்கள்” என்றேன். நான் பக்கத்தில் இருந்த நீண்ட பிடி மண்வெட்டியை (shovel) கையிலெடுத்துக் கொண்டு, அவர்களை விட்டு நடந்து சென்றேன். ஏனெனில் நான் இருக்கும் இடத்தில் தான் அது சம்பவிக்கும் என்று அறிந்திருந்தேன். 25அதன் பக்கத்தில் ஒரு பெரியமலைக் கணவாய் இருந்தது. அது இந்த கட்டிடத்தைக் காட்டிலும் எட்டு அல்லது பத்து மடங்கு உயரமிருக்கும். அது, “பெட்டி” மலைக் கணவாய். வானத்திலிருந்து தீயைப் போல், சூழல் காற்றைப் போல் ஒன்று இறங்கி வந்து, நான் நின்றுக் கொண்டிருந்த இடத்துக்கு சில அடி உயரத்தில் மலையிலிருந்து கற்களைப் பெயர்த்து, ஊடுருவி நூறு கெஜம் வரைக்கும் சென்று, அங்கிருந்த மரங்களின் உச்சியை எரித்துப் போட்டது. எல்லோரும் ஓடி மோட்டார் வாகனங்களின் கீழ் ஒளிந்து கொண்டனர். அது மறுபடியும் மேலே சென்று, ஒரு பெரிய இடி முழக்கம் உண்டாக்கி, வானத்துக்குச் சென்று, மறுபடியும் கீழே வந்தது. இப்படியாக மூன்று முறை நடந்தது. இதெல்லாம் முடிந்த பின்பு, அவர்கள் என்னிடம் வந்து, “இதன் அர்த்தம் என்ன?” என்றனர். நான், ''உங்களிடம் இதை கூற விரும்புகிறேன். இது நியாயத்தீர்ப்பின் அடையாளம். இன்னும் சில நாட்களில், ஒரு பெரிய பூமியதிர்ச்சி மேற்கைத் தாக்கும். அது அத்துடன் நின்றுவிடாது. கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலிஸ் ஒரு நாள் தண்ணீரில் மூழ்கும். அது வழுக்கி தண்ணீருக்குள் போய்க் கொண்டேயிருக்கிறது“ என்றேன். இரண்டு நாட்கள் கழித்து, அலாஸ்கா பூமியதிர்ச்சி அலாஸ்காவை அசைத்தது. 26நான் கலிபோர்னியாவில் கடைசியாக நடத்தின கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கையில், நான் தெருவில் செல்லும் வரைக்கும் என்ன நடந்ததென்று எனக்கே தெரியவில்லை. அது கலிபோர்னியாவைக் குறித்து, “கப்பர்நகூமே, கப்பர்நகூமே, தூதர்களின் பெயரை வைத்துள்ள நகரமே (அது லாஸ் ஏஞ்சலிஸ்), உன்னை வானபரியந்தம் உயர்த்திக் கொண்டாய். நீ பாதாள பரியந்தம் தாழ்த்தப்படுவாய். உன்னில் செய்யப்பட்ட பலத்த கிரியைகள் சோதோமில் செய்யப்பட்டிருந்தால், அது இன்று வரைக்கும் நின்றிருக்கும்” என்றது. 27கடைசி சில நாட்களாக நடந்த மகத்தான முழக்கமும் குதித்தலும். அதன் பிறகு விஞ்ஞான சம்பந்தமான ஒரு பத்திரிகை வெளியாகி, ''அது தேன் கூடு போல் ஆகிவிட்டது. அது தண்ணீருக்குள் செல்ல வேண்டும்“ என்றது. அவர்கள் அதை அறிந்துள்ளனர். நீங்கள் கவனித்துக் கொண்டே வாருங்கள். தண்ணீர் சால்டன் கடலுக்குள் புகுந்து விடும். லாஸ் ஏஞ்சலிஸ் மேல் நியாயத்தீர்ப்பு விதிக்கப்பட்டுவிட்டது. அது நடப்பதற்கு முன்பே உங்களுக்கு அறிவிக்கிறேன். அது நடக்கும் போது நீங்கள் அறிந்துக் கொள்வீர்கள். இதை நானாக பேசவில்லை. அவர் இதுவரை கூறின ஒன்றும் நடக்காமல் போனதில்லை. அது உண்மை. அது எப்பொழுது நடக்கும்? எனக்குத் தெரியாது. 28நான் வெளியே சென்ற போது, நான் கூறினது என்னவென்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். நான் கவனித்து கேட்டு, திரும்பிச் சென்று, வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தேன். கப்பர் நகூமைக் குறித்து பேசும் போது இயேசு ஏறக்குறைய அதே வார்த்தைகளை உபயோகித்தார். சோதோமும் கொமோராவும் உப்புக் கடலின் கீழ் சென்றுவிட்டன. இயேசு கப்பர் நகூமைக் குறித்து உரைத்த போதே அவை உப்புக் கடலில் மூழ்கியிருந்தன என்று நினைக்கிறேன். அவர் உரைத்து ஏறக்குறைய நூறு ஆண்டுகள் கழித்து கப்பர்நகூம் தண்ணீருக்குள் வழுக்கி சென்றது. அது இப்பொழுது கடலுக்குள் உள்ளது. சோதோமின் பாவங்களுக்காக அதை தண்ணீருக்குள் முழுக்கின அதே தேவன். கப்பர் நகூமின் பாவங்களுக்காக அதை தண்ணீருக்குள் முழுக்கின அதே தேவன், லாஸ் ஏஞ்சலிஸின் பாவங்களுக்காக அந்த சீர்கேடான நகரத்தை தண்ணீருக்குள் முழுக்குவார். சகோ. ராய் பார்டர்ஸ் அதிகமாக பயந்திருக்கிறார். அந்த சொப்பனத்தின் அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நாம் ஜெபம் செய்வோம். 29கர்த்தாவே, உண்மையாக கேட்பவர்களிடத்தில் சாட்சி கூறுவது மிகவும் நன்றாயுள்ளது. கர்த்தாவே, உம்மை நாங்கள் விசுவாசிக்கிறோம். எங்கள் அவிசுவாசம் நீங்க உதவி செய்யும். நாங்கள் உலக முடிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை உணருகிறோம். எந்த நேரத்தில் அது முடிவடையும் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் இந்நாட்களில் ஒன்றில், கர்த்தாவே, மணவாட்டி இரகசியமாக எடுத்துக் கொள்ளப்படுவாள். நாங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு அவரோடு கூட இருப்போம். அந்த நாளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். கர்த்தாவே, எங்கள் இருதயங்களை ஆயத்தப்படுத்துவீராக. சத்துருவினால் கட்டப்பட்டு அநேகர் ஆண்களும் பெண்களும் கட்டில்களும் டோலிகளும் கிடப்பதைப் பாரும். இங்கு சிலர் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை நீர் தொட்டு சுகப்படுத்தாவிட்டால், மாரடைப்பினால் இறந்து போகக்கூடும். இன்னும் சிலர் ஒருக்கால் புற்று நோயால் அரிக்கப்பட்டிருக்கலாம். பிதாவே, நீர் ஒவ்வொரு மனிதனுடைய இருதயத்தையும் அறிந்திருக்கிறீர். அது உண்மையுள்ளதா உண்மையற்றதா என்று உமக்குத் தெரியும். இதை நாங்கள் கூறும் காரணம் என்னவெனில், நீர் செய்துள்ள மகத்தான கிரியைகளை நாங்கள் அறிந்திருக்கிறோம். உமது மகத்தான வல்லமை எத்தனையோ பேர்களை விடுவித்துள்ளது. இவை சாத்தியமில்லை, என்று பலர் கூறினாலும், அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். இவை நிச்சயம் நடக்கின்றன, கர்த்தாவே, நாங்கள் சாட்சிகள். 30கர்த்தாவே, இங்குள்ள ஜனங்களின் இருதயங்களில் நீர் விசுவாசத்தை அதிகரிக்கச் செய்து, வியாதியாயும் ஊனமாயும் உள்ள ஒவ்வொருவரும் இன்றிரவு விடுவிக்கப்பட வேண்டுமென்று ஜெபிக்கிறேன். கர்த்தாவே, நாங்கள் வார்த்தையை போதிக்கும் போது அது மிகவும் எளிமையாயிருப்பதாக. பரிசுத்த ஆவியானவர் தாமே என் தவறுகளை எடுத்து அதை ஜனங்களின் இருதயங்களில் திருத்தித் தருவாராக. இதை மிக, மிக நல்ல இரவாக அமைத்து தந்து... அவர் தாமே இங்குள்ள ஒவ்வொரு விசுவாசியின் இருதயத்திலும் குடிகொள்வாராக. அதற்காகவே இந்த இரவை நாங்கள் ஒதுக்கியிருக்கிறோம், கர்த்தாவே, எல்லாவற்றிற்கும் மேலாக, இரட்சிக்கப்படாதவர்கள் ஆயத்தமாவார்களாக. கிருபையின் வாசல்கள் திறந்திருக்கும் போதே அவர்கள் ஆயத்தமாவார்களாக. இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 31இப்பொழுது, நாம் முதலில் வேதாகமத்தை படிக்க போகின்றோம். யாரோ ஒருவர் இன்றிரவு எனக்காக காணிக்கை எடுத்ததாக மேசையின் மேல் குறிப்பு எழுதி வைத்திருக்கிறார். அது அவசியமில்லை. அப்படி செய்யாதீர்கள். அதை நான் எடுத்துக் கொண்டு செல்ல முடியாது. எனக்கு ஞாபகமுள்ளது, ஒரு முறை கனடாவிலுள்ள கால்கரியில் அவர்கள். அங்கு காணிக்கை எடுக்கப்பட்டது. சகோ. ஜாக் என்னிடம் கூற முயன்றார். பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் என் மனைவி. நாங்கள் இரண்டு பழைய அறைகளில் வசித்துக் கொண்டிருந்தோம். பிள்ளைகளுக்கு நிமோனியா பிடிக்காதபடிக்கு, என் மனைவி வாசலை அடைப்பதற்காக கம்பளியை போட்டு மூடுவாள். அவள் சொன்னாள்... சகோ. ஜாக் என்னிடம், “சகோ. பிரான்ஹாமே, உங்கள் மனைவியை அப்படி நடத்துவது நியாயமல்ல” என்றார். உங்களுக்கு அது ஞாபகமிருக்கும். அவர்கள் காணிக்கை எடுத்தனர். அது எத்தனை ஆயிரம் டாலர்கள் என்று எனக்கு ஞாபகமில்லை. நான், “ஓ, சகோ. ஜாக், அதை எடுத்து சென்றுவிடுங்கள்” என்றேன். அவர், “நாங்கள் எப்படி அதை செய்ய முடியும்?” என்றார். எனவே நாங்கள் இடத்தை வாங்கினோம். அது தேவனுடைய மகிமைக்கும் கனத்துக்கும் அங்குள்ளது. அதை நானும் என் மனைவியும், சபை எங்களுக்கு அளித்த வெகுமதியாக சில ஆண்டுகள் வைத்துக் கொண்டிருந்தோம். அதன் பிறகு நான், “அது சரியாக தோன்றில்லை. நான் இவ்வுலகில் கொண்டு வந்ததும் ஒன்றுமில்லை, இங்கிருந்து கொண்டு போவதும் ஒன்றுமில்லை என்பது நிச்சயம்” என்று நினைத்து, அதை கூடாரத்தின் பெயரிலேயே எழுதி வைத்துவிட்டேன். என் காலம் முடிந்த பிறகு, நாளை என்று ஒன்று இருக்குமானால், வேறொரு ஊழியக்காரன் அதை உபயோகிக்கலாம். பாருங்கள்? எனவே நண்பர்களே, உங்களுக்கு என் தயவுள்ள நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேவன் உங்களை அதற்காக ஆசீர்வதிப்பாராக. 32இப்பொழுது யாக்கோபு எழுதின நிரூபம் 2-ம் அதிகாரம். நாம் 21-ம் வசனத்திலிருந்து படிப்போம். இப்பொழுது, நான்... சிறிது நேரம் போதித்து விட்டு, நம்மால் கூடுமானவரை வேகமாக வியாதியஸ்தருக்கு ஜெபித்து, முடிந்த அளவுக்கு ஜனங்களை ஜெப வரிசையில் வரும்படி செய்வோம். நாம் இதையும் ஞாபகம் கொள்வோம்... எனக்கு சகோதரி அன்னாள் ஜீன், சகோ. டான் இவர்களை மறக்க பிரியமில்லை. அவர்கள் தாய்லாந்தில் எங்கோ உள்ளனர். இல்லையா? எங்கே? பாங்காக்கில் சுவிசேஷ ஊழியத்தில். ஜனங்களிடம் சொல்ல வேண்டுமென்று பகல் நேரத்தில் எவ்வளவோ காரியங்களை நினைக்கிறேன். ஆனால் இங்கு வரும்போது, அவையெல்லாம் மறந்து போய், பாடம் மாத்திரம் ஞாபகமுள்ளது. 33இப்பொழுது யாக்கோபு 2-ம் அதிகாரம். நாம் அதிலிருந்து ஒரு பாகத்தை 21-ம் வசனம் தொடங்கி வாசிக்கப் போகின்றோம். 2-ம் அதிகாரம் 21-ம் வசனம். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின் மேல் செலுத்தின போது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? விசுவாசம் அவனுடைய கிரியைகளோடே கூட முயற்சி செய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே. அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று, அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான். யாக்கோபு 2:21-23. 34இன்றிரவு என்னுடைய பொருள்... உங்கள் வேதாகமங்களை கைகளில் பிடித்திருங்கள். ஏனெனில் இங்கு அநேக வேத வாக்கியங்களை எழுதி வைத்திருக்கிறேன். நமக்கு நேரம் இருக்குமானால், அநேக வேத வாக்கியங்களை குறிப்பிட விரும்புகிறேன். என் பொருள்: விசுவாசத்தை வெளிப்படுத்துவது கிரியைகள். விசுவாசம் ஏற்கனவே இறுகப் பற்றிக் கொண்டது என்பதை கிரியைகள் காண்பிக்கின்றன. பாருங்கள்? இதை நாம் தெரிந்து கொண்ட காரணம். இது நாம் புரிந்து கொள்ள உதவியாயிருக்கும் என்று நம்புகிறேன். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இதை நாம் ஞாயிறு பள்ளி பாடமாக பார்க்கலாம். மனிதன் ஆபிரகாமில் என்ன கண்டான் என்பதை யாக்கோபு ஆதியாகமம் 22:1-9-லிருந்து போதிக்கின்றான். 35அந்த வேதபாகத்துக்கு நாம் சென்று படிப்போம். அதை இங்கு குறித்து வைத்திருக்கிறேன். ஆதியாகமம் 22-ம் அதிகாரம், முதல் 9 வசனங்கள்: இந்த காரியங்கள் நடந்த பின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார், எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார், அவன்: இதோ அடியேன் என்றான். அப்பொழுது அவர் உன் புத்திரனும் உன் சுதனும் உன் நேச குமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின் மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். (பாருங்கள், அது எந்த மலை என்றும் கூட அவனிடம் கூறவில்லை. தேவன் பேசும்போது, நீங்கள் போய்க் கொண்டேயிருக்க வேண்டும். பாருங்கள்?) ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின் மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டு பேரையும் என் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக் கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்து கொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப் போனான். மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான். அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுது கொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான். 36தேவன் அவனுக்குக் கட்டளையிட்டதால், அவன் தன் மகனை பலியிட போய்க் கொண்டிருக்கிறான். அது தான் அவன் மனதில் இருந்தது. ஆனால் இங்குள்ள வேத வசனத்தைப் பாருங்கள்: ...நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுது கொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் (அவனும் பிள்ளையாண்டானும்) ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின் மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக் கொண்டான், இருவரும் கூடிப்போனார்கள். அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான். அதற்கு அவன்: என் மகனே, இதோ இருக்கிறேன் என்றான், அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான். அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக் கொள்வார் என்றான், அப்புறம் இருவரும் கூடிப்போய், தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள், அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்த பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின் மேல் அவனைக் கிடத்தினான். பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும் படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார், அவன்: இதோ அடியேன் என்றான். அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான் மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே, நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏக சுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக் கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். (என்னே ஒரு கிரியை). ஆதி. 22: 1-12. ஆபிரகாம் அவனுடைய கிரியைகளினால் நீதிமானாக்கப்பட்டதாக யாக்கோபு கூறுவதை நாம் காண்கிறோம். 37பவுல் ரோமருக்கு எழுதின நிரூபம் 8-ம்... 4-ம் அதிகாரம், 4:1 முதல் 8 வசனங்கள். அதை முழுவதும் நான் படிக்கப் போவதில்லை, ஒரு பாகத்தை மாத்திரமே படிக்கிறேன். அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்? ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் (உங்களுக்கு ஞாபகமுள்ளதா, நேற்றிரவு நாம் நீதிமானாக்கப்படுதல் என்னும் சொல்லை விளக்கினோம்). மேன்மை பாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு. ஆகிலும் தேவனுக்கு முன்பாக மேன்மை பாராட்ட ஏதுவில்லை. வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது?ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது. கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும். ரோமர் 4:1-4. தேவன் ஆபிரகாமில் என்ன கண்டார் என்பதை பவுல் இங்கு குறிப்பிடுகிறான். 38இப்பொழுது நாம்... நீங்கள்... நாம் வேதாகமத்தை அதிகமாக திருப்பிக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்காமல் இருந்தால், நாம் மறுபடியும் ஆதியாகமம் 15-ம் அதிகாரத்துக்கு சென்று, 6-ம் வசனத்தைப் படிப்போம்; 15:6. அது தான் என்று நினைக்கிறேன். நாம் 5-ம் வசனத்திலிருந்து தொடங்குவோம்: அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார். அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். ஆதி. 15: 5-6. 39இவ்விருவரும் விசுவாசத்தைக் குறித்தே பேசுகின்றனர். தேவன் ஆபிரகாமில் என்ன கண்டார் என்பதன் அடிப்படையில் பவுல் அவனை நீதிமானாக்கப்பட்டவனாகக் கருதுகிறான். ஆனால் யாக்கோபு மனிதன் ஆபிரகாமில் என்ன கண்டான் என்பதன் அடிப்படையில் அவனை நீதிமானாக்கப்பட்டவனாகக் கருதுகிறான். பாருங்கள், யாக்கோபு, “அவன் கிரியைகளினால் நீதிமானாக்கப்பட்டான்” என்கிறான். பவுலோ, “அவன் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டான்” என்கிறான். பாருங்கள், ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். அதை தான் தேவன் அவனில் கண்டார். அவன் அதை விசுவாசித்தான். ஆனால் அது ஏற்கனவே நிறைவேறிவிட்டது போல அவன் நடந்து கொண்டபோது, அதை தான் மனிதன் அவனில் கண்டான். இன்று நமக்கும் அவ்வாறேயுள்ளது. நமது கிரியைகள் நமக்குள்ள விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றதாயுள்ளது. நாம் எதை விசுவாசிக்கிறோமோ, அதன் பேரில் செயல்பட அஞ்சினால், நாம் விசுவாசிக்கவில்லை என்று அர்த்தமாகிறது. பாருங்கள், நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். 40ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மேல் கொண்டிருந்த விசுவாசத்தை அவனுடைய கிரியைகள் வெளிப்படுத்தினது. ஞாபகம் கொள்ளுங்கள், ஆபிரகாமுக்கு தொண்ணூறு வயது... நூறு வயது, சாராளுக்கு தொண்ணூறு வயது. அவர்கள் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தனர். பிள்ளை பெறும் பருவத்தைக் கடந்து பல, பல ஆண்டுகளாயின. அவர்களுடைய வாலிப பருவம் முதற்கொண்டே அவர்கள் கணவனும் மனைவியுமாக வாழ்ந்தும், அவர்களுக்கு பிள்ளை இல்லாதிருந்தது. அப்படியிருந்தும், ஆபிரகாமுக்கு எழுபத்தைந்து வயதும், சாராளுக்கு அறுபத்தைந்து வயதுமான போது, தேவன், “உனக்கு குழந்தை பிறக்கும்'' என்றார். அவன் தேவனுடைய வாக்குத்தத்தத்தை விசுவாசித்தான். பாருங்கள், அந்த குழந்தைக்காக அவன் எல்லாவற்றையும் ஆயத்தம் செய்தான். பாருங்கள், அவன் தேவனை விசுவாசித்த போது, அந்த விசுவாசத்தை தான் தேவன் கண்டார். ஆனால் மனிதன் அவனுடைய விசுவாசத்தை வெளிப்படையாக்கின கிரியைகளைக் கண்டான். (இன்றிரவும் அப்படித்தான் அது கிரியை செய்ய வேண்டும்). நமக்கும் அது அவ்வாறேயுள்ளது. அது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. பாருங்கள், அது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. எனவே அவன் அதை விசுவாசித்து, அது ஏற்கனவே நிறைவேறிவிட்டது போல் செயல்பட்டான். இங்கு ஒரு நிமிடம் நிறுத்திக் கொள்வோம். சில சமயங்களில் ஜனங்கள் அதை சரியாக புரிந்து கொள்வதில்லை. அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு, உணர்ச்சியின் பேரில் செயல்பட முயல்கின்றனர். அது ஒருக்காலும் கிரியை செய்யாது. 41இங்குள்ள சகோ. கெர்ஹோல்ட்சரைப் போல் நானும் இருக்கிறேன். நாங்கள் வயதானவர்கள். நாங்கள்... நீண்ட காலமாக இதில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் உள்ள அனைத்தையும் நாங்கள் கண்டிருக்கிறோம். நான் உலகம் பூராவும் வியாதியஸ்தருக்கு ஜெபித்திருக்கிறேன். ஜனங்களுடைய ஏமாற்றத்தையும், அதே சமயத்தில் அவர்கள் போடும் “அல்லேலூயாக்களையும்” நான் கண்டும் கேட்டுமிருக்கிறேன். இவைகளின் மூலம் நாங்கள் அநேக காரியங்களை கற்றிருக்கிறோம். நானும் சகோ. கெர்ஹோல்ட்சரும் எங்கள் வாலிப வயதில் இதை பிரசங்கிக்கத் தொடங்கின் போது, அது நாங்கள் நீச்சலடிக்க கற்றுக் கொள்ளத் தொடங்கினது போல், முதலாவதாக என்ன தெரியுமா? நான் வெளியே சென்று... சகோ. ஜாக், என் சுய நினைவுக்கு நான் வரும் வரைக்கும் ஒவ்வொரு இரவும் சகோ. ப்ரவுன் என்னை தெருவில் நடத்திச் செல்வார். நான் அங்கு நின்று கொண்டு, ஒரு சிறுவன் நீச்சல் குளத்தில் கையினால் தண்ணீரை அடித்து அதை தெறிக்க வைப்பது போல், தரிசனங்களைக் கண்டு கொண்டிருப்பேன். சகோ. ப்ரவுன் என்னை கூட்டிச் செல்லும் வரைக்கும் நான் அங்கேயே இருப்பேன்... 42எனக்கு ஞாபகம் வருகிறது, ஒரு இரவு, அதை என்னால் மறக்கவே முடியாது. சான் ஜோஸ் அல்லது வேறு ஏதோ ஓரிடத்தில் சகோ. ப்ரவுன் வந்து என்னை எழுப்பினார். அநேக நாட்களாக நான் உறங்கவேயில்லை. அந்த மனிதரிடம் நான் பேசிக் கொண்டிருப்பதை நான் அறியவேயில்லை. நான் அவரிடம் அழுது கொண்டே, “நான் வீட்டுக்குப் போகிறேன்'' என்று சொன்னதாக சகோ. ப்ரவுன் கூறினார். பாருங்கள்? அவரோ, “உன்னால் வீட்டுக்கு இப்பொழுது போக முடியாது” என்றார். அங்கு ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. நான் “இன்னும் சில நிமிடங்களில் நான் வீட்டுக்குப் போக ஆயத்தமாகிவிடுவேன்” என்றேன். பாருங்கள்? ஏறக்குறைய என் சுய நினைவை இழந்த நிலை. பாருங்கள், அப்பொழுது நான் ஒரு வாலிபன். 43அது நீச்சலடிக்க கற்றுக் கொள்வது போல். நீங்கள் கைகளினால் தண்ணீரை தெறித்து, நீச்சல் குளத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரைக்கும் நீந்தி, “ஹ, ஹ, ஹ, நான் மறுபக்கத்தை அடைந்துவிட்டேன்'' என்று மூச்சு வாங்க வாங்க உங்கள் சாதனையை கூறுதல். ஆனால் நீங்கள் நன்றாக நீந்த கற்றுக் கொண்ட பிறகு, மிகவும் அழகாக கைகளினால் தண்ணீரை தள்ளி நீந்துகிறீர்கள். உங்களுக்கு களைப்பு ஏற்படுவதில்லை. பாருங்கள், எப்படி நீந்துவது என்று எல்லாவற்றையும் மேற்கொண்டு, படிப்படியாக கற்றுக் கொள்கிறீர்கள். அது எளிதாகிவிடுகிறது. பாருங்கள்? இதற்கு முன்பு நடக்காத ஒரு சிறு பையன் இந்த உட்பாதையில் தத்தி தத்தி நடந்து வரும்போது, பலமுறை கீழே விழுந்து, இங்கு அடைவதற்கு முன்பு களைப்பாகிவிடுவான். ஆனால் நன்றாக நடக்கத் தெரிந்த எவரும், மிக எளிதில் நடந்து இங்கு அடைந்துவிடுவார்கள். அவர்கள் நடந்து வந்ததை கூட கவனிக்கமாட்டார்கள். ஆனால் அவர்கள் முதலில் நடக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதைதான் அந்த சிறுவன் செய்கிறான். 44தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பிரசங்கிக்கும் விஷயத்திலும் அப்படித்தான் வேறெந்த விஷயத்திலும் கூட. நீங்கள் போகப் போகக் கற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் கற்றுக் கொள்ளாவிட்டால், ஏதோ தவறுள்ளது. பாருங்கள், தேவனை ஏற்றுக் கொள்வது எப்படியென்றும் அதன் முக்கியத்துவம் என்னவென்றும் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் நாம், “இந்த ஆளுக்கு போதிய விசுவாசம் இருக்கவில்லை, இந்த ஆள் இதை அதை செய்யவில்லை'' என்கிறோம். அதற்கு ஒரு காரணம் உண்டு. ஒரு காரணம் உண்டு. அது அறிக்கை செய்யப்படாத பாவம். நீங்கள் அவர் மேல் ஒரு காலன் எண்ணெய் ஊற்றி, தொண்டை கரகரப்பாகும் வரைக்கும் கூச்சலிட்டாலும், அது அந்த பிசாசை அசைக்காது. இல்லை ஐயா! நீங்கள் அதை அறிக்கை செய்தாக வேண்டும். சிந்தனைகளைப் பகுத்தறிதல் அதை தான் செய்கிறது. அது, ”நீ போய் அதை சரிபடுத்து, அதை அறிக்கையிடு“ என்கிறது. பகுத்தறிதலுக்கு அதிக நேரம் எடுக்கின்றது, பாருங்கள். மற்றவர்கள் பொறுமையிழந்து விடுகின்றனர். அவர்கள், “ஆ, எனக்கு ஜெபம் செய்யவில்லை” என்கின்றனர். ஆனால் நாம் ஒரு வழியை கண்டுபிடிக்க விரும்புகிறோம்... என்ன நடக்கிறதென்று. தெய்வீக சுகமளித்தலின் உண்மையான அடிப்படை. 45நேற்றிரவு நான் கூறினது போல், வரம் நல்லது, ஆனால் உங்கள் நித்தியத்துக்கு நீங்கள் அதை அடிப்படையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சிறியதைக் கொண்டு நீங்கள் பெரியதை பெற முடியாது. வரம் என்பது சிறியது. தேவனுடைய எந்த வரத்தையும் சாத்தான் பாவனை செய்ய முடியும். அதைப் போல் அப்படியே ஒன்றை அவன் செய்ய முடியும். பாருங்கள், முற்றிலுமாக. எனவே நாம் கவனமாயிருக்க வேண்டும். கூச்சலிடுவதைக் குறித்து சில சமயங்களில் நான் கூறினது போல, பிசாசுகள் கூச்சலிடுவதை நான் கண்டிருக்கிறேன், பாருங்கள். பிசாசுகள் அந்நிய பாஷைகள் பேசுவதை நான் கண்டிருக்கிறேன். நிச்சயமாக, அவன் பாவனை செய்கிறான். அது நிஜமல்ல. அவன் பாவனை செய்து, பாருங்கள், அது உண்மை போல் காணும்படி செய்கிறான். இவையிரண்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள், உண்மை இல்லாத ஒன்றை உண்மையென பிரகடனம் செய்கின்றனர். தெய்வீக சுகமளித்தலைக் குறித்தும் அவர்கள் அப்படியே செய்கின்றனர். அவர்கள், “இது வஞ்சகமானது, அப்படி ஏதோ ஒன்று” என்று எண்ணுகின்றனர். இது அப்படியல்ல. இது தேவன் உரைத்த சத்தியத்தின் பேரிலுள்ள உண்மையான, கலப்பில்லாத விசுவாசம். அது நங்கூரமிடுகின்றது. அது நங்கூரமிடும் போது, அதை எதுவுமே அசைக்க முடியாது. அது அங்கேயே நிலைத்திருக்கும். எனவே இவைகளையெல்லாம் மேற்கொள்ளுதல். 46விசுவாசம் என்பது தேவனிடத்திலிருந்து கிடைக்கப் பெறும் வெளிப்பாடு. 'விசுவாசம்' என்பது வெளிப்பாடு. அதைக் குறித்து சிறிது நேரம் பேச விரும்புகிறேன். அது வெளிப்பாடு, அவர் தமது கிருபையினால் அதை உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்கென்று நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை. நீங்கள் உங்கள் சுய முயற்சியினால் விசுவாசத்தை பெற்றுக் கொள்ளவில்லை. நீங்கள் விசுவாசத்தைப் பெற்றிருக்கவில்லை, தேவனுடைய கிருபையால் அது உங்களுக்கு அளிக்கப்பட்டது. தேவன் அதை உங்களுக்கு வெளிப்படுத்துகிறார். எனவே விசுவாசம் என்பது வெளிப்பாடாகும். தேவனுடைய சபை முழுவதுமே வெளிப்பாட்டின் மேல் கட்டப்பட்டுள்ளது! 47அண்மையில் ஒரு பாப்டிஸ்டு போதகர் என்னிடம், “நான் வெளிப்பாடு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார். “அப்படியானால் நீங்கள் வேதாகமத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் அவர் தேவனுடைய வெளிப்படுத்தலாயிருக்கிறார். அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன்” என்றேன். எனவே சபை முழுவதும் தெய்வீக வெளிப்பாட்டின் மேல் கட்டப்பட்டுள்ளது. இயேசு (அது பேதுருவிடம் என்று நினைக்கிறேன்)... “மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யாரென்று சொல்லுகிறார்கள்?” என்றார். அவர் தமது சீஷர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர்கள், சிலர் உம்மை எலியாவென்றும், சிலர் மோசே என்றும், வேறு சிலர் எரேமியா என்றும், அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள்“ என்றார்கள். அவர், “நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு பேதுரு, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றான். 48ரோமன் கத்தோலிக்க சபை, “இந்த கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்” என்று அவர் கூறின போது அவர் பேதுருவையே குறிப்பிட்டார் என்கின்றனர். பிராடெஸ்டெண்டுகள், “அவர் சபையை தமக்கு மேல் கட்டினார்” என்கின்றனர். ஒருக்கால் அது சரியாயிருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரையில், அவர்கள் இருவருமே தவறு. அவர் யாரென்றும் ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மேல் தான் அது கட்டப்பட்டது. “மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இந்த கல்லின் மேல் (அவர் யாரென்றும் வெளிப்பாட்டின் மேல். அவர் வார்த்தை என்னும் வெளிப்பாட்டின் மேல் முழு சபையும்)... ”இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற் கொள்வதில்லை“. பாதாளத்தின் வாசல்கள் அதற்கு விரோதமாயிருக்கும் என்பதை அது காண்பிக்கிறது. 49விசுவாசத்தினாலே, வெளிப்பாட்டினாலே ஆபேல் (அந்நாட்களில் வேதாகமம் எழுதப்படவில்லை). விசுவாசத்தினாலே ஆபேல் காயீனிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான் அதினாலே அவன் நீதிமானென்று தேவனே சாட்சி கொடுத்தார் (எபி. 11: 4) எப்படி? விசுவாசத்தினாலே. எப்படி? வெளிப்பாட்டினாலே! வெளிப்பாட்டினாலே ஆபேல் காயீனிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான். ஏனெனில் அது நிலத்தின் கனிகள் அல்ல, அது இரத்தம் என்று அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. ஆகையால் தான் சிலரால் அதை விசுவாசிக்க முடிகிறது, சிலரால் அதை விசுவாசிக்க முடிகிறதில்லை, சிலர் அதை பாவனை விசுவாசம் செய்ய முயல்கின்றனர். 50ஒரு கூட்டம் ஜனங்கள் ஜெப வரிசையில் வந்து கொண்டிருக்கும் போது, நீங்கள் காண்பது என்னவெனில், சிலர்... அவர்கள் எல்லோரும் நல்லவர்களே என்று நாம் சொல்லுவோம். சிலர் அதை விசுவாசிக்க, விசுவாசத்தை உண்டாக்கிக் கொள்ள, கடினமாக முயல்கின்றனர். சிலருக்கு அப்படி செய்ய முடிவதேயில்லை. ஆனால் வேறு சிலருக்கு கிருபையினால் அது அளிக்கப்படுகிறது. அதுதான் வித்தியாசம். பாருங்கள்? அதுதான் அதை செய்கிறது. அது தான் உண்மையான விசுவாசம், ஏனெனில் விசுவாசம் என்பது தேவனிடத்திலிருந்து கிடைக்கப் பெறும் வெளிப்பாடாகும். அது முதலில் வெளிப்பட வேண்டும். 51இயேசு அதை தெளிவாக கூறினார். அதாவது, “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால், அல்லது என்னை வெளிப்படுத்தி தராவிட்டால், அவன் என்னிடத்தில் வர மாட்டான்”. அந்த வசனத்தை நீங்கள் படிக்க வேண்டும். அது யாக்கோபு... யோவான் 6:44 முதல் 46 வசனங்கள். அவர் யாரென்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. அவர் ஒரு சாதாரண மனிதன் என்று அவர்கள் எண்ணினர். இன்று ஜனங்கள் நினைப்பது போல், அவர் ஏதோ ஒரு தீர்க்கதரிசி என்று அக்காலத்து ஜனங்கள் எண்ணினர். அவர் ஒரு தீர்க்கதரிசி, அவர் ஒரு சாதாரண மனிதனே. ஆனால் அதைக் காட்டிலும் அதிகமானதொன்று இருந்தது. 52நேற்றிரவு நான் கூறினது போல... ஏழு சபை காலங்களின் புத்தகம் உங்கள் கைகளில் கிடைக்கும் போது, நான் “இரண்டு ஜீவ புஸ்தகங்கள்” என்று கூறினதைக் குறித்து உங்களுக்கு சிறிது குழப்பம் உண்டாக வழியுண்டு. அது ஒரே புத்தகம். ஒரு புத்தகத்தில் உங்கள் இயற்கை பிறப்பு, மற்றொன்றில் உங்கள் ஆவிக்குரிய பிறப்பு. ஒன்று மற்றொன்றுக்கு நடத்துகிறது கோதுமை செடி தண்டு போல் நீங்கள் என்னிடம் ஜீவனுள்ள ஒருவராக பேசுகின்றீர்கள். என்னில் ஒரு பாகம் அழிய வேண்டியதாயுள்ளது. அதுதான் பெயர் எடுக்கப்படும் புத்தகம். ஆனால் நித்தியமான ஒன்று, முன் குறிக்கப்பட்ட ஒன்று, தெரிந்து கொள்ளப்பட்ட ஒன்று, அதன் பெயர் எடுக்கப்படவே முடியாது. அது எப்பொழுதும் அங்கிருக்கிறது. அது எடுக்கப்படவே முடியாது. ஏழு சபை புத்தகத்தில் அதை நீங்கள் காணும் போது, உங்களைக் குழப்பத்தினின்று தவிர்க்கும். அதை அவ்விதமாகவே அந்த புத்தகத்தில் காண்பீர்கள். அதை இலக்கண ரீதியாக எழுதின சகோ. வேயில் அதை இன்று எனக்கு ஞாபகமூட்டினார். நான், “அது சரி” என்றேன். 53பாப்டிஸ்டுகள் தனித் தனியே இரண்டு புத்தகங்கள் உள்ளதாகக் கருதுகின்றனர். ஒரு வகையில் அது தனித் தனியே இரண்டு புத்தகங்கள். ஆனால் வேறு வகையில், அது இரண்டு தனித்தனி புத்தகங்கள் அல்ல. நான் இரண்டு தனித் தனி நபர்களைக் கொண்டவன். நான் ஆவி, ஆத்துமா, சரீரமாய் இருக்கிறேன், தனித் தனியே மூன்று நபர்கள். ஆனால் நான் ஒரே ஆள் தான். ஒரே ஒரு உண்மையான ஜீவ புஸ்தகம் உள்ளது - எப்படி கோதுமை மணியின் ஒரே ஜீவன் தண்டின் வழியாக பட்டுக் குஞ்சத்துக்கு வந்து, அதன் பிறகு உமியை அடைந்து அங்கிருந்து கோதுமைக்குள் பிரவேசிக்கிறதோ அப்படி. நீங்கள், “கோதுமை அங்கிருக்கிறது'' என்கின்றீர்கள். அது கோதுமை அல்ல, அது தண்டு. ஆனால் அவை ஒருங்கே கோதுமை பாருங்கள், அது கோதுமை. ஏனெனில் அது தண்டில் உள்ள போது நீங்கள் கோதுமையை குறித்து பேசுகிறீர்கள். கோதுமை மணி முடிவில் தோன்றுகிறது. மற்றவை சுமப்பவை, அவை அழிந்து போக வேண்டும். ஓரிடத்தில் உங்கள் பெயர் ஆட்டுக் குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுக்கப்பட முடியும் என்பது போல் உள்ளது. வேறொருரிடத்தில் அப்படி செய்ய முடியாது என்பது போல் தோன்றுகிறது. எனவே அதுதான் அது. ஏழு முத்திரைகள் திறக்கப்பட்ட போது, இவை அறிந்து கொள்ளப்பட்ட மகத்தான வெளிப்பாடாகும். ஏன் அப்படி? ஜனங்களுக்கு புரிந்து கொள்ள கடினமாயுள்ளது. அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. 54“என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்” என்றார். இயேசு (யோவான் 6:44, 37). அவர் யாரென்றும் அது எப்படியென்றும் ஒரு மனிதனுக்கு தேவனுடைய வெளிப்பாட்டினால் வெளிப்பட்டாலான்றி, அவனால் புரிந்து கொள்ள இயலாது. அதன் பிறகு அதில் நீங்கள் கொண்டுள்ள விசுவாசத்தை அனுசரித்து செயல்படுகிறீர்கள். பாருங்கள்? தேவன் இயேசுவில் வெளிப்பட்டார் என்றும், அதைக் காண முன் குறிக்கப்பட்டவர்களே அதை காண்பார்கள் என்றும் இங்கு நாம் தெளிவாகக் காண்கிறோம். நான் படிக்காமல் விட்டு விட்ட யோவான் 6:44 முதல் 46 வசனங்களை நிச்சயமாய் படியுங்கள். நான் படிக்காமல் விட்டு விட்ட காரணம்... நமக்கு நேரமில்லை என்பதனால். கடிகாரத்தில் நேரம் ஓடிக் கொண்டேயிருக்கிறது. எனவே நாம் கவனியுங்கள், “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வர மாட்டான், பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்''. அவர்கள் அதை அடையாளம் கண்டு கொள்வார்கள். வேறு யாரும் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாயிருந்த போதிலும், நீங்கள் யாராயிருந்தாலும், அது உங்களுக்கு வெளிப்பட வேண்டும். அப்பொழுது இயேசு கிறிஸ்து யாரென்பதை நீங்கள் கண்டு கொள்ளுகிறீர்கள். 55இங்கு முன் குறிக்கப்பட்ட திட்டம் தெளிவாகக் காணப்படுகின்றது. தேவனுடைய வார்த்தை ஒரு வித்து. அது விதைக்கப்படுவதற்கு முன்பு, நிலத்தை பண்படுத்த வேண்டும். நீங்கள் விதையை வெறுமனே தரையில் தூவினால் அதனால் ஒரு உபயோகமுமில்லை. பறவைகள் அதை கொத்திக் கொண்டு போய்விடும். அதை நீங்கள் முட்களில் விதைக்கும் போது, முட்கள் அதை விரைவில் நெருக்கிப் போடும். இயேசுவின் உவமை அப்படித் தான் கூறுகிறது. எனவே நிலத்தை முதலில் பண்படுத்தி ஆயத்தப்படுத்த வேண்டும். எனவே தேவன், தமது இராஜாதிபத்திய கிருபையினால், முதலில் இருதயத்தை ஆயத்தப்படுத்துகிறார். நீங்கள் அவரை இந்த காலத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று கருதி, அவர் உங்களை உலகத் தோற்றத்துக்கு முன்பே ஆயத்தம் பண்ணினார். அவருடைய முன்னறிவினால் உங்களை முன்னறிந்து, நித்திய ஜீவனுக்கென்று உங்களை முன்குறித்தார். அவர் உங்களை அறிந்திருந்தார். எனவே அவர் உங்களை ஆயத்தம் பண்ணினார். 56ஆகையால் தான் நீங்கள் இவைகளை விட்டு வெளி வந்து, இப்பொழுது உங்களுக்கு உள்ளதில் பிரவேசித்திருக்கிறீர்கள். நீங்கள் எங்கே இருக்க வேண்டுமென்று தேவன் முன் குறித்தாரோ, அந்த இடத்துக்கு அவர் உங்களை நடத்தியிருக்கிறார். அது... இந்த நிலம் முன் கூட்டியே ஆயத்தம் பண்ணப்படாதிருந்தால், விதை அதில் வளராது. ஆகையால் தான் விசுவாசத்தைக் குறித்து பிரசங்கம் பண்ணப்படுவதை நீங்கள் கேட்டு, கர்த்தர் சிந்தனைகளைப் பகுத்தறிதலைக் கண்டு, வேதத்தில் சொல்லப்பட்ட வரங்கள் கிரியை செய்வதையும் என்ன நடக்கிறதென்பதையும் நீங்கள் காணும் போது, விசுவாசம் என்னும் விதை வளரத் தொடங்கி, “ஓ, அல்லேலூயா, நான் விசுவாசிக்கிறேன்'' என்று நீங்கள் கூறுகிறீர்கள். சிலர் வந்து ஏமாற்றமடைகின்றனர். பாருங்கள், நிலம் முன் குறிக்கப்பட வேண்டும். அது அதன் மேல்படும் போது. 57நேற்றிரவு நான் சொன்ன கழுகுக் குஞ்சு கதையைப் போல். அது தாய்க் கழுகின் சத்தத்தைக் கேட்டவுடனே, “இதற்கும் கோழி இடும் சத்தத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு” என்று கண்டு கொண்டது. பாருங்கள், ஏனெனில் அது கழுகின் முட்டையிலிருந்து வந்த கழுகுக் குஞ்சாயிருந்தது. அது அப்பொழுது தான் கழுகாக ஆகவில்லை. அது எப்பொழுதுமே கழுகாக இருந்தது. அது போல கிறிஸ்தவனும் எப்பொழுதுமே கிறிஸ்தவனாயிருக்கிறான். ஆகையால் தான் நீங்கள் விவாகரத்து செய்த காரணம், உங்கள் முதல் பெற்றோர்களாகிய ஆதாம் ஏவாளினால் நீங்கள் அந்த கண்ணியில் அகப்பட்டுக் கொண்டீர்கள். நீங்கள் சுபாவப் படி பாவியானீர்கள். ஆனால் அப்படியிருக்க உங்களுக்கு விருப்பமில்லை. இப்பொழுதோ நீங்கள் சுவிசேஷத்தைக் கேட்டீர்கள். “விசுவாசம் கேள்வியினால் (கேட்பதனால்) வரும்”. வெளிப்பாடு கேட்பதனால் வரும். உங்களுக்குள் சிறிய ஏதோ ஒன்றுள்ளது. ஆனால் உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் மனிதன், “ஆ, இதை நான் விசுவாசிக்க மாட்டேன். மூடத்தனம்! இதை நான் விசுவாசிக்கவே மாட்டேன். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை” என்கிறான். 58பெந்தெகொஸ்தே நாளில் அவர்கள் செய்தது போல. அவர்கள் பரியாசம் பண்ணி, “இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள்” என்றார்கள். ஆனால் அவர்கள்... அது யாருக்கு நிகழ்ந்ததோ, அவர்களுக்கு அது பெரிய காரியமாயிருந்தது. ஏன்? அது தேவன் அந்த நபருக்கு தம்மை வெளிப்படுத்தல். மற்றவர்கள் பரியாசம் செய்த போது, இவர்கள் மகிழ்ச்சியினால் பொங்கினர். அது தனிப்பட்டவருக்கு கிடைத்த வெளிப்பாடு. அது விசுவாசம்... அது வெளிப்படுத்தப்பட்ட விசுவாசம். அது விசுவாசம் அல்லாதிருந்தால் அது அங்கிருந்திருக்காது. அது விசுவாசம். 59வித்துக்களுக்கு முதலில் நிலம் ஆயத்தம் பண்ணப்பட வேண்டும். எவர்களை முன் குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார். எவர்களை அழைத்தாரோ... எவர்களை முன்னறிந்தாரோ, அவர்களை முன் குறித்திருக்கிறார். நீங்கள் அதை படிக்க விரும்பினால், அது ரோமர் 8:28-34, மற்றும் எபேசியர் 1: 1-5. பாருங்கள், எவர்களை முன் குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார். எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார். எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். எதுவுமே ஒழுங்கை மீறவில்லை. நாம் மீறிவிட்டதாக நினைக்கிறோம். ஆனால் வேதத்தைப் பாருங்கள். தேவனுடைய வார்த்தை கூறின விதமாக அது அப்படியேயுள்ளது. இன்றைக்கு செய்தி புறக்கணிக்கப்படுகிறதை நாம் காண்கிறோம். அவர்கள் அப்படி செய்வார்கள் என்று வேதம் கூறவில்லையா? நிச்சயமாக. இவையனைத்தும் தேவனால் நியமிக்கப்பட்டுள்ளது. 60ஓ, அது உங்களுக்கு சந்தோஷத்தையளிக்க வேண்டும். இன்று நமக்குள்ள தொல்லை என்னவெனில், நாம் பழங்காலத்து கிறிஸ்தவர்களை விட வித்தியாசமானவர்களாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து இம்மானுவேல் என்னும் உண்மையான வெளிப்பாடு உண்டாகி அவர்கள் இருதயங்களில் அவர் வாசம் செய்த போது, அவர்கள் கரடுமுரடானவர்களாய் இருந்தனர். ஆனால் இன்றைக்கோ ஸ்தாபனங்கள் நம்மைத் தட்டிக் கொடுத்து, “ஓ, நான் சொல்லுகிறேன். அவர்களிடம் வெளிப்பாடு இல்லை. எங்களிடம் வந்து விடுங்கள்' என்கின்றனர். நீங்கள் அவர்களுடைய வெளிப்பாட்டின் மேல் சார்ந்திருக்கிறீர்கள். அவர்களுடைய வெளிப்பாடு தேவனுடைய வார்த்தையின்படி இல்லாவிட்டால், அது தவறு - என்னுடைய வெளிப்பாடும், வேறு எவருடைய வெளிப்பாடுமே, பலப்பரீட்சை வரும் போது எது சரி, எது தவறென்று தேவனுடைய வார்த்தை உரைக்கிறது. 61எந்த வித்துக்கும் நிலம் அவசியம் என்பது உண்மையே. எனவே, “எவர்களை முன்னறிந்தாரோ...” பாருங்கள், என்ன நடக்கப் போகிறதென்று அவர் ஏற்கனவே முன்னறிந்தார். கவனியுங்கள், இயேசு விதைகளைக் குறித்து கூறும்போது, “சில விதை கற்பாறை இடங்களிலும், சில விதை முள்ளுள்ள இடங்களிலும் விழுந்தது” என்றார். அது அப்படிப்பட்ட நிலத்தில் வளரமுடியாது. சில விதை நல்ல நிலத்தில், நல்ல மண்ணில், ஏற்கனவே பண்படுத்தப்பட்டு ஆயத்தம் பண்ணப்பட்டிருந்த நிலத்தில் விழுந்தது. 62இங்குள்ள மனிதர் அனைவரும், கோழிக் குஞ்சைப் போல் இங்கு தேடுகின்றனர், அங்கு தேடுகின்றனர். அவன் இதை சேருகிறான், அதை சேருகிறான். ஆனால் சிறிது காலம் கழிந்து, திடீரென்று வானத்திலிருந்து ஒரு சத்தம் பிறக்கிறது. அவன் உடனே அதை அடையாளம் கண்டு கொண்டு, “அது தேவனுடைய வார்த்தை” என்கிறான். பாருங்கள், அதை அவன் அறிந்து கொள்கிறான். ஏனெனில் அவன் இருதயத்தில் அதைக் குறித்து வெளிப்படுத்தப்பட்ட ஒன்றை அவன் பெற்றிருக்கிறான். 63கவனியுங்கள், ஏசாயா தீர்க்கதரிசி “ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்” என்றான். என்ன ஒரு விசித்திரமான பேச்சு! சரியான மனநிலையில் உள்ளவர் இதை எப்படி கூறியிருக்க முடியும்? இதற்கு முன்பு எந்த ஒரு கன்னிகையும் கர்ப்பவதியானதில்லை. “ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்”. அதை கூற அவன் சிறிதேனும் கவலைக் கொள்ளவில்லை. அவன் அதை கூறினான். அவள் எப்படி கர்ப்பவதியாகப் போகிறாள்? அது அவனுடைய வேலையல்ல. தேவன் என்ன செய்யப் போகிறார் என்று உரைத்ததை அவன் அப்படியே கூற வேண்டும். தேவன் அதை அவனுக்கு வெளிப்படுத்தினார். அவனுக்கு ஒரு தரிசனத்தைக் காண்பித்து அதை வெளிப்படுத்தினார். அது உண்மையாயிருந்தது. 64அந்த மனிதனுக்கு குழந்தையே உண்டாகாது என்று கூறப்பட்டிருந்த போது, தேவன் என்னிடம் அவருக்கு குழந்தை உண்டாகும் என்றும் உரைத்தது போல... ஒரு பெண் குழந்தை உண்டாகுமென்று மருத்துவர், “அது முடியவே முடியாது” என்று கூறியுள்ள போது, அது எவ்வளவு விசித்திரமாகத் தென்படுகிறது! “அது நடக்கும்” என்று தேவன் கூறும்போது, எப்படிப்பட்ட வார்த்தை விழுகிறது என்பதை அது பொறுத்தது. ஞாபகம் கொள்ளுங்கள், தீர்க்கதரிசி அங்கு நின்றான். அவருடைய வார்த்தை புறப்பட்டு சென்றது. 65ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் தேவன் உரைத்தது போல. அவர், “வெளிச்சம் உண்டாகக்கடவது, இது உண்டாகக்கடவது, அது உண்டாகக்கடவது'' என்றார். அவர் மனிதனை தமது சாயலிலே சிருஷ்டித்தார். அவர்களை தேவன் ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். முதலில் பூமி வெறுமையாயிருந்ததென்று காண்கிறோம். பிறகு ஆதியாகமம் 2-ல் அவர் மனிதனை தமது சாயலாக சிருஷ்டித்தார். மற்றவை சிருஷ்டிக்கப்பட்ட பின்பு, நிலத்தை பண்படுத்த ஒரு மனிதனும் இல்லை. அது என்ன? அது அவருடைய வார்த்தைகள். அதை அவர் உரைத்துக் கொண்டிருந்தார். அவர் ”வெளிச்சம் உண்டாகக்கடவது“ என்று உரைத்தபோது, ஒருக்கால் அதற்கு பிறகு எண்ணூறு ஆண்டுகள் வரைக்கும் வெளிச்சம் இருந்திருக்காது. ஆனால் அவர் அதை உரைத்தார். அவர் ”பனைமரம் உண்டாகக்கடவது, கர்வாலி மரம் உண்டாகக்கடவது, இது உண்டாகக்கடவது'' என்று உரைத்தபோது, தண்ணீரின் கீழ் அந்த விதைகள் உண்டாகிக் கொண்டிருந்தன. அது உண்மை. அதனதன் காலத்தில் அது தோன்றினது. அது தவறாது, அது தேவனுடைய வார்த்தை. அது தவறவே முடியாது. அது உரைக்கப்பட்டுவிட்டது. 66ஒரு காலத்தில் தேவன் மனிதனோடு முகமுகமாய் பேசினார். ஆனால் மோசேயின் காலத்தில் அக்கினி மலையின் மேல் இறங்கினபோது, அவர்கள், “தேவன்... மோசே பேசட்டும், தேவன் பேச வேண்டாம். நாங்கள் அழிந்து போவோம்” என்றனர். எனவே அவர், “இனிமேல் நான் இவர்களோடு இந்த விதமாக பேசமாட்டேன். அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவேன்” என்றார். தேவனுடைய முறை அதே விதமாக இருந்து வருகிறது. இங்கு ஒரு தீர்க்கதரிசி நின்று கொண்டு ஆவியினால் ஏவப்படுகிறான். அவன் சுய புத்தியை உபயோகிக்கவில்லை. “ஒரு நிமிடம் பொறுங்கள். அப்படி நான் கூறினால் ஜனங்கள் என்னைப் பைத்தியக்காரன் என்று நினைப்பார்கள்” என்று அவன் கூறவில்லை. பாருங்கள், அது அவன் சுயபுத்தி. அவன் அதை உபயோகித்தால், ஏவாளைப் போல் சாத்தானுக்கு செவி கொடுக்கிறவனாயிருப்பான். 67மருத்துவர், “நீ உயிரோடிருக்க முடியாது. உனக்கு சுகம் கிடைக்காது. நீ இதை செய்ய முடியாது, அதை செய்ய முடியாது” என்று கூறுவதற்கு நீங்கள் செவி கொடுக்கும் வரைக்கும், அந்த வித்து அப்படிப்பட்ட நிலத்தில் விழாது. அது பலன் தராமல் போய்விடும். ஆனால் அவையனைத்தும் களைந்து போட்டு பண்படுத்தப்பட்ட நிலத்தில் அது விழும் போது அதை யாருமே பிடுங்கமுடியாது. அது எவ்வளவு காலம் ஆனாலும் பரவாயில்லை, அது நிச்சயம் நடக்கும். “ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்” என்று அவர் தீர்க்கதரிசியின் மூலம் கூறின பிறகு, அது எண்ணூறு ஆண்டுகள் கழித்து நிறைவேறினது என்று உங்களுக்குத் தெரியுமா? அந்த ஸ்திரீ யாரென்றும், அவளுடைய பெயர் என்னவென்றும், அந்த வித்து எங்கு விழுமென்றும் தேவன் முன்னறிந்தார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக, அவருக்குத் தெரியும்! ஒரு கர்ப்பத்திலிருந்து இந்த பெரிய அற்புதம் தோன்றும் என்று தேவனுக்கு முன்கூட்டியே தெரியும். அவர் அதை தமது தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தினார். அவன் விசுவாசமுள்ளவனாய் வார்த்தையை உரைத்தான். அது என்னவென்று சிறிதும் யோசிக்காமலும் கூட, அவன் அதை உரைத்தான். அவன் அதை சிந்தித்து பார்க்க முயலவில்லை. 68நீங்கள் சிந்தித்து பார்க்க முயன்றால்... இந்த மனிதன், இந்த ஸ்திரீ, அல்லது இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் மனிதன், அல்லது வேறு யாராவது ஒருவர், “நான் இத்தனை ஆண்டுகளாக ஊனமுற்றிருக்கிறேன். சுகம் பெற ஒரு வழியுமில்லையென்று மருத்துவர் கூறுகின்றார்'' என்று சிந்திக்கத் தொடங்கினால் என்னவாகும்? மருத்துவரைப் பொறுத்த வரைக்கும் ஒரு வழியுமில்லை என்பது உண்மைதான். ஆனால் ஏதாவதொன்று அந்த களைகளைப் பிடுங்கி எறியுமானால், தேவன் தமது கிருபையினால் - போதகர் அல்ல, வேறுயாரும் அல்ல - தேவன் உங்கள் இருதயத்தில் ஒரு வெளிப்பாட்டை வைத்து, “நீ சுகம் பெறுவாய்'' என்று அது கூறுமானால், எதுவுமே உன்னை இந்த நிலையில் உட்கார வைத்திருக்க முடியாது. எதுவுமே உன்னை தடை செய்ய முடியாது. நீ நிச்சயம் சுகம் பெறுவாய். ஆனால் அது வரைக்கும், நீ எந்த நிலையில் இருப்பாய் என்று மருத்துவர் கூறினாரோ, அந்த நிலையில் தான் இருப்பாய். அது வரைக்கும். அது வெளிப்படுத்தப்பட வேண்டும். தேவனுடைய கிருபையே அதை வெளிப்படுத்தி தருகிறது. 69இப்பொழுது கவனியுங்கள். எந்த ஸ்திரீக்கு அப்படி நடக்குமென்று தேவன் முன்னமே அறிந்திருந்தார். ஏசாயாவை கவனியுங்கள். அவன் மனதில் எந்த கேள்வியும் எழவில்லை. அவன், “ஆண்டவரே, ஒரு நிமிடம் பொறும்! என்னிடம் என்ன கூறினீர்? ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள் என்றா? ஓ! என்ன? பிதாவே, சற்று பொறும். அப்படிப்பட்ட சம்பவம் இதுவரை நிகழ்ந்ததில்லையே” என்று கூறவில்லை. அவன் தயங்காமல், “ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்” என்றான், உண்மை. 70மரியாளைக் கவனியுங்கள். அவள், “ஆண்டவரே, ஒரு நிமிடம் பொறும். நான் புருஷனை அறியவில்லை என்று உமக்கு தெரியும். இது கூடாத காரியம்! இப்படிப்பட்ட ஒன்று இதுவரை நிகழ்ந்ததேயில்லை. ஓ, ஓ, ஓ, இல்லை, இப்படிப்பட்ட ஒன்று இதுவரை நிகழ்ந்ததேயில்லை. என்னால் எப்படி குழந்தை பெறமுடியும்? நான் புருஷனை அறியேனே, ஆகவே இது நடக்காது! ஊ, தூதனே, நீ தவறாகக் கூறிவிட்டாய். நான் கண்களினால் கண்டது ஒரு பொய்த் தோற்றம். (optical Illusion) அப்படிப்பட்ட நாட்கள் கடந்துவிட்டன” என்று என் சபை சொல்லுகிறது என்று கூறவில்லை. இல்லை! அப்படியிருந்தால், அது அப்படிப்பட்ட இடத்தில் விழுந்திருக்காது. மரியாள் எந்த கேள்வியும் கேட்கவில்லை. அவள், “இது எப்படியாகும்? புருஷனை அறியேனே'' என்றாள். தேவதூதன், “பரிசுத்த ஆவி உன் மேல் நிழலிடும். அப்படித்தான் இது நடக்கும்” என்றான். அவள், “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை” என்றாள். எந்த கேள்வியும் இல்லை. 71ஏசாயாவைப் பாருங்கள், தேவன் தம்முடைய சிந்தையிலிருந்ததை வார்த்தையாக (வெளிப்பாடு) ஏசாயாவின் இருதயத்தில் வைத்தபோது, அது நல்ல நிலத்தில் விழுந்தது. அவன் ஒரு தீர்க்கதரிசி. அந்த தீர்க்கதரிசி மனித ஞானத்தைக் குறித்து கவலை கொள்ளவில்லை. அவன் மனிதனின் நுண்ணறிவைக் குறித்து கவலை கொள்ளவில்லை. அவன் யாரையும் குறித்து கவலை கொள்ளவில்லை. அவன் பிரதிஷ்டை செய்யப்பட்ட தேவனுடைய வாய்காலாக இருந்தான். தேவன் உரைத்ததை அவன் உரைத்தான். அது மற்றவர்களைப் புண்படுத்துமா இல்லையா, அது பைத்தியக்காரத்தனமாக ஒலிக்குமா இல்லையா; இவை அவனுக்கு எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணவில்லை. அது தேவன், மனிதன் அல்ல. 72அந்த வார்த்தை புறப்பட்டு சென்றபோது, அது வித்தாக மாறி, எங்காவது விழ வேண்டும். தேவன் அதை உரைத்திருந்தால், அது விழுவதற்கு எங்காவது ஒரு கர்ப்பம் இருக்க வேண்டும். அவன் சொன்னது போல், “விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும். இந்த மலையைப் பார்த்து பெயர்ந்து போ என்று சொல்லி, உன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், நீ சொன்னபடியே நடக்கும். பாருங்கள், அது எங்காவது சரியாயிருக்க வேண்டும். கவனியுங்கள்! ஏசாயா இதை உரைத்தான் என்று நாம் காண்கிறோம். 73கன்னி மரியாள் அதை கேட்டவுடனே... அந்த நிலம் ஏற்கனவே உழுது பண்படுத்தப்பட்டிருந்தது. அவள் ஒரு கன்னிகை. அவள் யாருடனும் ஓடித் திரியவில்லை. அந்த நிலம் தேவனுடைய முன்னறிவின்படி முன்குறிக்கப்பட்டு, ஏற்கனவே ஆயத்தம் பண்ணப்பட்டிருந்தது. ஏசாயா, “அவள் ஒரு கன்னிகை'' என்றான். அந்த நேரத்திலேயே அவளுடைய பெயர் என்னவென்று தேவன் அறிந்திருந்தார். அவளுடைய பெயர் பரலோகத்தில் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. அதன் பிறகு, அது நிறைவேறி உறுதிப்படுத்தப்பட்டது. மனிதன் அது நிறைவேறினதை அந்த கிரியைகளினால் காண்கிறான். இப்பொழுது நாம் கடந்த காலத்தை நோக்கி, “நிச்சயமாக அது நிறைவேறிவிட்டது” என்கிறோம். ஏனெனில் நடந்த கிரியைகளை நாம் காண்கிறோம். 74தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மேல் நோவா கொண்டிருந்த விசுவாசத்தை அவனுடைய கிரியைகள் வெளிப்படுத்தினது. தேவன் நோவாவை சந்தித்து, “நோவாவே, மழை பெய்யப் போகின்றது. நான் தண்ணீரினால் முழு உலகத்தையும் அழிக்கப் போகிறேன்” என்றார். அதற்கு முன்பு மழை பெய்யவில்லை. அது கூடாத ஒன்று நல்லது, இப்பொழுது நோவா... அவர், “நான் சொல்லும் அளவின் படியே ஒரு பேழையை உண்டாக்கு” என்றார். அவன் தச்சனாயிருந்தபடியால், உடனே வேலையைத் தொடங்கி, தன் அளவு கோலை எடுத்து அளந்து, சீத்திம் மரப் பலகைகளை வெட்டி ஒன்றாக சேர்த்து, தேவன் கூறின விதமாகவே அதற்கு உள்ளே கீல் பூசினான். அவனைக் குறித்து மனிதர் என்ன நினைத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? அவர்கள், “இவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இவன் வானத்திலிருந்து மழை பெய்யப் போகிறது என்கிறான். மேலே தண்ணீரே இல்லை'' என்றார்கள். ஆனால் பாருங்கள், நோவா அதைக் குறித்து சிந்திக்கவில்லை. என்ன நடக்கப் போகிறதென்று தேவன் கூறினதன் பேரில் அவன் கொண்டிருந்த விசுவாசத்தை அவனுடைய கிரியைகள் வெளிப்படுத்தின. ஆகவேதான் உண்மையான கிறிஸ்தவன் எவனும் தேவனுடைய வார்த்தையைத் தவிர மற்றெல்லாவற்றிலிருந்தும் தன்னைப் பிரித்துக் கொள்கிறான். ஜனங்கள் என்ன நினைத்தாலும், யார் என்ன கூறினாலும், அவன் தன்னைப் பிரித்துக் கொள்கிறான். ஏனெனில்... அப்படி அவன் கூறுவது மாத்திரமல்ல. அவன் கூறுவதோடு மாத்திரம் நிறுத்திக் கொண்டால், அவனுடைய கிரியைகள் விரைவில் வெளியரங்கமாகும். அவன் இந்தப் பக்கம் பின்வாங்கிப் போய், இதை சேர்ந்து கொள்வான், அதை சேர்ந்து கொள்வான். அவன் யாரென்பதை காண்பித்துவிடுவான். அவன் உண்மையுள்ளவனாயிருந்தால், தேவனுடைய வார்த்தை அவனுக்குள் விதைக்கப்பட்டிருந்தால், அது தன் ஜாதியைப் பிறப்பிக்கும். அவன் அந்த மகத்தான நேரத்துக்காக ஆயத்தமாவதை நீங்கள் காண்பீர்கள். பாருங்கள், நோவா அதை தான் செய்தான். 75மோசே கையில் ஒரு கோலைக் கொண்டவனாய், இஸ்ரவேல் ஜனங்களை பார்வோனிடமிருந்து விடுவிக்க வந்தான். உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா... மோசே எகிப்தியரின் சகல ஞானத்திலும் தேர்ந்தவன் என்று வேதம் உரைக்கிறது. அவன் அறிவாளி, அவனால் எகிப்தியரின் கலைகளை கற்றுக் கொள்ள முடிந்தது. எகிப்தியரின் சகல ஞானத்திலும் அவன் தேர்ந்தவனாயிருந்தான். அவன் கல்வியில் பின் தங்கவில்லை. அப்படிப்பட்டவன், அவ்வளவு கல்வி பயின்றவன், வனாந்தரத்தில் சஞ்சரிப்பதை சற்று யோசித்துப் பாருங்கள். தேவன் அவனுக்குப் பிரத்தியட்சமாகி, “மோசே, இந்த கோலை உன் கையில் எடுத்துக் கொண்டு எகிப்துக்கு சென்று, உன் கையிலுள்ள இந்த 'சுவிட்ச்' (Switch) சைக் கொண்டு என் பிள்ளைகளை விடுவித்துக் கொண்டு வா. இந்த ”சுவிட்சினால் எல்லாவற்றையும் தகர்த்து விடு“ என்கிறார். மோசே தேவனிடம், “சற்று பொறும். நீர் மகத்தான 'இருக்கிறேன்' என்று என்னிடம் கூறினர். நான் இவ்வளவு நேரம் ஞானமுள்ள ஒருவரிடம் பேசிக் கொண்டிருப்பதாக அல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த கோணலான கோலை என் கையில் எடுத்துக் கொண்டு போரில் தேர்ச்சி பெற்று ஆயுதந்தரித்த லட்சக்கணக்கான எகிப்திய இராணுவத்தை நான் எப்படி முறியடிக்க முடியும்? எனக்கு சண்டை போடத் தெரியாது. நான் ஆடுகளை மேய்ப்பவன். என்னால் முடியாது” என்று சொல்லியிருந்தால் என்னவாயிருக்கும்? அவன் எந்த கேள்வியும் கேட்கவில்லை. ஏன்? ஏன்? அவனுடைய இருதய நிலம் ஆயத்தம் பண்ணப்பட்டிருந்தது. அவன் முன் குறிக்கப்பட்டவன். வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதலின்றி அளிக்கப்படுகின்றன. தேவன் ஆபிரகாமிடம் அதை செய்யப் போவதாக கூறினார். அப்பொழுதே நிலம் ஆயத்தமாக்கப்பட்டுவிட்டது. 76மோசே இந்தக் கோலைக் கையிலெடுத்து சென்று ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்தை விடுவித்துக் கொண்டுவந்தான். அவன் கையில் கோலுடன் பார்வோனிடம், “அவர்களை போக விடு” என்று கூறினபோது, பார்வோன் மோசேயின் கிரியைகளைக் கண்டு அவன் செய்யப் போவதில் அல்லது அவன் செய்ய முனைந்ததில் அவனுக்கு விசுவாசம் இருந்தது என்பதை அறிந்துக் கொண்டான். தேவன் அளித்த வாக்குத்தத்தத்தின் பேரில் அவன் விசுவாசம் கொண்டிருந்த காரணத்தால், அவன் இஸ்ரவேலரை விடுவிக்க எகிப்துக்குச் சென்றான். வேறு யாரும் அதை செய்திருக்க மாட்டான். அதை செய்திருக்கவும் முடியாது. ஏனெனில் இதை செய்ய அவன் மாத்திரமே முன்குறிக்கப்பட்டிருந்தான். தேவன் முன்னமே ஆபிரகாமிடம், இப்படியெல்லாம் நடக்கும் என்று கூறியிருந்தார். வாக்குத்தத்தம் நிறைவேற வேண்டிய காலம் நெருங்கின போது, ஒரு அழகான ஆண் பிள்ளை பிறந்தான். அவனுடைய பெற்றோர் அம்ராமும் யோகெபேத்தும் ராஜாவின் கட்டளைக்கு பயப்படவில்லை. பாருங்கள், அங்கு ஏதோ ஒன்றிருந்தது. நிலம் ஏற்கனவே ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. ஓ, தேவனே, நான் ஆயத்தமாக்கப்பட்டுள்ள நிலத்தினிடம் இன்றிரவு பேசிக் கொண்டிருக்கிறேன் என்று விசுவாசிக்கிறேன். விதை சரியான நிலத்தில் விழுந்தால் அது... இல்லையென்றால் அது நடக்காது. அதே காரியம் தான். அவர்கள், “சகோ. பிரான்ஹாமே, அது எங்களை அதை விட்டு பிரித்து விடுகிறது” என்கிறார்கள். அப்படியானால் அது கிறிஸ்தவ மார்க்கத்தையே பிரிக்கின்றதாய் உள்ளது. பாருங்கள், நீங்கள் எதையும் பாவனை செய்யலாம். ஆனால்... தேவனுடைய வார்த்தை சரியான நிலத்தில் விழுமானால், அது தன் ஜாதியைப் பிறப்பிக்கும். அது அப்படி செய்ய வேண்டும். ஏனெனில் அது ஒரு விதை. 77நோவா... மோசேயின் கிரியைகள் அவன் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மேல் கொண்டிருந்த விசுவாசத்தை வெளிப்படுத்தினது. அது என்னவென்று மனிதனாகிய பார்வோன் கண்டு கொண்டான்... மோசே அதை எப்படி செய்யப் போகிறான் என்று அவனுக்கு தெரியாது. ஆனால் அவன் கூறினதன் பேரில் விசுவாசம் கொண்டிருந்தான், இல்லையென்றால் அவன் கையில் கோலுடன் அரண்மனையில் நின்று கொண்டிருக்கமாட்டான் என்பதை பார்வோன் அறிந்து கொண்டான். மோசே, “இந்த கோலினால் அவர்களை உன்னிடமிருந்து விடுவிக்கப் போகிறேன்'' என்றான். எண்பது வயது கிழவன், திடகாத்திரமுள்ளவன் அல்ல, தொங்கின தோளும், நீண்ட தாடியும்... ஒருக்கால் இடுப்புவரை தொங்கிக் கொண்டிருந்த தாடியுடைய கிழவன், அவனுக்கு தலைமயிர் இருந்திருந்தால் அது நரைத்திருக்கும். அப்படிப்பட்டவன் கையில் கோலைப் பிடித்துக்கொண்டு, ”அவர்களை வெளியே கொண்டு போகப் போகிறேன். என் ஜனங்களைப் போக விடு என்று கர்த்தர் சொல்லுகிறார். நீ போக விடாவிட்டால், தேவன் உன்னை நியாயந்தீர்ப்பார்'' என்றான். ஆமென்! ஏன்? அது... பாருங்கள், அது... அவன் பயந்தானா? ஒரு அம்பு, ஒரு ஈட்டி அவனுடைய உயிரை மாய்த்திருக்கும். அவன் பயப்படவில்லை! அவன் எங்கு நின்று கொண்டிருந்தான் என்பதை அறிந்திருந்தான். அவன், “பார்வோனே, தேவன் உன்னை அடிப்பார்” என்றான். ஆம், ஐயா. ஏனெனில் தேவன், “நீ மறுபடியும் இந்த மலைக்கு வருவாய்” என்று அவனிடம் சொல்லியிருந்தார். எனவே அவன் அங்கு போவான் என்பதை அறிந்திருந்தான். அல்லேலூயா! நாமும் கூட இந்த பயண முடிவில் எங்கே போகிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்! நதிக்கு அப்பால் ஒரு தேசம் உண்டு. உங்கள் சாட்சியில் நீங்கள் பயப்படாமல் நிலைத்திருங்கள். ஆமென். அது உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தால், நீங்கள் எதற்கும் பயப்பட மாட்டீர்கள். முழு உலகமும் என்ன கூறினாலும்... நீங்கள் கவலை கொள்ளமாட்டீர்கள். நீங்கள் பயப்படமாட்டீர்கள். இது தேவனிடத்திலிருந்து வரும் சத்தியம் என்று உங்களுக்கு வெளிப்பட்டிருந்தால், நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இல்லையென்றால், நீங்கள் பயப்படாமல் இருக்க முடியாது. 78மேய்ப்பனின் கவணைக் கையில் பிடித்திருந்த தாவீது, இஸ்ரவேல் சேனைகளுக்கு, அவர்களுடைய தேவன் பேரில் அவன் கொண்டிருந்த விசுவாசத்தை வெளிப்படுத்திக் காண்பித்தான். கோலியாத் மறுபுறம் நின்று கொண்டு பெருமையடித்துக் கொண்டிருந்தான். அவன் தாவீதை விட பல மடங்கு உருவத்தில் பெரியவன். அவன் கை விரல்கள் பதினான்கு அங்குலம் நீளம் இருந்தன. அவன் மிகப் பெரிய உருவம் படைத்த பெலிஸ்திய இராட்சதன். நீங்கள் தாவீதை கவனியுங்கள், அவன் மிகச் சிறிய உருவம் கொண்டவன். சேனையில் சேர்க்கப்பட தகுதியில்லாத அவ்வளவு சிறிய உருவம் படைத்தவன். அவனை அவர்கள் சேனையில் சேர்க்கக் கூடாமல் போயிற்று. அவனுடைய சகோதரர்கள் சேனையில் சேர்ந்திருந்தனர். கோலியாத் அங்கு பெருமை அடித்துக் கொண்டிருந்தான். இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், தாவீதுக்கு அது வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அவன், “இதோ ஜீவனுள்ள தேவனுடைய சேனைகள் தங்கள் சொந்த தேசத்தில் நின்று கொண்டிருக்கின்றன. இந்த விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியனோ அங்கு நின்று கொண்டு பெருமையடித்துக் கொண்டிருக்கிறான்” என்று எண்ணினான். அவனை இன்றிரவு நாம் “புற்று நோய்” அல்லது “திமிர் வாதம்” என்றழைக்கலாம். கோலியாத்துடன் போர் புரிய தாவீதுக்கு எந்த பொருத்தமும் கிடையாது எந்த விதமான ஆயுதம் அவன் தாங்கினாலும், அவனுக்கு சிறிதேனும் பொருத்தம் இருக்கவில்லை. கோலியாத்தின் தோள்பட்டை பத்து அல்லது பன்னிரண்டு அடி அகலம் இருந்திருக்கும். அவனுடைய உயரம் ஒருக்கால் பதினான்கு பதினைந்து அடி இருந்திருக்கும். இருபது அடி நீளமுள்ள ஈட்டி அவன் கையில் நெசவுக்காரரின் படைமரத்தின் கனத்தையுடையதாயிருந்தது. அதன் கூர்மையான பாகம் நான்கு அடி அகலம் இருந்திருக்கும். 79சிறு உருவம் படைத்த தாவீது முனைகளில் இரண்டு துண்டுகள் நூல் கட்டப்பட்ட ஒரு சிறு துண்டு ஆட்டுத் தோலைக் கையில் பிடித்து அங்கு நின்றுக் கொண்டிருந்தான். ஆனால் அது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது! வெளிப்பாடு அவனுக்கு உண்டானது! ஆமென்! அவன், “என்னை கரடியின் கைக்கும் சிங்கத்தின் கைக்கும் தப்புவித்த தேவன், எவ்வளவு அதிகமாக விருத்தசேதனமில்லாத இந்த பெலிஸ்தியனை என் கைகளில் ஒப்புக் கொடுப்பார்!” என்றான். அவனுடைய சகோதரர்கள் அதை செய்ய திறமை பெற்றிருந்தனர். சவுல் சேனைகளிலிருந்த எல்லாரைக் காட்டிலும் உயரமானவனாயிருந்தான். ஆனால், பாருங்கள், அது அவர்களுக்கு வெளிப்படவில்லை. ஆமென். அதுதான் அதை செய்யமுடியும், தேவனால் அதை செய்ய முடியுமென்று அவர்கள் விசுவாசித்தனர், ஆனால் அது அவர்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை, அது தாவீதுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அதுதான் அங்கு வித்தியாசம். தேவன் உங்களை சுகமாக்குவார் என்று உங்களுக்கு முற்றிலுமாக வெளிப்படுத்தப்படுமானால், நீங்கள் அதை பெற்றுக் கொள்வீர்கள் (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி). நீங்கள் அதை பெற்றுக் கொள்வீர்கள். உங்கள் வியாதி என்னவாயிருந்தாலும், அது எவ்வளவு மோசமாயிருந்தாலும்; ஒருக்கால் அது தாவீது கோலியாத்தை விட மோசமாயிருக்கக் கூடும். ஆனால் அது உங்களுக்கு வெளிப்படுத்தப்படுமானால்... 80கவனியுங்கள், அது வெளிப்படுத்தப்பட்டபோது, தாவீது அஞ்சா நெஞ்சு கொண்டான். அவன், “இன்றைக்கு உன் தலையை உன்னை விட்டு வாங்குவேன்” என்று சொன்னான். ஆமென். வேகமாக பார்ப்போம். நம்முடைய தேவன் கிருபையினால், தீர்மானம் செய்யப்பட வேண்டிய அந்த இக்கட்டான நேரத்தில்; அந்நாளில் தேவன் கிருபையை அனுப்பி, கூன் விழுந்திருந்த அந்த இளைஞனின் இருதயத்தை கண்டு அதில் விசுவாச விதையை விதைத்தார். இன்றைக்கு அதே தேவன் இந்த இக்கட்டான நேரத்தில் விசுவாசத்தை உங்களுக்கு வெளிப்படுத்தி தந்து இந்த ஸ்திரீயை சக்கர நாற்காலியிலிருந்து எழுப்பவும், அந்த மனிதனுடைய வியாதியைப் போக்கவும் வல்லவராயிருக்கிறார். நீங்கள் விசுவாசிப்பீர்களானால், அது எவ்வளவு நாட்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. 81இப்பொழுது கவனியுங்கள், மறுபுறத்திலிருந்த இராட்சதன் அதை விசுவாசிக்கவில்லை, புற்று நோயும் அப்படியே. அவன் நகைத்து, “நான் என்ன நாயா? என்னுடன் சண்டையிடுவதற்கு ஒரு சிறுவனை அனுப்புகிறீர்கள். உன்னை ஈட்டியினால் குத்தி, உம் மாம்சத்தை ஆகாயத்து பறவைகளுக்குக் கொடுப்பேன்” என்றான்... எல்லாமே அவன் சார்பில் இருந்தது. ஆனால் பாருங்கள், அது தாவீதை அசைக்கவேயில்லை. ஏன்? அது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அவனுடைய செயலில் அவனுக்கு விசுவாசம் இருந்தது. அவன் அதை செய்யப் போகிறான் என்று உறுதியாய் அறிந்திருந்தான். அவன் அதை செய்தான். ஏனெனில் அது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டு, அவன் எங்கு நிற்கிறான் என்பதை அறிந்திருந்தான். இன்றிரவு தேவன் உங்கள் இருதயத்தின் ஆழத்தில், “நீ படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கப் போவதில்லை. நீ அந்த சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கப் போவதில்லை. நீ சுகமடைவாய்” என்று கூறுவாரானால், வேறெதுவும் அதைக் குறித்து உங்கள் மனதை மாற்றவே முடியாது. ஆனால் அது நிகழும் வரைக்கும், உலகிலுள்ள அத்தனை போதகர்கள் ஜெபித்தாலும்... அது உங்களுக்குதவி செய்யாது என்று நான் கூற வரவில்லை, அது உங்களுக்கு உற்சாகத்தையளிக்கும். ஆனால் அந்த விசுவாசம்... பாருங்கள், சுகம் பெறும் வல்லமை உங்களுக்குள் உள்ளது. அது போதகரிடத்திலிருந்து வருவதில்லை. அது விசுவாசத்தினால் வெளிப்படுத்தலின் மூலம் உங்களுக்கு வருகிறது. “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னடைய ஆவியினாலேயே ஆகும் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (சகரியா. 4:6). “என் ஆவி, என் கிருபை, இதை உனக்கு வெளிப்படுத்துகிறது. அதை எதுவும் எடுத்துப் போட முடியாது. விசுவாசத்தின் மூலம், வெளிப்பாடு! பிறகு தாவீது தன் கிரியைகளை நிரூபிக்க... 82சிலர் தாவீதினிடம், “நீ அகங்காரி என்று அறிவேன்” என்றனர். அவனுடைய சகோதரன், “சண்டையைப் பார்க்க உன்னை யார் இங்கு வரச் சொன்னது? ஓடிப்போய் ஆடுகளை கவனி” என்றான். அவன், “நான் சவுலிடம் பேசிப் பார்க்கிறேன்” என்றான். பாருங்கள்? சவுல், “மகனே, உன் தைரியத்தை மெச்சுகிறேன். ஆனால் பார், நீ இளைஞன். அவனோ தன் சிறு வயது முதல் யுத்த வீரன். அவனோடே எதிர்த்து யுத்தம் பண்ண உன்னால் ஆகாது” என்றான். தாவீது, “என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது...'' என்றான். அதை ஒன்றின் மேல் ஆதாரப்படுத்த அவனால் முடிந்தது! ஆமென். ஓ, சகோதரனே! உன் ஆத்துமாவை இரட்சித்த தேவனுக்கு உன் சரீரத்தை சுகப்படுத்த முடியாதா என்ன? அதெல்லாம் ஒன்றே, அது உனக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். அவர் உனக்கு இரட்சகராயிருந்தது போல, உனக்கு சுகமளிப்பவரும் கூட. பாருங்கள்? ஆனால் அது முதலாவதாக உங்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். அது தான் வித்தியாசம். அவனுடைய விசுவாசத்தை ஆதாரப்படுத்த அவனுக்கு ஒன்று இருந்தது. “இது முன்பு நடந்ததில்லையே” என்றான். தாவீது, “சிங்கத்தின் கைகளுக்கு என்னைத் தப்புவித்த அதே தேவன் இந்த விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்” என்றான். “தாவீதே, உனக்கு எப்படித் தெரியும்?” “அதை நான் விசுவாசிக்கிறேன்” “ஏன்?” “அது எனக்கு வெளிப்படுத்தப்பட்டது” அவன் சொன்னான்... அவன் என்ன பேசுகிறான் என்பதை அறிந்திருந்தான். ஏனெனில் அந்த இராட்சதன், “உன் மாம்சத்தை ஆகாயத்து பறவைகளுக்கு கொடுப்பேன்” என்று சொன்ன போது, தாவீது, “உன் தலையை உன்னைவிட்டு வாங்குவேன்” என்றான். அதுதான் வித்தியாசம் பாருங்கள். அவன் சொன்னதை செய்தான்! 83ஒரு நாள் சிம்சோன் புல்வெளியில் (ஆயுதம் எதுவுமின்றி மாட்டிக் கொண்டான்). இதோ ஆயிரம் பெலிஸ்தியர் அவனை எதிர்த்து வந்தனர். அவன் குனிந்து தரையைப் பார்த்தபோது, ஒரு கழுதை செத்துக்கிடந்தது. அவன் அதன் தாடை எலும்பைக் கையிலெடுத்தான். அது மிகவும் உலர்ந்து போயிருந்தது. அவன் பெலிஸ்தியர் பின்னே ஓடி, உலர்ந்து போன கழுதை தாடை எலும்பால் அவர்களைத் தலையில் அடித்தான். எனக்குத் தெரிந்த வரையில், தாடை எலும்பிலிருந்த ஒரு பல் கூட கீழே விழவில்லை. பெலிஸ்தியர் அணிந்திருந்த தலைச்சீரா ஒரு அங்குலம் கனமிருந்தது (ஏனெனில் அவர்கள் அக்காலத்தில் ஒருவரையொருவர் தண்டாயுதத்தால் தாக்கினர்). தலையில் அடிபடாமல் தடுக்க அவர்கள் இதை அணிந்தனர். சிம்சோன் அந்த கழுதை தாடை எலும்பை எடுத்து, அதைக் கொண்டு ஆயிரம் பெலிஸ்தியரை முறியடித்தான். அந்த தாடை எலும்பு உடையவேயில்லை. அவர்கள் அவனை எதிர்த்து வர வர, அவன் அவர்களை இப்படி அடித்துக் கொண்டிருந்தான். மற்றவர்கள் அவனிடமிருந்து மலைகளுக்கு தப்பியோடினர். ஏன்? அவன் அதை விசுவாசித்தான்! சில சமயங்களில், உங்களுக்கு காண்பிக்க... உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். அந்த ஆர்வத்தை பயன்படுத்தி, அவசர அவசரமாக, யோசுவா செய்தது போல, மகதலேனா மரியாள், மற்றவர்கள் செய்தது போல; அந்த நொடிப் பொழுதில் ஏதாவதொன்று உங்களுக்கு வெளிப்படும் போது, அதை அவசர அவசரமாக இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். 84ஆம், அது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவன் ஆயிரம் பெலிஸ்தியரை சந்திக்கப் புறப்பட்டான். அந்த பெலிஸ்தியர், “அந்த நாலரை அடி உயரமுள்ள குள்ளன், ஏழு சுருள் மயிரைத் தொங்க விட்டுக் கொண்டு, அம்மாவின் பையன் போல் பெண்மைத்தனம் கொண்டவனாய், கழுதை தாடை எலும்புடன் வருவதைப் பாருங்கள். நம்மைப் பாருங்கள். நாம் எவ்வளவு பெரிய சேனை. இது கேலித்தனமாயுள்ளதல்லவா?” என்று கூறியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் அல்லவா? ஆனால் சிம்சோன் என்ன செய்து கொண்டிருந்தான்? தேவன் அவனுக்கு வெளிப்படுத்தினதை அவன் பெலிஸ்தியருக்கு வெளிப்படையாக காண்பித்தான். அவன் தாடை எலும்பை கையிலெடுத்துக் கொண்டு புறப்பட்டான். ஏனெனில் அதை தான் தேவன் அவன் கரங்களில் அப்பொழுது கொடுத்தார். அவனுடைய கரங்களில் அவர் எதை கொடுத்தாரோ அதைக் கொண்டு அவன் செயல்பட முடியும் என்று விசுவாசித்தான். அவ்வாறு செயல்பட்டதன் மூலம், தேவன் அவனுடைய இருதயத்தில் போட்டதை பெலிஸ்தியருக்கு பகிரங்கமாக வெளிப்படுத்தினான். 85“இப்பொழுது ஒருவர் உங்கள் நடுவில் நிற்கிறார்” என்று யோவான் ஸ்நானன் கூறினபோது, தன் கிரியைகளினால், தன் விசுவாசத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தினான். அதை சற்று யோசித்து பாருங்கள். அந்த வேத வசனத்தை நான் குறித்து வைத்திருக்கிறேன். அது யோவான் 1:26, பாருங்கள். அவன் சொன்னான். அவர்கள், “மேசியா வருவதாக நீ கூறுகிறாயே, மனிதனே, உனக்கு என்ன நேர்ந்தது? நாங்கள் நாலாயிரம் ஆண்டுகளாக அவருக்காக காத்திருக்கிறோம்'' என்றனர். அவன், “இப்பொழுது அவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்” என்றான். அல்லேலூயா! இன்றிரவும் அவர் அவ்வாறே நமது நடுவிலே நிற்கிறார். (உ, ஊ) அவன் வெளிப்படுத்தலின் மூலம் கிடைக்கப் பெற்ற தன் விசுவாசத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தினான். ஏனெனில் அது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது... அவன் மேசியாவுக்கு ஞானஸ்நானம் கொடுப்பான் என்று அறிந்திருந்தான். அவர் முப்பது வயதுள்ள ஒருவர். அவர் எங்கோ இருக்க வேண்டுமென்று அவன் அறிந்திருந்தான். அவரை அவன் கண்டதேயில்லை. ஆனால் அவர் அவர்கள் நடுவில் நின்றுக் கொண்டிருந்தார். அவன், “நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார். அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல. அவர் பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். அவர் இப்பொழுது உங்கள் நடுவிலே இருக்கிறார்” என்றான். அவன் தன் விசுவாசத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தினான். ஏனெனில் அவனுடைய காலத்தில் அவன் மேசியாவைக் கண்டு அவருக்கு ஞானஸ்நானம் கொடுப்பான் என்று அறிந்திருந்தான். எனவே, பாருங்கள், அவனுடைய பிரசங்கத்தின் மூலமாகவும் அவன் நடந்து கொண்ட விதத்தின் மூலமாகவும் அவன் தேவனிடத்திலிருந்து உண்மையான வெளிப்பாட்டை பெற்றிருந்தான் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தினான். 86அது உண்மையென்று நிரூபிக்க, திரளான கூட்டத்தின் நடுவிலிருந்து மேசியா நடந்து வந்தார். அவர் காண்பதற்கு சாதாரண இளைஞன். அவர் மற்றவர்களைப் போல் உடை உடுத்தி அங்கு நடந்து வந்தார். யோவான், “இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்றான். “உனக்கு எப்படி தெரியும்?” “ஆவியானவர் இறங்கி யார் மேல் தங்குவதை காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர் என்று எனக்கு வனாந்தரத்திலே சொல்லியிருந்தார்”. பாருங்கள், அவன் அவரை அறிந்துகொண்டான். ஏனெனில் அந்த காலத்தில் ஒரு அடையாளம் இருக்க வேண்டியிருந்தது. (நீங்கள் கிரகித்துக் கொள்கிறீர்களா?) அந்த நேரத்தை யோவான் அறிந்து கொண்டான். ஏனெனில் அவன் ஒரு தீர்க்கதரிசி. அவன் எந்த நேரத்தில் அடையாளத்தை காண்பான் என்பதை அறிந்துக் கொள்வான் என்று அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அந்த அடையாளத்தை கண்ட போது, அவன், “உங்கள் நடுவிலே நிற்கிறார்” என்றான். அவர் அங்கிருக்கிறார் என்பதை அறிந்து கொண்டான். ஓ, முடிவு காலம் இங்குள்ளது என்னும் அடையாளத்தை நான் காண்கிறேன். கடைசி கால செய்திக்கென வாக்களிக்கப்பட்டவை வேதம் கூறியுள்ளது போலவே வெளிப்படுத்தப்பட்டு நிறைவேறி வருவதை நான் காண்கிறேன். காலம் சமீபமாயுள்ளதென்று நான் அறிகிறேன்! அதை நான் எந்த தயக்கமுமின்றி கூறுகிறேன். அது மிகவும் சமீபமாயுள்ளதென்று நான் விசுவாசிக்கிறேன். ஏனெனில் அதற்கு முன் நிறைவேறுமென்று அவர் கூறிய அடையாளங்களை நான் காண்கிறேன். அது இப்பொழுது நிகழ ஆயத்தமாயுள்ளது. 87தேவன் தனக்கு வெளிப்படுத்திக் கொடுத்ததில் யோவான் கொண்டிருந்த விசுவாசத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தினான். எனவே விசுவாசத்தின் சாட்சியே கிரியைகளாம். நீங்கள் சுகமாகிவிட்டது போல நடந்து கொள்வதைஅ வர்கள் காணும்போது, நீங்கள் சுகமடைந்துவிட்டீர்கள் என்னும் விசுவாசம் உங்களுக்குள்ளதை அறிந்து கொள்வார்கள். சாட்சி என்ன கூறுகிறது? “அது இப்பொழுது எனக்குள்ளது. ஏனெனில் நான் தேவனுடைய வாக்குத்தத்தத்தைப் பெற்றுக் கொண்டேன். அது எனக்குள் கிரியை செய்கிறது. அது நிறைவேறுவதற்கு நான் ஆயத்தமாயிருக்கிறேன்'' என்று அது கூறும் (ஊ, ஊ). பாருங்கள், அதுதான் உங்கள் சாட்சி... உங்கள் கிரியைகள் செய்கிறது. நிச்சயமாக! 88சில நாட்களுக்கு முன்பு, சென்ற முறைக்கும் முந்தின முறை ஆப்பிரிக்காவுக்கு சென்றிருந்தபோது; இந்த வசந்த காலத்துக்கு முன்பு அங்கு நான் சென்றிருந்தேன், அதற்கும் முந்தின பயணம். அங்கு ஒரு குழந்தைக்கு ஊனமுற்ற கால்கள் இருந்தன... ஒரு கால் மற்ற காலை விட நீளம் குறைவாக இருந்தது. அது தன் வாழ்கையில் ஊனமுற்றதாயிருந்தது. அன்றிரவு அந்த குழந்தைக்காக ஜெபித்தேன். அவர்கள் அங்கு நடந்த அற்புதங்களைக் கண்டு குழந்தையை கொண்டு வந்து ஜெபித்துக் கொண்டனர். அடுத்த நாள் காலையில் நான் காலணி கடை வழியாக நடந்து சென்றேன். அதற்குள் நுழைந்தபோது, அந்த குழந்தையின் தகப்பன் அந்த குழந்தைக்கு ஒரு ஜதை காலணியை வாங்கிக் கொண்டிருந்தார். குழந்தையின் கால்கள் குணமாகிவிடுமென்று அவர் விசுவாசித்தார். (உ, ஊ ) இங்குள்ள மனிதன் தேவன் தனக்கு பெண் குழந்தையை கொடுப்பார் என்று விசுவாசித்தது போல். அது நடக்கும் என்று அவர் உறுதியாக விசுவாசித்து, “நான் ஆயத்தம் செய்கிறேன்” என்று சொல்லி, அதற்கான ஆயத்தங்களை செய்தார். சரீரப்பிரகாரமான விளைவுகள் ஒன்றும் காணப்படாவிட்டாலும், அதனால் ஒரு வித்தியாசமும் இல்லை. அவர் ஆபிரகாமைப் போல, தேவனுடைய வாக்குத்தத்தத்துக்கு மாறான எதையும் இல்லாதது போல் எண்ணினார். 89எனவே, உங்கள் அறிவு உங்களிடம் கூறுமானால்... ஓ, ஓ, ஓ, இதோ இங்கே ஒரு கடினமான சொல். உங்கள் அறிவு உங்களிடம், “இதுதான் சத்தியம். தேவனே வியாதியை சுகப்படுத்துகிறவர்” என்று கூறி, உங்கள் சிந்தை, “இதுதான் சத்தியம்'' என்று சாட்சி பகரக்கூடும். ஆனால் விசுவாசம் விதைக்கப்படுவதற்கு உங்கள் இருதயம் பண்படுத்தப்பட்ட நிலமாக இல்லாமல் போனால், அது நடக்காது. எவ்வளவுதான்... இந்த புறம்பான மனுஷன் வேத வாக்கியங்களை சிந்தித்து பார்த்து, ”அது சரியென்று சொன்னாலும், அதனால் உபயோகமில்லை. எத்தனை பேர் செய்தி ஒலிநாடாக்களை வாங்கிச் செல்கிறீர்கள்? அண்மையில் நான் பிரசங்கித்த “கடைசி காலத்தில் ஆவியின் அபிஷேகம் பெற்றவர்கள்” என்றும் செய்தியடங்கிய ஒலிநாடா உங்களுக்குக் கிடைத்ததா? (உரைக்கப்பட்ட வார்த்தை வால்யூம் 5 எண் 3-ஆசி). அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பாருங்கள். “அந்திக் கிறிஸ்துக்கள் தோன்றுவார்கள், கூடுமானால் அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள்'' என்று அது கூறுகிறது. அப்படி அது செய்ய முடியுமா... அது செய்யமுடியாது, அது கூடாத காரியம், ஏனெனில் அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். பாருங்கள்? சரி. அவர், “அபிஷேகம் பெற்றுள்ளவர்கள்” என்றார். பாருங்கள், கிறிஸ்து என்றால் “அபிஷேகம் பெற்றுள்ளவர்” என்று பொருள். ஆனால் இவர்கள் அந்திக் கிறிஸ்துக்கள். இவர்கள் அபிஷேகம் பெற்றவர்கள், ஆனால் தங்கள் போதகத்தில் கிறிஸ்துவுக்கு விரோதமானவர்கள். மற்றவர் செய்யும் எதையும் இவர்களும் செய்வார்கள். 90இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் மூன்று சக்கரத்தில் இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் ஒரே ஆள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூன்று சக்கரங்களாயிருந்து, ஒரே ஆளாயிருப்பது போல, ஒரே தேவனின் மூன்று தன்மைகள்: பிதாத்துவம், குமாரத்துவம், பரிசுத்த ஆவி. நீங்கள்: சரீரம், ஆவி, ஆத்துமா. வெளிப்புறமுள்ள சரீரத்துக்கு, நீங்கள் பூலோக வீட்டுடன் தொடர்பு கொள்ள, ஐந்து உட்குழாய்கள் உள்ளன. பார்த்தல், ருசித்தல், உணருதல், முகருதல், கேட்டல் என்பவை. உள்ளேயிருக்கும் ஆவிக்கும் ஐம்புலன்கள் உள்ளன: மனச்சாட்சி, அன்பு, போன்றவை. ஆனால் அதற்கும் உள்ளே இருக்கும் ஆத்துமாவுக்கு ஒன்று தான் உண்டு. அங்குதான் நீங்கள் ஜீவிக்கின்றீர்கள். 91ஆவி வந்து உங்களை ஒரு பிரத்தியேக காரியத்துக்கென்று அபிஷேகிக்கக் கூடும். நீங்களும் அதை செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்று அர்த்தமல்ல. இதை சற்று யோசித்து பாருங்கள். காய்பா தீர்க்கதரிசனம் உரைத்தான், யூதாஸ் பிசாசுகளைத் துரத்தினான். பாருங்கள், ஆவி அவர்களை அபிஷேகித்தது. மழை நல்லோர் மேலும் தீயோர் மேலும் பொழிகிறது. களைகள் கோதுமையுடன் கூட சேர்ந்து களிகூரும். ஆனால் அதன் உட்பாகத்தில் அது என்னவாயுள்ளதோ, அதுதான் அது. அங்கு தான் அறிவாளிகளாயும் நீங்கள் அதை ஏற்றுக் கொண்டு, “ஓ, நிச்சயமாக. அது நன்றாகக் காணப்படுகிறது. அதை நான் விசுவாசிக்கிறேன்'' என்கிறீர்கள். ஆனால் அது இரட்சிப்பை கொண்டு வருவதில்லை. இல்லை ஐயா! ஆவி அதைக் குறித்து சாட்சி கொடுக்கக் கூடும். ஆனால் அப்படியிருந்த போதிலும், அதுவல்ல. ஏனெனில் அந்த ஆத்துமா தேவனிடத்திலிருந்து வராமல் போனால், அது போலியான அனைத்தும் செய்யும். ஆனால் அது உண்மையாயிருக்க முடியாது. நீங்கள் சுகமானது போல் நடந்து கொள்ளலாம். நீங்கள் அதை பெற்றுக் கொண்டது போல நடந்து கொள்ளலாம். நீங்கள் கிறிஸ்தவர்களைப் போல் மிகவும் நன்றாக நடந்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்று அதன் அர்த்தமல்ல. அது முற்றிலும் உண்மை, பாருங்கள். ஆவி அங்கிருக்கக்கூடும், உண்மையான ஆவி. பரிசுத்த ஆவி உங்களை அபிஷேகிக்கக் கூடும். இருப்பினும் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்று அதன் அர்த்தமல்ல. அது உள்ளேயிருக்கும் ஆத்துமா, அது ஒருபோதும் மரிப்பதில்லை. அது நித்திய ஜீவனைப் பெற்றுள்ளது. அது எப்பொழுதுமே நித்திய ஜீவனாய் உள்ளது. அது தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்து தேவனிடத்தில் போகிறது. அது ஆத்துமா. 92கவனியுங்கள், அது ஐந்து என்பதாக இருக்க வேண்டும். வெளியில் வி-சு-வா-ச-ம் (சகோ பிரான்ஹாம் f-a-i-t-h என்று எழுத்து கூட்டுகிறார் - தமிழாக்கியோன்). உள்ளே இ-யே-சு (ஆங்கிலத்தில் J-e-s-u-s என்னும் சொல் ஐந்து எழுத்துக்களைக் கொண்டதாயுள்ளது - தமிழாக்கியோன்). பாருங்கள்? அப்படித்தான், நான் இங்கு நின்றுக் கொண்டிருக்கும் போது, உங்களைத் குறித்து எனக்கு ஒன்றுமே தெரிவதில்லை. ஆவி என்னை அபிஷேகிக்கக் கூடும், அப்பொழுதும் உங்களைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரிவதில்லை. ஆனால் அந்த உள்ளுக்கும் உள்ளேயுள்ளது கிரியை செய்யும்போது, அது தேவன். அங்குதான் வெளிப்புறம் சிந்தனை செய்கிறது. ஒரு மனிதனை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அவன், “நான் விபச்சாரம் செய்யக் கூடாது என்று கருதப்படுகிறது. ஆவியும் நான் விபச்சாரம் செய்யக் கூடாதென்கிறது. ஆனால் அதற்கும் உள்ளில் அந்த இச்சை பதிந்து கிடக்கிறது'' என்கிறான். பாருங்கள், அதுதான் ஆதிக்கம் செலுத்த வேண்டும். அதன் மீது கவனமாயிருங்கள். உள்ளேயிருந்து கட்டளை பிறக்கும்போது, அது மற்ற அனைத்தையும் அதற்கு கீழ்ப்படியச் செய்கிறது. அதுதான் வழிக்காட்டி (guide post). அது தான் கட்டுப்படுத்தும் கோபுரம் (Control Tower) - உள்ளுக்குள் இருக்கும் உள்ளானது. ஆத்துமா ஆவியை கட்டுப்படுத்துகிறது, ஆவி சரீரத்தை கட்டுப்படுத்துகிறது. ஆகவே வெளிப்புற வெள்ளையடித்தல் ஒரு வித்தியாசத்தையும் உண்டாக்குவதில்லை. அக்காலத்து மார்க்க சம்பந்தமான ஜனங்களை பவுல், “வெள்ளையடிக்கப்பட்ட சுவர்கள்” என்றழைத்தான் (அப்.23:3). அவர்கள் வெளிப்புறத்தில் எல்லா வகையிலும் விசுவாசிகளைப் போலவே இருந்தனர். அவர்கள் நடுவில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. மற்றெல்லாமே. ஆனால் உள்ளுக்குள் உள்ளானது (“விசுவாசிக்காத ஆத்துமா”). ஆகையால் தான் நான், ஜனங்கள் மேலும் கீழும் குதிக்கலாம், அந்நிய பாஷைகள் பேசலாம், கூச்சலிடலாம், வியாதியஸ்தர் மேல் கைகளை வைத்து விசுவாசத்தினால் அவர்களை சுகமாக்கலாம், ஆவியினால் இவ்வளவு மகத்தான காரியங்களைச் செய்தும் கூட இழக்கப்படலாம் என்று கூறுவதுண்டு. அபிஷேகம் பெற்றுள்ளவர்கள். 93கவனியுங்கள், இயேசு, “விசுவாசியுங்கள், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்” என்றார் (மாற்.9:23). விசுவாசமும் கிரியைகளும் கணவனும் மனைவியும் போல். அவை ஒருமித்து கிரியை செய்கின்றன. கணவன் மனைவியுடன் சேர்ந்து வேலை செய்கிறான், மனைவியும் கணவனும் சேர்ந்து வேலை செய்கிறாள், அவர்கள் ஒருவரையொருவர் அடையாளம் காண்கின்றனர். ஒரு மனிதன் தனக்கு மணமாகிவிட்டது என்று சொல்லிக் கொண்டு, அவனுடைய மனைவியை யாரிடமும் காண்பிக்காமலிருந்தால், அவன் சொற்களில் உங்களுக்கு சந்தேகம் எழ வகையுண்டு. பாருங்கள்? ஒரு மனிதன் “எனக்கு மணமாகிவிட்டது” என்கிறான். “உன் மனைவி எங்கே?” “ஓ, ஓ, அது எனக்குத் தெரியாது. பாருங்கள்? பாருங்கள்? அவன் கூறுவதை நம்புவது எனக்குக் கடினம். நான், “உன் மனைவி எங்கே?” என்று கேட்டு, அவன், “எனக்குத் தெரியாது” என்றால், அவன் கூறுவதை நான் நம்பமாட்டேன். எனவே, பாருங்கள், “எனக்கு விசுவாசம் உண்டு” என்று நீங்கள் உரிமை கோரினால், உங்கள் விசுவாசத்தை எனக்கு நீங்கள் எப்படி காண்பிக்க முடியும்? உங்கள் கிரியைகளினாலே. பாருங்கள்? “எனக்கு மணமாகிவிட்டது”. “உனக்கு மணமாகிவிட்டதென்று எனக்கு எப்படித் தெரியும்?” “இதோ என் மனைவி”. பாருங்கள் பார்த்தீர்களா? “எனக்கு மணமாகிவிட்டது, இதோ என் கணவர்”. ''நான் சுகமாகிவிட்டேன்“. “உனக்கு எப்படி தெரியும்?” 94“என் கிரியைகள் என் விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றது” பாருங்கள், பாருங்கள்? அதைக் குறித்து தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். உங்கள் விசுவாசம் என்பது தேவன் உங்களில் காண்பது, உங்கள் கிரியைகள் என்பது ஜனங்கள் உங்களில் காண்பது. ஆபிரகாமைக் குறித்து விளக்கம் தரும்போது, யாக்கோபு கூறினதற்கும் பவுல் கூறினதற்கும் அதுதான் வித்தியாசம். அவை ஒன்றுக்கொன்று முரணாயில்லை. அவையிரண்டும் ஒன்றே, மணமானவை. விசுவாசம் கிரியைகளைத் தோன்றச் செய்யாமல் போனால், உங்கள் சாட்சியை சந்தேகிக்க எவருக்குமே உரிமையுண்டு. நாம் ஜெப வரிசையை தொடங்குவதற்கு முன்பு, இது உங்கள் செவிகளில் விழுகிறதா? உங்கள் விசுவாசம் அதனுடன் கூட கிரியைகளையும் தோன்றச் செய்யாவிட்டால், நீங்கள் சுகமடைந்துவிட்டீர்களென்று எவரையுமே நம்பச் செய்ய முடியாது. அவர்கள், “எனக்குத் தெரியாது” என்பார்கள். பாருங்கள். “எனக்கு உலகிலுள்ள விசுவாசம் அனைத்தும் உள்ளது” என்று கூறலாம். உங்களுக்கு இல்லை. ஏனெனில் உங்களுக்கு விசுவாசம் இருக்குமானால், கிரியைகள் விசுவாசத்தை மணம் புரிந்துள்ளது. ஒன்று மற்றொன்றை அடையாளம் காண்பிக்கிறது. 95இப்பொழுது ஆபிரகாமைக் குறித்து சில நிமிடங்கள் சிந்திப்போம். ஆபிரகாம், விசுவாசம் கிரியைகள் என்னும் பரிசுத்த இணைப்பை முழுமையாகப் பெற்றிருந்தான். அவனுடைய விசுவாசத்துக்கு முரணானவைகளை இல்லாதவை போல் அழைத்து, அந்த கொள்கையை ஆதாரமாகக் கொண்டே நடந்து கொண்டான். இருபது ஆண்டுகள் கழித்து ஒருவர் அவனிடம் வந்து, “நீ ஜாதிகளின் தகப்பனா, ஹ, ஆபிரகாமே, உன் பெயர் ஆபிரகாம் என்று மாற்றப்பட்டதாக கூறினாய் அல்லவா?அதற்கு ஜாதிகளின் தகப்பன் என்று பொருள். ஆபிரகாமே, உனக்கு எத்தனை பிள்ளைகள் இப்பொழுது இருக்கிறார்கள்?” என்று கேலியாகக் கேட்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. பாருங்கள்? அது அவனை சிறிதளவும் இடறச் செய்யவில்லை. வேதம், “தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல் விசுவாசித்தான்” என்கிறது (ரோமர் 4:20. ஆங்கில வேதத்தில் “He staggered not at the promise of God through unbelief” - அதாவது “தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் தடுமாறவேயில்லை” என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). அவன் பிறக்கப் போகும் குழந்தைக்கு, கம்பளி காலுறை போன்றவைகளை உடனே ஆயத்தம் செய்யத் தொடங்கினான். அவ்வளவுதான். 96சாராளும் கூட, “என்ன நடக்கும் தெரியுமா? உமக்கு குழந்தை பிறக்கும் என்பது உண்மைதான். ஆனால் அது எப்படி நமக்கு கிடைக்குமென்று கூறுகிறேன். ஆகார் நமது அடிமைப் பெண். அவனை உமக்குத் தரப் போகிறேன். (அக்காலத்தில் பல பெண்களை மணத்தல் சட்ட பூர்வமானது). அவளுக்கு குழந்தை பிறக்கும். அந்த குழந்தையை நான் எடுத்துக் கொள்வேன்” என்றாள். ஆனால் ஆபிரகாம் அப்படி விசுவாசிக்கவில்லை. இல்லை, அவனுக்கு அப்படி செய்ய மனதில்லை. ஆனால் சாராளோ அப்படி செய்ய உந்தப்பட்டாள். எனவே தேவன் ஆபிரகாமிடம், “அவள் சொற்படி செய். இருப்பினும் இது நான் உனக்கு அளித்த வாக்குத்தத்தம் அல்ல. நான் உனக்கு இவ்வாறு வாக்களிக்கவில்லை” என்றார். 97இப்பொழுது கவனியுங்கள், அதற்கு முரணான எதையும், அவனுடைய சரீரம் செத்திருந்தது, சாராளின் கர்ப்பமும் அவ்வாறே செத்திருந்தது. அவன் நூறு வயது கிழவன். சாராளுக்கு தொண்ணூறு வயது. இப்பொழுது கவனியுங்கள்! சாராளின் கர்ப்பம் செத்திருந்ததும், அவனுடைய சரீரம் செத்திருந்ததும் எண்ணப்படவேயில்லை. இதை கவனமாய் கேளுங்கள்: அன்றியும் உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது. நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்கள் சுதந்தரவாளிகளானால் விசுவாசம் வீணாய்ப்போம், வாக்குத்தத்தமும் அவமாகும். மேலும் நியாயப்பிரமாணம் கோபாக்கினையை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணமில்லாவிட்டால் மீறுதலுமில்லை. ரோமர். 4: 13 - 15. இப்பொழுது, இதை கேளுங்கள்: அவன் நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும்... (நம்புகிறதற்கு ஏதுவில்லாமல் இருத்தல், எல்லா நம்பிக்கையும் போய்விட்டது. ஓ, ஒவ்வொரு முறையும் நான் ரோமர் 4-ம் அதிகாரத்துக்கு திருப்பும்போது சிறிது உணர்ச்சி வசப்படுகிறேன், பாருங்கள்), அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு (“தேவன் அப்படி அழைத்தார் பாருங்கள்?”) முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான். உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்கு தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான். ரோமர்: 4:17 - 18. இப்பொழுது 19-ம் வசனத்தைக் கேளுங்கள்: அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை, அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும் போது, தன் சரீரம் செத்துப் போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப் போனதையும் எண்ணாதிருந்தான். தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல் முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான். ரோமர்: 4: 19 - 21. 98நூறு வயதிலா? பாருங்கள், அவன் சரீரம் செத்துப் போயிருந்தது (அவன் ஆண்மை). சாராளின் கர்ப்பமும் செத்துப் போயிருந்தது. அவன் அதை எண்ணவும் கூட இல்லை. அவனுக்கு அது வெளிப்படுத்தப்பட்ட போது, அந்த செத்த நிலையை அவன் எண்ணவேயில்லை. உனக்கு திமிர்வாதமோ, அல்லது வேறு என்ன இருந்தாலும், அதை எண்ணக் கூடாது. அந்த சிறுவன் ஊனமுற்றிருக்கலாம், அது என்னவானாலும் (எனக்குத் தெரியாது), அதை எண்ணவே கூடாது. அதை எண்ணாதீர்கள். மருத்துவர், “அவர் சுகமடையவே மாட்டார். அவள் சுகமடையவே மாட்டாள்...” என்று கூறியிருந்தாலும், அதை எண்ணவே கூடாது. “எனக்கு வயதாகிறது, நான் நடுத்தர வயதை அடைகிறேன்”. அதை எண்ணவே எண்ணாதீர்கள். 99நாம் ஆபிரகாமின் புத்திரர் (அல்லேலூயா!) ஈசாக்கை போல் அல்ல, ஆனால் அவனுடைய ராஜரீக சந்ததி (இயேசு கிறிஸ்துவின் மூலம்) - அவன் பெற்றிருந்த விசுவாசத்தின் மூலம். ஆபிரகாமின் சந்ததியார் கடைசி நாட்களில் நட்சத்திரங்களைப் போல் பிரகாசிப்பார்கள். ஆபிரகாமின் புத்திரர்! “அவன் சரீரம் செத்துப்போனதை எண்ணாதிருந்தான்”. அதை அவன் எண்ணவும் கூட இல்லை. தேவன் அதை செய்வாரா இல்லையா என்று எண்ணப்படவேயில்லை. தேவன் அதை செய்வதாக வாக்களித்திருந்தார்! ஏன்? அது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அதுசரியா? அது உனக்கு வெளிப்படும்போது, அது உண்மையில் ஏதாவதொன்று... அதை நீங்களாகவே நடக்கும்படி செய்ய முடியாது. அது உங்களுக்கு வெளிப்பட வேண்டும். அப்பொழுது நீங்கள் வேறெதையும் எண்ண மாட்டீர்கள். அது எவ்வளவு கடினமானதென்றோ, மருத்துவர் என்ன கூறினாரென்றோ, அம்மா என்ன கூறினார்கள் என்றோ, அப்பா என்ன கூறினார், போதகர் என்ன கூறினார், வேறு யார் என்ன கூறினார் என்றோ எண்ணமாட்டீர்கள். தேவன் என்ன கூறினார் என்பதையே எண்ணுவீர்கள். 100அவன் சரீரம் செத்துப்போனதையும், சாராளின் கர்ப்பம் செத்துப் போனதையும் எண்ணாதிருந்தான். அது எண்ணப்படவேயில்லை. ஓ, என்னே, அது என்னை அசைக்கிறது. சரீரம் செத்துப் போனதும் சாராளின் கர்ப்பம் செத்துப் போனதும் எண்ணப்படவேயில்லை. விசுவாசம், தான் விதைக்கப்பட வேண்டிய நிலத்தை கண்டடையும் போது, எந்த சூழ்நிலையுமே எண்ணப்படாது. ஒரு மனிதனிலிருந்து புறப்பட்டு வரும் தாது அணு ஒரு ஸ்திரீயிலிருக்கும் முட்டையை கண்டு பிடித்து, இரண்டும் செழிப்பாயிருக்கும் பட்சத்தில், ஏதோ ஒன்று நடக்கும். அல்லேலூயா! மருத்துவர், “உனக்கு குழந்தை பிறக்காது. அதை நான் நிரூபிக்க முடியும்... உன் சரீரத்திலுள்ள தாது அணுக்கள் செத்துப் போயுள்ளன, அவளுடைய முட்டைகள் செழிப்பாயில்லை” என்று கூறலாம். ஆனால் அந்த தாது அணு செழிப்பான முட்டைக்குள் ஒருமுறை புகுந்து கொள்ளட்டும். அப்பொழுது என்ன நடக்கிறதென்று பாருங்கள். ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை இவ்வுலகிற்கு வருகிறது. ஏன்? விசுவாசம், தான் விதைக்கப்பட வேண்டிய நிலத்தைக் கண்டு கொண்டது. கிரியைகள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது. ஒரு ஆணுவின் (Cell) மேல் வேறொரு அணு. இதோ சிறு குழந்தை பிறக்கிறது. ஆமென். தேவன் நம்மேல் கிருபையாயிருப்பாராக. ஓ தேவனே, எங்களை, நாங்கள் இருக்க வேண்டிய விதமாக, கரடு முரடான கிறிஸ்தவர்களாக்கும். நாம் மாத்திரம் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளும் ஆண்களும் பெண்களுமாக இருந்தால் அது உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டாலன்றி, அப்படி செய்ய முடியாது (நான் வேகமாக முடிக்க வேண்டும்). 101கவனியுங்கள், தேவனுடைய பரிசுத்த விசுவாசம் அவருடைய தீர்க்கதரிசியின் பரிசுத்த கிரியைகளுடன் இணைந்தது. ஞாபகம் கொள்ளுங்கள், தேவனுடைய பரிசுத்த விசுவாசம் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவன் அதை ஏற்றுக் கொண்டு, விசுவாசித்து, அங்கிருந்து தன் பரிசுத்த கிரியைகளைத் தொடங்கினான். வாக்குத்தத்தத்தின் வித்து விளைவதற்கு ஒரு இடம் இருந்தது. ஆபிரகாம், “தேவன் சாராளுக்கு குழந்தை பிறக்கும் என்று வாக்களித்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன” என்று சொல்லியிருந்தால்! உ, ஊ. ஏதாவதொன்று நடந்து போனால், பாருங்கள். அப்படி நடக்காது. அப்படி நடக்காதென்று தேவன் அறிந்திருந்தார். கன்னி மரியாள், “ஒரு நிமிடம் பொறுங்கள் கன்னிகை கர்ப்பவதியாவதா? அப்படிப்பட்ட ஒன்றை நான் கூறினால் என்னை சபையைவிட்டு துரத்திவிடுவார்கள்'' என்று கூறியிருந்தால் அந்த நிலம் பண்படுத்தப்பட்டு ஆயத்தம் பண்ணப்படாமலிருந்தால், அவள் ஒரு வேளை அப்படி நினைத்திருப்பாள். தீர்க்கதரிசி, ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள் என்று கூறினபோது, அத்துடன் அது முடிவு பெற்றுவிட்டது. பாருங்கள்? “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்” அந்த வார்த்தை விதைக்கபடுவதற்கென்று பண்படுத்தப்பட்ட நிலம் அங்கிருக்குமானால், அது வளரத் தொடங்குகிறது. அதை எதையும் தடுத்து நிறுத்த முடியாது. 102இப்பொழுது வேகமாக முடிப்போம். பாருங்கள், வித்து மறைந்து கொள்வதற்கு ஒரு இடம் இருந்தது. தேவன் அதை அறிந்திருந்தார், இல்லையென்றால் அவர் அந்த வாக்குத்தத்தத்தை ஆபிரகாமுக்கு அளித்திருக்கமாட்டார். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். அந்த வாக்குத்தத்தம் எங்கே போகிறதென்று தேவன் அறிந்திருந்தார். ஆபிரகாமுக்கு எழுபத்தைந்து வயதாகும் வரைக்கும் அவர் அவனை அழைக்கவில்லை. இருந்தாலும், அவன் தொடக்கத்திலிருந்தே தேவனுடைய முன் குறிக்கப்பட்ட வித்தாயிருந்தான். சாராளும் அப்படியே. கவனியுங்கள், ஞாபகம் கொள்ளுங்கள், அவனுக்குப் படிக்க வேதாகமம் இருக்கவில்லை. இன்றைக்கு நாம் எளிதாக வார்த்தையைப் படித்து மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று காண்பது போல், ஆபிரகாமுக்கு இருக்கவில்லை. ஞாபகம் கொள்ளுங்கள், அவன் அதை வெளிப்படுத்தல் மூலமாகவே பெற வேண்டியதாயிருந்தது. ஆனால் வெளிப்பாடு உண்மையான ஒன்று. அவ்வாறே ஆதியாகமத்தில் காணப்படும் யோசேப்புக்கும் இருந்தது. அவன் காலத்தில் வேதாகமம் கிடையாது. மோசே ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் புத்தகங்களை எழுதினான் என்று ஞாபகம் கொள்ளுங்கள். மோசேயின் காலம் வரைக்கும் வேதத்திலுள்ள எவருக்குமே படிக்க வேதாகமம் இருக்கவில்லை. அது சரியா? ஊனமுற்ற நிலையில் நமக்குதவி செய்ய இப்பொழுது வேதாகமம் உள்ளது போல அப்பொழுது அவர்களுக்கு இல்லை. அவர்கள் கரடுமுரடான மனிதர்கள்... அவர்களுக்கு தேவனிடமிருந்து வெளிப்பாடு கிடைத்தது. அவர்கள் அங்கு உறுதியாக நின்றனர். எதுவுமே அவர்களை அசைக்கவில்லை. நமக்கும் அந்த கரடுமுரடான விசுவாசம் உண்டாகுமென்று நினைக்கிறீர்களா? அது உங்களுக்கு வெளிப்படும்போது. 103முடிப்பதற்கு முன்பு, நான் கூறப்போகும் இந்த சாட்சிக்காக என்னை மன்னிக்கவும். இந்த இரட்டை நகரத்தில் “நான் ஆதியாகமத்திலிருந்து யோசேப்பின் வரலாற்றைப் போதித்து கொண்டிருந்தபோது, என்னுடன் சகோ. ப்ரவுனும் மற்றவர்களும் இருந்தார்களென்று நினைக்கிறேன். நான் வேதாகமத்தைப் படித்தேன். அந்த மனிதனுக்கு விரோதமாக சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு இவர்களுக்கு விரோதமாக ஏதாவதொன்று இருந்தது. ஆனால் யோசேப்புக்கு விரோதமாக எதுவுமே இல்லை. என்ன ஒரு பரிபூரண மனிதன்! இயேசுவுக்கு பரிபூரணமான முன்னடையாளம். ஒரு நாள் என் ஓட்டல் அறைக்குள் அதை படித்துக் கொண்டிருந்தபோது, நான் அழத் தொடங்கினேன். நான் துணிகள் தொங்கப் போட்டிருந்த அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு, “தேவனே, ஒரு காலத்தில் இவ்வுலகில் என்னைப் போன்ற சரீரத்தில் வாழ்ந்து, உம்மை விசுவாசித்து உம்முடைய வார்த்தையை ஏற்றுக் கொண்ட யோசேப்புக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்” என்றேன். அவன் தன் சகோதரரால் பகைக்கப்பட்டான். அவனால் ஆவிக்குரிய பிரகாரமாய் இல்லாமல் இருக்க முடியவில்லை. அவன் தரிசனம் கண்டான். அவன் சொப்பனத்துக்கு அர்த்தம் உரைத்தான். அதற்காக அவர்கள் எல்லோரும் அவனை வெறுத்தனர். அவனால் அப்படி இல்லாமல் இருக்க முடியவில்லை. அவன் அப்படித்தான் இருந்தான். 104அது மற்றவர்களுக்கு அருளப்படவில்லை. அவர்கள் அவனை சிநேகித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக அவர்கள். அவர்களுக்கு விரோதமான சிலவற்றை சில சமயங்களில் அவன் கூறின காரணத்தினால் அவர்கள் அவனை பகைத்து, “ஓ, இதோ சொப்பனக்காரன் வருகிறான்'' என்றனர். பாருங்கள்? அவனை முகாந்தரமில்லாமல் பகைத்தனர். நான், “அவர்கள் ஏன் அப்படி செய்தனர்?” என்று கேட்டேன். இருந்தபோதிலும், யோசேப்பு அசையாமல் உறுதியாய் நின்றான். பாருங்கள்? நான், “ஆண்டவரே, உமக்கு நன்றி. ஓ தேவனே, அப்படிப்பட்ட ஒரு மனிதனுக்காக நான் நன்றி செலுத்துகிறேன்” என்றேன். அந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவர், “உனக்கு ஒரு மகன் பிறப்பான். அவனுக்கு 'ஜோசப்' என்று பெயரிடு” என்று எனக்கு வெளிப்படுத்தினார். நான் எழுந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்தினேன். 105அப்பொழுது தான் பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் என் மகள் பிறந்திருந்தாள். அவளுக்கு அப்பொழுது ஏறக்குறைய ஒரு வயது. அவள் அறுவை பிரசவத்தின் மூலம் (Caesarean) பிறந்தாள். அறுவைபிரசவம் என் மனைவியின் குடும்பத்தில் வழக்கமான ஒன்று. ஏனெனில் ஒரு சாதாரண பெண்ணுக்கு வருவது போல் அந்த குடும்பத்திலுள்ள பெண்களுக்கு குழந்தை வெளிவருவதில்லை. அவர்களுக்கு ஆண்களுக்கு உள்ளது போல் எலும்புகள் திடமாக உள்ளன. எனவே பெக்கி அறுவை பிரசவத்தின் மூலம் தாயினிடமிருந்து அறுத்து எடுக்கப்பட வேண்டியதாயிற்று. மருத்துவர் என்னிடம், “சகோ. பிரான்ஹாமே, உங்களுக்கு வேறொரு குழந்தை வேண்டாம். உங்கள் மனைவியின் கருப்பை பலூனைப் போல் மெல்லியதாக உள்ளது. நான் அவளுக்கு கருத்தடை செய்து விடுகிறேன்” என்றார். நான், டாக்டர், “நான் அனுமதிக்க மாட்டேன். அப்படிச் செய்யாதீர்கள்” என்றேன். அவர், நல்லது, “நீங்கள் - நீங்கள் - நீங்கள் அவள் இன்னுமொரு முறை கருத்தரிக்கக் கூடாது. நீங்கள் அவளை பாழ்படுத்திவிடப் போகிறீர்கள். அவள் இறந்துவிடுவாள். இந்த பிரசவம் அவளுக்கு மிகவும் பயங்கரமாயிருந்தது. நீங்கள்... அவள் தப்பித்துக் கொள்டாள்” என்றார். இதற்கெல்லாம் பிறகு கர்த்தர் என்னிடம், எனக்கு ஒரு மகன் பிறப்பான் என்றும் அவனை 'ஜோசப்' என்று அழைக்க வேண்டுமென்றும் கூறினார். அதைக் குறித்து நான் பயப்படவில்லை. உங்கள் எல்லோருக்கும்... உங்களில் பலருக்கு அது ஞாபகமிருக்கும். 106எனக்கு ஒரு மகன் பிறப்பான் என்றும் அவனுடைய பெயர் 'ஜோசப்' என்பதாய் இருக்கும் என்றும் அறிவிக்கத் தொடங்கினேன். எத்தனை பேருக்கு அது ஞாபகமுள்ளது? நிச்சயமாக! நான் எல்லாவிடங்களிலும், நாடு முழுவதும், ஜனங்களிடம், “எனக்கு ஒரு மகன் பிறப்பான். அவனுடைய பெயர் 'ஜோசப்' என்பதாய் இருக்கும்” என்று அறிவித்தேன். பின்லாந்தில் விபத்தில் மரித்து போன சிறுவன் உயிரோடெழுந்தது போல, அது நடந்தபோது சகோ. ஜாக் அங்கிருந்தார். அது நடப்பதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அந்த பையனைக் குறித்தும், அவன் எப்படி உடுத்தியிருப்பான் என்றும், அவன் எங்கு மரித்து கிடப்பான் என்றும் உங்களிடம் கூறினேன். தேவன் அவ்வாறு உரைத்தார். “அது எப்படி நடக்கும்?” “எனக்குத் தெரியாது. ஆனால் அப்படி நடக்குமென்று தேவன் எனக்கு வெளிப்படுத்தினார்!''. 107நான் அரிசோனாவுக்கு செல்வேன் என்றும், அங்கு ஏழு தூதர்களைச் சந்திப்பேன் என்றும், அவர்கள் என்னிடம் என்ன... நான் பிரசங்கிக்க வேண்டிய செய்திகளைக் கூறுவார்கள் என்றும் எனக்கு வெளிப்படுத்தப்பட்டது. அது ஏழு முத்திரைகள். அது அப்படியே நடந்தது. அதைக் குறித்து நான் கூறினது எத்தனை பேருக்கு ஞாபகமுள்ளது? ஒலிநாடாக்களும் மற்றவைகளும் அதற்கு சாட்சியாயுள்ளன. அது அப்படியே நடந்தது. பத்திரிகைகளும் மற்றவைகளும் அதை புகைப்படம் எடுத்தன. வானத்தில் காணப்பட்ட அந்த ஒளி என்னவென்று அவர்களால் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை. அது அங்கிருந்தது. நான் சகோ. ஜாக்கை அழைத்து, கிறிஸ்து அங்கு நின்றுக் கொண்டிருப்பதைக் குறித்து கேட்டது எனக்கு ஞாபகம் வருகிறது. சகோ. ஜாக். “அது அவர் மகிமையடைந்த நிலை” என்றார். பாருங்கள்? நான் சகோ. ஜாக்கை நேசிக்கிறேன். எனக்குத் தெரிந்தவரையில் அவர் மிகச் சிறந்த வேத சாஸ்திரிகளில் ஒருவர், ஆனால் அது சரியென்று எனக்குப் படவில்லை. அங்கு நான் நின்றுக் கொண்டு, “ஆண்டவரே, அது எப்படி? வாலிப பருவத்திலுள்ள நீர், வெண் பஞ்சைப்போல் வெண்மையான சிரசையும் மயிரையும் எப்படி பெற்றிருக்கிறீர்?” என்று கேட்டேன். அவர், “அவர் தலை அங்கி (wig) அணிந்திருக்கிறார்' என்றார். அந்த புத்தகத்தை பாருங்கள், அது நடக்கம் முன்பே அதைக் கூறினேன். அது நடந்த அன்று மேலே சென்றது. அந்த படத்தை நீங்கள் பக்கவாட்டில் திருப்பினால்; உங்களிடம் 'லுக்' அல்லது 'லைஃப்' பத்திரிகை இருந்தால், அதை பக்கவாட்டில் திருப்பி பாருங்கள். அதோ அவர் பரிபூரணமாக, ஹாஃப்மனின் கிறிஸ்துவின் தலை. நான் நின்றுக் கொண்டிருந்த இடத்தில் கீழ் நோக்கி பார்த்தார். அந்த புகைப்படம் அந்த பத்திரிகையில் உள்ளது. எத்தனை பேர் அதை கண்டுள்ளனர்? நீங்கள் எல்லோரும் கண்டிருக்கிறீர்கள். அதோ அவர் நோக்கிக் கொண்டிருக்கிறார். வெளிப்பாடு சரியென்பதை அது நிரூபித்தது. 108ஏன் அவர் தலை அங்கி அணிந்திருக்கிறார்? ஆங்கிலேய நீதிபதிகள், யூத நீதிபதிகள் தலை அங்கி அணிவது வழக்கம். இப்பொழுதும் இங்கிலாந்திலுள்ள நீதிபதிகள் தலை அங்கி அணிகின்றனர். அவர் அப்படி தலை அங்கி அணிதல் மிக உயர்ந்த அதிகாரத்தை (Supreme authority) குறிக்கிறது. அவர் அங்கு நின்று கொண்டு, தூதர்களின் செட்டைகள் அவருக்கு தலை அங்கியாக அமைந்திருப்பதை அது காண்பிக்கிறது. அவர் அல்பாவும் ஒமெகாவுமாயிருக்கிறார். அவர் உயர் நீதிபதி, அவரைத் தவிர வேறு யாருமில்லை. அவரை நாம் அல்பாவும் ஒமெகாவுமாக நோக்கிப் பார்க்க வேண்டும். அங்கு அவர் வாலிபனாக, முப்பது வயதைக் காட்டிலும் அதிக வயதில்லாதவராக, வெள்ளை அங்கி அணிந்து கொண்டு, அவர் உன்னதமானவர், தேவன் என்பதைக் காண்பிக்கிறார். “பிதாவானவர் நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்படைத்திருக்கிறார்” (யோவான் 5:22). அல்லேலூயா! வெளிப்பாடு ஒருபோதும் தவறாகாது. அது எப்படி ஒலித்தாலும், அதை எப்படியும் உரையுங்கள். அது வார்த்தையுடன் ஒத்துப்போகும். 109ஞாபகம் கொள்ளுங்கள், நான்கு ஆண்டுகள் கழித்து, என் மனைவி; எங்களுக்கு குழந்தை பிறக்கப் போகிறதென்று நாங்கள் அறிந்தோம். எல்லோருமே “பிறக்கப் போவது ஜோசப்பா?” என்று கேட்டனர். நான், “இருக்கலாம் என்று நினைக்கிறேன். எனக்குத் தெரியாது. ஆனால் நான் ஜோசப்பை பெறப் போகிறேன்” என்றேன். ஆனால் குழந்தை பிறந்த போது, அது சாராள். ஒரு மனிதன் என்னை அழைத்து பரியாசம் செய்து, “என்ன தெரியுமா?ஜோசபின் என்று சொல்வதற்கு பதிலாக ஜோசப் என்று சொல்லிவிட்டீர்கள்” என்றார். நான் அவரிடம், “ஐயா, தேவன் என்னிடம், எனக்கு ஒரு மகன் பிறப்பான் என்றும் அவனுக்கு ஜோசப் என்று பெயரிட வேண்டும் என்றும் கூறினார்” என்றேன். அவ்வாறு நான் கூறினதை ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்தை விட்டு வெளிவந்து எங்கள் சபையை சேர்ந்து கொண்ட மூன்று பேர் கேட்டனர். சாராள் பிறந்த போது இவர்கள் “இவர் கள்ளத் தீர்க்கதரிசி” என்றனர். நான், “அம்மணி, ஒரு நிமிடம் பொறு. நான் எப்பொழுது என்று கூறவில்லை. தேவனும் எப்பொழுது என்று கூறவில்லை. அவர் என்னிடம், ஒரு மகன்... அவர் ஆபிரகாமிடம் ஈசாக்கு பிறப்பான் என்று கூறினார். ஆனால் இடையிலிருந்த நேரத்தில் இஸ்மவேல் பிறந்தான். அது அவருடைய வாக்குத்தத்தத்தை எடுத்துப் போடவில்லை. எனக்கு இந்த பையன் பிறப்பான் என்றும் அவனை நாங்கள் ஜோசப் என்று அழைப்போம் என்றும் தேவன் கூறினார் என்று மாத்திரமே கூறினேன்” என்றேன். 110மருத்துவர் வந்தபோது என்னிடம், “சங்கை போதகரே, இப்பொழுது நான் கருத்தடை செய்யப் போகிறேன்” என்றார். நான், “செய்யாதீர்கள்” என்றேன். அவர், “வேண்டுமானால் நீங்கள் மறுவிவாகம் செய்து கொண்டு, அந்த ஆண் பிள்ளையை பெற்றுக் கொள்ளுங்கள்'' என்றார். நான், “இவள் மூலமாகவே அதை பெறப் போகிறேன். தேவன் அவ்வாறு கூறினார்” என்றேன். அதை நான் வேதத்திலிருந்து படித்துக் காண்பிக்க முடியவில்லை. ஆனால் அது வெளிப்பாட்டின் மூலம் விசுவாசத்தினால் என் இருதயத்தில் எழுதப்பட்டிருந்தது. தேவன் அவ்வாறு கூறினார்! தேவனுடைய வாக்குத்தத்தத்தை அவிசுவாசமாய் சந்தேகப்பட நான் விரும்பவில்லை. சிலர், “நீங்கள் ஜோசபின்” என்றா கூறினீர்கள்? என்று கேட்டார்கள். “நான் ஜோசப்” என்று கூறினேன், என்றேன். மருத்துவர், “அவள் வேறொரு குழந்தையை பிரசவிக்க முடியாது” என்றார். நான், “அவள் வேறொரு குழந்தையை பிரசவிப்பாள்” என்றேன். நான்கு ஆண்டுகள் கழிந்தன. அவள் மறுபடியும் தாய்மை பருவம் அடைந்தாள். 111அப்பொழுது ஒரு ஸ்திரீ (கள்ளத்தீர்க்கதரிசனம் நாடு முழுவதும் பரவினது), “மேடா பிரசவத்தின் போது இறந்துவிடுவாள். நான் 'பில்'லை வழிநடத்த அனுப்பப்பட்டிருக்கிறேன். நான் பெண்ணாயிருப்பதால் அவர் எனக்கு செவி கொடுக்கமாட்டார். தேவன் அவருடைய மனைவியைக் கொன்று அவரைத் தண்டிப்பார்” என்று பத்திரிகையில் எழுதினாள். நான், “என்னை வழிநடத்த தேவன் இயேசு கிறிஸ்துவை அனுப்பினார். நான் ஆவியினால் நடத்தப்படுகிறேன்” என்றேன். பாருங்கள்? பாவம் ஏழை மேடா. கூட்டங்களில் சுகம் பெற்ற ஒரு நர்ஸ் எங்களுக்கு இருந்தாள். திருமதி மார்கனை உங்களெல்லாவருக்கும் தெரியும். (மேயோ மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்தவள், மிகவும் மோசமான நிலை). இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தாள். லூயிவிலிலுள்ள பாப்டிஸ்டு மருத்துவனை தாஸ்தாவேஜுகளில் அவள் புற்று நோயால் இறந்துவிட்டதாக இருந்தது. இப்பொழுது அவள் ஜெபர்ஸன்வில்லில் உள்ள மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கிறாள். அவள் இத்தனை காலமாக உயிர் வாழ்ந்து வருகிறாள். ஏனெனில் தேவன் “அவள் உயிர் வாழ்வாள்” என்றார். மேடா அவளை நேசித்தாள். அவள், “பில், மார்ஜி என்னிடம் வரட்டும். எனக்கு மருத்துவமனைக்கு போகவே பிடிக்கவில்லை” என்றாள். 112நான், “அவளை... நாம் மார்ஜியை நேசிக்கிறோம். ஆனால் மார்ஜி நமது கடவுள் அல்ல, அவள் நமது சகோதரி என்றேன். நான் கிரீன் மில்லுக்குப் புறப்பட்டேன். அவளுடைய நிலைமை எனக்கு சங்கடம் விளைவித்தது. அவளை நான் நேசிக்கிறேன். நான் கிரீன் மில் வரைக்கும் சென்றேன். நான்... அவள், “பில், நான் மரித்துவிடுவேன் என்று நினைக்கிறீர்களா?” என்றாள். நான், “எனக்குத் தெரியாது, அந்த குழந்தை எப்படியும் பிறக்கும். உனக்கு ஒரு ஜோசப் கிடைப்பான்” என்றேன். அவள், “இது அவன் தானா?” என்றாள். நான், “தேனே, எனக்குத் தெரியாது. எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் தேவன் நமக்கு ஜோசப் பிறப்பான் என்று கூறியுள்ளார். எனவே நமக்கு ஜோசப் பிறப்பான். யார் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை, நமக்கு ஜோசப் நிச்சயம் பிறப்பான். இத்தனை வெளிப்பாடுகளையும் எனக்கு அளித்த தேவன் அதையும் கூறினார். மற்றவைகளை நிறைவேற்ற அவர் தவறினதில்லை, அவ்வாறே இதையும் நிறைவேற்றத் தவறமாட்டார்” என்றேன். நான் கிரீன் மில்லுக்கு சென்று ஜெபித்தேன். நான் ஜெபிக்கத் தொடங்கினபோது, அந்த ஒளி இரண்டு மரங்களின் இடையில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டேன். அவர், “உன் ஊழியத்துக்கும் வேதத்துக்கும் திரும்பிச் செல்” என்றார். நான் திரும்பிச் சென்றேன்... 113வேதாகமம்... என் காரில் இருந்தது. நான் பார்த்த போது, காற்று அதை நாத்தான் தாவீதின் சம்பவத்துக்கு திருப்பியிருந்தது. கர்த்தர் நாத்தானிடம், “நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி சொல்ல வேண்டியது என்னவென்றால்; ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டு மந்தையைவிட்டு எடுத்து பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்'' (மிகப் பெரிய நாமம் அல்ல. பெரிய நாமம் மாத்திரமே. பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமம்; பில்லி கிரகாமைப் போல் செய்யவில்லை, ஆனால்... ஒரு பெரிய நாமம்). ”இதை நான் அவனுக்கு செய்தேன். அவன் ஆலயத்தைக் கட்ட விடமாட்டேன். ஆனால் அவன் குமாரன்...'' அது “உன் கர்ப்ப பிறப்பாகிய சந்ததி” என்று கூறின மாத்திரத்தில், ஓ, என்னே; அது அங்கிருந்தது. நான், “ஜோசப்பா?” என்றேன். “அது சரி”. நான் வீட்டுக்கு சென்றேன். அங்கே அவள் நிறை கர்ப்பிணியாய், மிகப்பெரிய உருவம் படைத்திருந்தாள்... அவளால் வயல் வெளியில் நடக்கக் கூட முடியவில்லை. நான் ஓடி என் கைகளை அவள் தோள் மேல் போட்டு, “தேனே, ஜோசப் வருகிறான். ஜோசப் வந்துக் கொண்டிருக்கிறான்” என்றேன். 114அறுவை பிரசவம் ஆனவர்களுக்கு, குழந்தையை கீழே இறங்க விடக்கூடாது என்று எவருக்குமே தெரியும். அன்றிரவு குழந்தை கீழே இறங்கினது (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி)... உடைந்தது, எல்லாமே நடந்தது. அடுத்த நாள் காலை ஏழு மணிக்கு நாங்கள் மருத்துவமனைக்கு சென்றோம். மருத்துவர், “ஓ, இரக்கம், நன்மை” என்றார். அவளை விடை கொடுத்து முத்தமிட்டு, “தேனே, இன்னும் அதிக நேரம் இல்லை . ஜோசப் வந்து விடுவான்” என்றேன். அவள் படியின் மேல் இப்படி அறுவை சிகிச்சை மேசைக்குக் கொண்டு போகப்பட்டாள். சில நிமிடங்களில் நர்ஸ் திரும்பி வந்து, “சங்கை பிரான்ஹாமே” என்று கூப்பிட்டாள். நான், “இதோ அம்மணி” என்றேன். அவள், “உங்களுக்கு அழகான ஏழு பவுண்டு மூன்று அவுன்ஸ் எடையுள்ள ஆண்பிள்ளை பிறந்திருக்கிறான்” என்றாள். நான், மகன் ஜோசப்பே, “உன்னை வரவேற்கிறேன்” என்றேன். ஆம் ஐயா! ஏன்? ஏன்? அது என்ன? அது நடக்கும் என்று வேதத்தில் எழுதி வைக்கப்படவில்லை, ஆனால் அது ஆபிரகாமுக்கு வெளிப்படுத்தின, வேதாகமத்தில் காணப்படும் அதே தேவன். நாங்கள் அவளுடைய கர்ப்பம் செத்துப் போயிருந்ததை... அவளால் மறுபடியும் பிரசவிக்க முடியாது என்னும் நிலையை எண்ணாதிருந்தோம். நீங்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசுவாசமாய் சந்தேகப்படாமல், அது நடக்கும் என்று அறிந்து தேவனை ஸ்தோத்தரிக்க வேண்டும். மருத்துவர் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை. பலவிடங்களிலுமிருந்து எல்லாமே கூறப்படும். ஆனால் அதை விசுவாசிக்காதீர்கள். அது பிசாசின் பொய். ஆம், ஐயா, உண்மை. விசுவாசம் கிரியைகளுடன் இணைந்து செயல்பட்டு, வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிறது (நாம் வேகமாக பார்ப்போம்). 115“வேசியாகிய ராகாப்” என்பவளைக் குறித்து யாக்கோபு, “அவள் கிரியைகளினால் நீதியுள்ளவளாக்கப்பட்டாள்” என்கிறான். ஏன்? அவள் விசுவாசம். அவள், “தேவன் உங்களோடு இருக்கிறார் என்று கேள்விப்படுகிறேன்” என்றாள். யோசுவா தலையை எப்படி வாரிக் கொண்டிருக்கிறான் என்றோ, அல்லது எப்படி உடை உடுத்தியிருக்கிறான் என்றோ அவள் காண விரும்பவில்லை. அவள், “தேவன் உங்களோடு கூட இருக்கிறார் என்று கேள்விப்படுகிறேன்'' என்றாள். அதுதான் அவசியம். அவள் ஆயத்தமானாள். இன்று கிடைக்கப் பெறும் உண்மையான தரிசனம் போல் (இன்னும் சிறிது நேரத்தில் முடித்துவிடுகிறேன்). இன்று தேவனிடத்திலிருந்து கிடைக்கப்பெறும் உண்மையான தரிசனங்கள், இந்நாளுக்கென வாக்களிக்கப்பட்ட வார்த்தையாகும். “சகோ. பிரான்ஹாமே, இந்த தரிசனங்கள் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது?” என்று கேட்கின்றனர். அதைக் குறித்து ஜனங்கள் இடறலடைகின்றனர். “கடைசி நாட்களில் உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள். உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்” என்று அப்போஸ்தலர்: 2:17 கூறவில்லையா? அது உண்மை அல்லவா? வேதம் அப்படித்தான் கூறுகிறது. 116சரி, அப்படியானால் மல்கியா: 4-ம் அதிகாரத்தையும் படித்து, அது இந்நாளுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதா என்று அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எப்படி அதில் விசுவாசம் உள்ளது? ஏனெனில் வேதம் அவ்வாறு கூறியுள்ளது. நீங்கள் லூக்கா: 17:30-ஐப் படித்துப் பாருங்கள். இயேசு, “சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷ குமாரன் வருகையிலும் நடக்கும்” என்றார். சோதோமில் இருந்தது போலவே. இன்றுள்ள உலகின் நிலைமையைப் பாருங்கள்; சோதோமியர்கள். இரண்டு சாட்சிகளாகிய பில்லி கிரகாமும் ஓரல் ராபர்ட்ஸும் ஸ்தாபன சபைகளில் சாட்சி கூறி வருவதைப் பாருங்கள் ஒருவர் மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்களுக்கு, மற்றவர் பெந்தெகோஸ்தேகாரருக்கு. இவர், அவர், மற்றவர். 117ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், ஆபிரகாம் சோதோமில் இல்லை. அவன் ஏற்கனவே வெளியே அழைக்கப்பட்டான். ஒருவர் அவனிடம் தங்கி, அவனிடம் பேசினார்! அப்படி தங்கி பேசினவர் அவனுக்கு ஒரு அடையாளத்தைக் காண்பித்தார். அவருடைய முதுகு கூடாரம் பக்கம் திருப்பப்பட்டிருந்தது. அவன் இவ்வளவு காலமாக காத்துக் கொண்டிருந்த குமாரனை சாராள் பெறுவாள் என்று அவர் கூறினார். ஆமென். அவருடைய முதுகு திருப்பப்பட்ட நிலையில் அவன் அவரை, “தேவன், ஏலோகிம்'' என்றழைத்தான். அதுவே இன்று நிறைவேறுகிறது. ஏனெனில் நமக்கு விசுவாசம் உள்ளது. இது தேவனால் உண்டானதென்று நான் அறிந்திருக்கிறேன். ஏனெனில் இதுவும் மற்ற வேத வாக்கியங்களும் இந்த நேரத்தை சுட்டிக் காட்டுகின்றன. “ஏழாம் தூதனின் சத்தத்தின் நாட்களில், அவன் தன் செய்தியை முழங்கும் போது... சுகமளிக்கும் ஆராதனை அல்ல, அதை தொடர்ந்து வரும் செய்தி... என்று வெளிப்படுத்தல் 10 கூறுகிறது. 118இயேசு எல்லாவிடங்களிலும் சுற்றித் திரிந்து பிரசங்கம் செய்தார். அவர் வியாதியஸ்தரை சுகப்படுத்தினார். எல்லாவற்றையும் செய்தார். அப்பொழுது அவர்கள், “ஓ, அந்த வாலிப ரபீ. அவர் மிகவும் பெரியவர். அவர் எங்கள் சபைக்கு வரவேண்டும்” என்றனர். ஒரு நாள் அவர், “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்றார். ஓ, என்னே! அதன் பிறகு அவரை யாருக்கும் வேண்டாம் என்று தள்ளிவிட்டனர். ஆம், ஓ! “நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும் அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால்” என்று கூறி அதற்கு விளக்கம் தராமல் விட்டுவிட்டார். “நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை” (யோவான் 6: 53) என்று கூறினார். மருத்துவர்களும் நர்ஸ்மார்களும், “இவர் இரத்தத்தைக் குடிக்கும் பூதம், அவருடைய இரத்தத்தை நாம் குடிக்க வேண்டுமென்று முயல்கிறார்” என்று சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். பாருங்கள், அவர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை. அவர் அதை அறிந்துகொண்டார். அந்த சீஷர்களுக்கும் அது விளங்கியிருக்காது, ஆனால் அவர்கள் அதை விசுவாசித்தனர், ஆமென். ஏனெனில் அது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. ஆம், ஐயா. அவர்கள் அதை அறிந்து கொண்டனர், வேத வாக்கியங்கள் அதை உரைத்தன். 119“இன்று போலியான காரியங்கள் நிலவி வரும் போது, இந்த தரிசனங்களை நீங்கள் எப்படி விசுவாசிக்கிறீர்கள்?” என்னும் கேள்வி என்னிடம் கேட்கப்படலாம். இப்பொழுது கடினமான ஒன்றை ஒரு நிமிடம் பேசப் போகிறேன். சகோதரனே, ஏன் போலியானவை நம்மைச் சுற்றிலும் இருக்கிறதென்றால், இவை இந்நேரத்தில் இருக்க வேண்டுமென்று உரைக்கப்பட்டுள்ளதென்று நினைவில் கொள். அது முற்றிலும் உண்மை. மோசேயின் காலத்தில் இருந்தது போல. மோசே தேவனின் கிரியைகளை ஜனங்களுக்கு முன்பாக செய்து காண்பிக்க சென்றபோது, அங்கு யந்நேயும் யம்பிரேயும் இருந்தனர். அதை முதலில் செய்தது யார்? அதன் பிறகு இந்த போலியாட்கள் தோன்றினர். ஒன்றை அவர்கள் பாவனை செய்வதற்கு, அது முதலில் நடந்தாக வேண்டும். உண்மையான ஒன்று முதலில் நடக்க வேண்டும்... (உ,ஊ). இல்லை, நாங்கள் இழக்கப்படவில்லை. நாங்கள் எங்கிருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். பாருங்கள்?வேதவாக்கியங்களின் மூலமாகவும், தேவனுடைய வெளிப்பாட்டின் மூலமாகவும் நாங்கள் அதை அறிந்திருக்கிறோம். அப்படித்தான் நீங்கள் நிற்க முடியும். 120“இந்த மனிதன் தரிசனம் காண்கிறார். அவர் இதை செய்கிறார். ஆனால் அவர் அந்த மனிதனுடைய மனைவியுடன் திரிகிறார். அவர் மூன்று கடவுள்களில் நம்பிக்கை கொண்டிருக்கிறார். அது சிறிதும் தடுமாறச் செய்வதில்லை. அவர்கள் ஒன்றை மாத்திரம் பாவனை செய்ய முடியாது. அதுதான் வார்த்தை. இவைகளையெல்லாம் அவர்கள் பெற்றிருக்கக் கூடும். அவர்கள் அந்நிய பாஷை பேசக் கூடும். கூச்சலிடக் கூடும், ஆவியில் நடனமாடக் கூடும். இவையெல்லாம் செய்தும் அவர்கள் பிசாசுகளாய் இருக்கக் கூடும் (உ,ஊ). அது உண்மை. அது உண்மை. இந்த வார்த்தை அவர்களை அளந்துவிடுகிறது. பாருங்கள்? அது முற்றிலும் உண்மை. அங்குதான் அது முடிவில் வருகிறது. பாருங்கள் ? மோசேயும் யம்பிரேயும்... அவர், “யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல இந்த போலியாட்களும் கடைசி நாட்களில் பூமியில் எழும்புவார்கள்” என்று கூறினாரென்று ஞாபகமிருக்கட்டும். அவர் அப்படி கூறினாரா? (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) ஆகவே அவர்களை நாம் பெற்றிருக்கிறோம். 121அது மோசேயை தடுமாறச் செய்யவில்லை. மோசே கர்த்தருடைய நாமத்தில் ஒரு அற்புதத்தை செய்த போது, இந்த போலியாட்களும் அதையே செய்தனர். அதைக் கண்டு மோசே, “நான் இதை நிறுத்திக் கொண்டு ஊழியத்தை விட்டு போய்விடப் போகிறேன்” என்று கூறவில்லை. அவன் அதில் நிலைநின்றான். ஏன்? அது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அல்லேலூயா! அவன் தேவனுடைய வார்த்தையின் மூலம் அறிந்திருந்தான். முடிவில் தேவனுடைய வார்த்தை அவர்களை மேற்கொள்ளும் என்று அறிந்திருந்தான். ஒரு நேரம் வரும். அப்பொழுது வார்த்தை தன்னை வெளிப்படுத்தும், அதற்கு மேல் அவர்களால் செல்ல முடியாது என்பதை அவன் அறிந்திருந்தான். எனவே இத்தனை ஆண்டுகளாக இவைகளைக் குறித்து நான் அறிந்திருக்கிறேன். பாருங்கள்? அது உண்மை. தேவன் ஒரு அற்புதத்தை... ஒரு உண்மையான அற்புதத்தை... அனுப்பும்போது, முழு முறைமையிலும் எப்பொழுதுமே ஒரு மாறுதல் உண்டாகும். தேவன் ஒன்றை சபைக்கு அனுப்பி, பழைய முறைமை மாறாமல் போனால், அவர் அதை வீணாக அனுப்பினார். அற்புதங்களும் அடையாளங்களும் அடங்கிய செய்தி ஒன்று புறப்பட்டுச் சென்றால், அதை தொடர்ந்து ஒரு செய்தி செல்ல வேண்டும். இயேசு சென்று முதலில் வியாதியஸ்தரை சுகப்படுத்தினார், அதன் பிறகு “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். நானே அவர்” என்னும் அவருடைய செய்தி வந்தது. பாருங்கள்? அவர்கள் அதை விசுவாசிக்கவில்லை, அவர்கள் அற்புதங்களை விசுவாசித்தனர். அவர், ''என்னை விசுவாசிக்காவிட்டால், அந்த அற்புதங்களையாவது விசுவாசியுங்கள். நான் யாரென்று என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகள் அவைகளே'' என்றார். ஓ, என்னே! மகிமை! முதலில் யார் அற்புதத்தை செய்தது? மோசே. அதன் பிறகு அவர்கள் அதை பாவனை செய்தனர். ஆனால் சத்தியங்கள் இருந்து வருகின்றன. அவர்கள் செய்தியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தேவனுடைய வார்த்தையிலிருந்து அளிக்கப்படும் கலப்பில்லாத செய்தியை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 122யூதாஸ் எல்லாவிதமான அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்திருக்கக் கூடும். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியைப் பெறும் நேரத்தில் அவன் தன் உண்மையான சொரூபத்தை காண்பித்தான். வார்த்தைக்கு வரும் வரைக்கும் பிசாசு எல்லாவற்றையும் பாவனை செய்ய முடியும். ஆனால் அவனால் அந்த வார்த்தை எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள முடியாது. அவன் ஏவாளுக்கு செய்தது போல, ஒரு வார்த்தையைத் தவிர மற்றெல்லா வார்த்தையும் அவன் கொண்டு வரமுடியும். அவனால் எல்லாவற்றையும் அளிக்க முடியாது. ஏனெனில்... முழுவதுமே கிறிஸ்துவின் சரீரமாயுள்ளது. பாருங்கள், வார்த்தை. அவர்களால் முடியாது... யந்நேயும் யம்பிரேயும் மோசேயின் செய்தியை ஏற்றுக் கொள்ளாதது போல, இவர்களால் இந்த செய்தியை ஏற்றுக் கொள்ள முடியாது. அபிஷேகம் பண்ணப்பட்ட தேவனுடைய தீர்க்கதரிசியால் உறுதிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையை அவர்களால் பின்பற்ற முடியாத காரணத்தால், போலியான அவர்களுடைய கிரியைகள் வெளியரங்கமாயின. பாருங்கள்? 123அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களுடன் வெளியே வர முடியவில்லை. ஏன்? அவர்கள் எகிப்தின் ஸ்தாபனக் குழந்தைகள். அவர்களால் வார்த்தையை பின்பற்ற முடியவில்லை. அப்படி செய்திருந்தால், அவர்கள் எகிப்தை விட்டு வெளிவந்திருக்க வேண்டும். நீல நதி... அங்கிருந்த எல்லாமே அவர்களுக்கு நன்றாயிருந்தது. எனவே அவர்களால் அப்படி செய்ய முடியவில்லை. அவர்கள் வார்த்தையை பாவனை செய்து, மோசே செய்ததையே செய்த போதிலும், புறப்படும் சமயம் வந்தபோது, அவர்களுடைய மதியீனம் வெளியானது. அப்பொழுது தேவன் வாதைகளை அவர்கள் மேல் ஊற்றினார். இப்பொழுதும் அப்படியே அவர்கள் எல்லா விதமான போலியான காரியங்களையும் செய்யக் கூடும். ஆனால் அது உண்மையானதை மிகைப்படுத்துகின்றதேயன்றி வேறொன்றையும் செய்யவில்லை. விசுவாசிக்கும் எந்த பிள்ளைக்கும் அது உண்மையென்று தெரியும் (உ, ஊ). இங்கு அவர்களுடைய போலியான காரியங்களின் மதியீனத்தை நீங்கள் வெளிப்படையாக காண்கிறீர்கள். நீங்கள் மாத்திரம்... உங்களுடைய கிரியை உண்மையான வார்த்தையின் அடிப்படையில் அமைந்திருந்து, நீங்கள் அதன் மேல் கொண்டுள்ள விசுவாசத்தினால் உறுதிப்படுமானால், அது தேவனுடைய வாக்குத்தத்தத்தை, அது எழுதப்பட்ட விதமாக, வெளிப்படுத்தும். 124இயேசு, “நான் கிரியைகளை செய்யாதிருந்தால்...'' (கூர்ந்து கவனியுங்கள்), ”நான் கிரியைகளை செய்யாதிருந்தால்...'' (அதனுடன் இதை சேர்க்க விரும்புகிறேன்). அதாவது, “நான் செய்வேன் என்று வேத வாக்கியங்கள் உரைத்துள்ள கிரியைகளை நான் செய்யாதிருந்தால்... மேசியா வரும்போது செய்வாரென்று உரைக்கப்பட்டுள்ள கிரியைகளை என் காலத்தில் நான் வரும்போது செய்யாதிருந்தால்; தேவன் இந்த கிரியைகளின் மூலமாக அந்த வார்த்தையை உறுதிப்படுத்தாமல் போனால்; என் ஜீவியம் அது கூறியுள்ளதை செய்வதன் மூலம் அந்த வார்த்தையை பிழைக்கச் செய்யாமல் போனால்...'' (இதைக் காணத் தவறாதீர்கள்) இயேசு, ”மேசியா என்ன செய்ய வேண்டுமென்று உங்களுக்குத் தெரியும். அப்படியானால், எழுதப்பட்டுள்ள வார்த்தை என் மூலம் வெளிப்படாமல் போனால், நான் அவரல்ல“ (ஆமென்!) ”அப்படியானால் நான் குறிப்பிட்டுக் கொண்டிருக்கும் காலம் தவறு, யோவான் ஸ்நானன் என்னைக் குறித்துச் சொன்னது உண்மையல்ல. நான் மேசியாவாக இராமல், மேசியா செய்ய வேண்டுமென்று உரைக்கப்பட்டுள்ள அந்த கிரியைகளை நான் செய்யாமல் போனால்; உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார்“ என்று உரைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஒரு தீர்க்கதரிசி இருக்கவில்லை. தேவன் வாக்குத்தத்தம் பண்ணின கிரியைகள் என் ஜீவியத்தில் வெளிப்படாமலிருந்தால், ”நான் அவரல்ல. ஆனால் இக்காலத்திற்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை என்னில் உறுதிப்படுமானால், நானே அவர், அந்த வாக்குத்தத்தம் நிறைவேறினதாய் உங்களிடம் வந்துள்ளது'' என்றார். (ஓ, என்னே, இதைக் காட்டிலும் தெளிவாயிருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை). “அந்த வாக்குத்தத்தம் நிறைவேறாமல் போனால்...'' (ஓ!). 125இயேசு, “இந்நாளுக்கென அளிக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தம் என் ஊழியத்தில் வெளிப்படுமானால், நானே அவர், நான் யாரென்று உங்களால் விசுவாசிக்க முடியாமல் போனால், இந்நாளுக்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள கிரியைகளைப் பாருங்கள்” (ஆமென்!) வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள கிரியைகளை பாருங்கள். அந்த கிரியைகள் ஒவ்வொன்றும் என்னில் நிறைவேறாமல் போனால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. ஏனெனில் உங்களுக்கு நான் தவறாக கூறிவிட்டேன். என்னை நீங்கள் விசுவாசிக்காவிட்டாலும், இந்நாளில் என்ன நடக்குமென்று வேதம் உரைத்துள்ளதைப் பாருங்கள். அது நடக்கவில்லை என்றால், அது உண்மையல்ல. மற்றும் இக்காலத்தில் நடக்குமென்று கூறப்பட்டுள்ள வேறு பல பொய்யான காரியங்களும் இங்கு நடக்காவிட்டால், நான் கூறினது தவறு. ஆனால் நடக்குமானால், “நானே அவர்” (ஆமென்!) “வருவதாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவர் நானே” என்றார். (ஓ என்னே, அவர் காலத்தில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அதே கிரியைகள் அவரை அந்த மேசியாவென்று உறுதிப்படுத்தின. நீங்கள் அதை விசுவாசிப்பதில்லையா?) 126நல்லது, சகோதரனே, லூக்கா: 17-ம் அதிகாரம் 30-ம் வசனத்தில் சொல்லப்பட்ட கிரியை, அதாவது அவருடைய வருகைக்கு சற்றுமுன்பு உலகம் சோதோமின் நிலைக்குத் திரும்பும் என்றும், தூதர்கள் புறப்பட்டு செல்வார்கள் என்றும், சம்பவங்கள் அப்படியே நிகழுமென்றும் அவை இப்பொழுது நிகழாமல் போனால், நான் உங்களுக்கு உண்மையை சொன்னதாக என்னை நம்பாதீர்கள். ஆனால் அது நிகழ்ந்து கொண்டிருக்குமானால், அது அவரென்றும், “அந்த நாளில் மனுஷகுமாரன் வெளிப்படுவார்'' என்றும் விசுவாசியுங்கள். ஆமென்! மனுஷகுமாரன் சபையாகிய உங்களுக்கு மாம்ச சரீரத்தில் வெளிப்படுவார்... சோதோமின் நாட்களுக்கு முன்பு அவர் செய்த அதே விதமாக, அவர்களை விட்டு வெகு தூரம் இருந்து, தேவனுடைய வாக்குத்தத்தத்தை விசுவாசித்துக் கொண்டிருந்த அழைக்கப்பட்ட கூட்டத்துக்கு அவர் செய்த அதே விதமாக. மகிமை! 127இன்றைக்கு பரிசுத்த ஆவி செய்து வரும் கிரியைகள், அந்த தரிசனங்கள் ஒருபோதும் தவறிப் போகாமை, வேதத்தில் வாக்களிப்பட்டுள்ளன. அப்போஸ்தல அடையாளங்கள், மல்கியா: 4, மற்றும் ஓ, வெளிப்படுத்தல் 10:6 இவையனைத்தும் நிறைவேறி விஞ்ஞான பூர்வமாகவும் மற்றெல்லா வகையிலும் நிரூபிக்கப்படுதல் போன்றவை. நான் உங்களுக்கு சத்தியத்தை உரைக்காமல் இருந்திருந்தால், இவையெல்லாம் நடந்திருக்காது. ஆனால் இவையனைத்தும், உங்களுக்கு சத்தியத்தை உரைத்தேன் என்பதற்கு சாட்சியாயுள்ளன. அவர் இன்னும் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவருடைய ஆவி வெளிப்பட்டு, மணவாட்டியைக் கொண்டு செல்லவிருக்கிறது. அந்த விசுவாசம் (வெளிப்பாடு) உங்கள் இருதயத்தில் விழுந்து “இதுதான் அந்த நேரம்” என்பதை உணர்த்துவதாக. இப்பொழுது நாம் ஜெபம் செய்வோம்: 128அன்புள்ள தேவனே, இயேசு கிறிஸ்து என்னும் நபராய் மாம்சத்தில் வெளிப்பட்டவரே, வேத வாக்கியங்களின் படி மூன்றாம் நாள் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து உன்னதத்துக்கு ஏறினவரே, சீஷர்களை உலகெங்கும் அனுப்பி, “விசுவாசிக்கிறவர்களால் இந்த அடையாளங்கள் நடக்கும்” என்று சொன்னவரே, தேவனே, இந்நாளின் பெந்தெகொஸ்தே சபைக்கு நீர் வரங்களை திரும்ப அளித்தீர். கர்த்தாவே, அவர்களில் சிலர் இங்கு இருக்கக் கூடும். வேறு சிலர் உலகின் பல்வேறு பாகங்களில் ஒலிநாடாவைக் கேட்கக்கூடும். இது பெந்தெகொஸ்தே செய்தி அல்லவென்றும், இது மணவாட்டியை வெளியே அழைத்தல் என்றும் அவர்கள் உணருவார்களாக. பெந்தெகொஸ்தே செய்தி சபைக்கு வரங்களைத் திரும்ப அளிக்கும் செய்தியாயிருந்தது. ஆனால் இதுவோ சோதோம் எரிந்து போவதற்கு முன்பு, மணவாட்டியை அழைக்கும் வேறொரு செய்தியாகும். அன்புள்ள தேவனே, அவர்கள் இதை அறிந்து கொள்வார்களாக. விசுவாசம்... உம்மை நான் விசுவாசிக்கிறேன். ஏனெனில் அது உமது ஆவியினால் தேவனுடைய வார்த்தையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டு, உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்த்தாவே, நிச்சயமாக அது சிறுபான்மையோராக இருக்கும். எப்பொழுதுமே உம்முடைய கூட்டம் அவ்வாறு இருந்து வந்துள்ளது. ஆனாலும் கர்த்தாவே நீர், “பயப்படாதே சிறு மந்தையே, உங்களுக்கு ராஜ்ஜியத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்” என்று கூறியிருக்கிறீர். (லூக். 12:32). 129ஆகவே தேவனே, மனிதர் தங்கள் அறிவிலிருந்து விலகி, அவர்கள் எது சரியென்று நினைக்கிறார்களோ, அதிலிருந்து விலகி, வேதவாக்கியங்களை நோக்கும்படிக்கு ஜெபிக்கிறேன். நேற்று இரவு பேசினது போன்று, பாபிலோனின் அழிவின் நாட்களில் இருந்த ராஜாத்தி, “உம்முடைய தகப்பனின் ராஜ்யத்தில் தானியேல்” என்னும் பெயர் கொண்ட ஒருவன் இருந்தான், “பெந்தெகொஸ்தே தகப்பனின் ராஜ்யத்தில். அவன் எல்லா சந்தேகங்களையும் தெளிவிப்பான்” என்று சொன்னாள் (தானி. 5:12). அவள் நினைத்தது போல, இங்குள்ள ஜனங்களும் நினைக்கும்படி செய்வீராக. இப்பொழுதும் கர்த்தாவே, பெந்தெகொஸ்தே காலத்தில் இருந்த ராஜ்யத்தில், மார்டின் லூத்தரின் காலத்தில் இருந்த ராஜ்யத்தில், ஜான் வெஸ்லி காலத்தில், அப்படியே வழிவழியாக ஜான் ஸ்மித், அலெக்ஸாண்டர் காம்ப்பெல், போன்றவர்களின் காலங்களில் இருந்த பரிசுத்த ஆவி, அவரே சந்தேகங்களை தெளிவிக்கிறவராயிருக்கிறார். லூத்தரின் காலத்தில் இருந்தவர்கள், “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்” என்னும் சத்தியத்தை பெற்றுக் கொண்டனர். மெதோடிஸ்டுகளுக்கு, அவர்கள் பரிசுத்தமாக்கப்பட வேண்டுமென்று கூறி, அவர்களுடைய சந்தேகங்களை தெளிவித்தார். பெந்தெகொஸ்தேகாரரின் காலத்தில் அவர்கள் அந்நிய பாஷைகள் பேசினர், தெய்வீக சுகமளித்தல் போன்றவைகளினால் ஆவியானவர் தம்மை வெளிப்படுத்தினார். அது பெந்தெகொஸ்தேகாரரின் இருதயத்திலிருந்த சந்தேகங்கள் அனைத்தையும் தெளிவுப்படுத்தினது. ஆனால் ஓ, தேவனே, அவர்கள் எல்லாரும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அவர்கள் மனிதனின் கருத்துக்களுக்கு திரும்பிச் சென்றனர். ஆனால் இப்பொழுது, நீர் வேதத்தில் வாக்களித்துள்ளபடி, மணவாட்டி அழைக்கப்படும்போது, அது உலகம் பூராவும் செய்தித்தாள்களில் வாசிக்கப்படுகின்றது. அது மாத்திரமல்ல, அதை ஒவ்வொரு இரவும் தொடர்ச்சியாக எங்கள் கண்களால் காண்கிறோம். தேவனே, இது ஜனங்களின் இருதயங்களிலுள்ள சந்தேகங்கள் அனைத்தையும் தெளிவித்து, அவர்கள் நீதியின் சூரியனிடம் ஓடி, அங்கே முதிர்வடைந்து, களஞ்சியத்துக்கு கொண்டு செல்லப்படுவார்களாக. அவர்கள் சுட்டெரிக்கப்படவிருக்கும் தண்டில் விடப்படாமல், இன்றிரவே களஞ்சியத்துக்கு செல்வார்களாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். நீங்கள் கவனமாக கேட்டுக் கொண்டிருந்ததற்கு நன்றி, தேவன் தாமே உங்கள் இருதயங்களுடன் இடைபடுவாராக. 130இப்பொழுது நீங்கள்... நாங்கள் ஜெப அட்டைகளை விநியோகித்திருக்கிறோம். ஜெப வரிசைக்கென இப்பொழுது நாங்கள் ஏறக்குறைய இருபது நிமிடங்கள் எடுத்துக் கொள்ளப் போகிறோம். ஜனங்களை விரைவாக வரிசைப்படுத்தி, அவர்கள் மேடைக்கு வரும்போது ஜெபிக்க விரும்புகிறோம். எத்தனை ஜெப அட்டைகள் விநியோகிக்கப்பட்டனவென்று எனக்குத் தெரியவில்லை. நான் பில்லியை எதுவுமே கேட்கவில்லை. நான், “ஜெப அட்டையை கொடுத்தாயா... நீ போய் சில ஜெப அட்டைகளைக் கொடு” என்று மாத்திரம் கூறினேன். அவன் சற்று முன்பு திரும்பி வந்து என்னையும் அவன் தாயாரையும் மற்றவர்களையும் காரில் ஏற்றிக் கொண்டு இங்கு கொண்டு வந்தான். (சகோ. பிரான்ஹாம் ஜெப அட்டைகளைக் குறித்து பில்லிபாலிடம் பேசுகிறார் - ஆசி). 131சரி, ஜெப அட்டை எண் ஒன்று. உங்களிடம் அது இருந்தால், நான் காணும்படிக்கு உங்கள் கையையுயர்த்துங்கள். உங்களால் முடியவில்லை என்றால்... உங்களால் நிற்க முடியாமல் போனால்... உங்களை நாங்கள் தூக்கிக் கொண்டு வருவோம். ஜெப அட்டை எண் ஒன்று, வேகமாக. யாரிடம் உள்ளது? என்ன சொன்னீர்கள்? 'ஏ' (A), எண் ஒன்று (என்னை மன்னியுங்கள்) 'ஏ' எண்... இங்குள்ள ஸ்திரீ, உன்னிடம் அந்த ஜெப அட்டை உள்ளதா? இங்கு வா, வருவாயா, 'ஏ' எண் இரண்டு யாரிடம் உள்ளது? உன்னிடம் உள்ளதா, யாரிடமாவது? வேகமாக கையையுயர்த்துங்கள். சரி, ஸ்திரீயே, இங்கு வா, எண் மூன்று, ஜெப் அட்டை உள்ளதா? உன்னிடம் உள்ளதா? நீங்கள் எல்லோரும் உங்களிடம் அட்டைகள் உள்ளனவா? இந்த வரிசையில் இந்த... சரி உங்களுக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை. மூன்று, நான்கு, ஐந்து. 'ஏ', ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, பார்ப்போம். இங்கு 'ஏ' வரிசையில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து உள்ளன. சரி இதோ அவர்கள்... ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து. சரி வரிசையில் நில்லுங்கள், வரிசையில் நிற்கத் தொடங்குங்கள். 132உங்களால் இங்கு வரமுடியாமல் போனால், உங்கள் கையை இப்படி ஆட்டினால், அவர்கள் உங்களைத் தூக்கிக் கொண்டு இங்கு வருவார்கள். ஜெப அட்டைகள் இல்லாத இவர்களிடம் நான் கூறியிருக்கிறேன்... நீங்கள் ஜெப அட்டைகளை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இருக்கிறதா என்று தான் கேட்கிறேன். பாருங்கள், இங்குள்ள ஊனமுற்றவர்களே நீங்கள் நேரத்தோடே வந்திருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள்... நான் அவரிடம் “நேரத்தோடே” என்றேன். நீங்கள் ஜெப அட்டைகளை வைத்திருக்க வேண்டுமென்று அவசியமில்லை... நான் போதித்தது போன்று, உங்களுக்கு விசுவாசம் இருக்குமானால், பாருங்கள், அது உங்களுக்கு வெளிப்படுத்தப்படுமானால், சரி. அப்படி வெளிப்படாவிட்டால், நீங்கள் ஒரு டஜன் ஜெப வரிசைகளில் வந்தாலும், அது உங்களுக்கு சிறிதும் உதவி செய்யாது. உங்களுக்கு அது தெரியுமா? அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பாருங்கள்? நான் ஜெபிக்கக் கூடும், என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்யக் கூடும், நான் முழங்காலில் நின்று ஜெபித்து, உங்கள் மேல் கைகளை வைத்து, எண்ணெய் பூசி, நீங்கள் விரும்பும் அனைத்தும் செய்து ஜெபிக்கக்கூடும்... “அது போய்விட்டது” என்று தேவன் கிருபையினால் அதை உங்களுக்கு வெளிப்படுத்தி தருவாரானால், அது முடிந்து விடும். நீங்கள் ஜெப வரிசையில் அல்லது வேறெங்காவது இருக்க வேண்டிய அவசியமேயில்லை. அது எப்படியும் நடந்து முடிந்துவிடும். 133சரி, நான்கு... ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரெண்டு, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து. சரி, பதினாறு, பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபது. நான் கூப்பிட்ட யாருக்காகிலும் அட்டை இருந்து, எழுந்திருக்க முடியாமல் இருக்கிறீர்களா? அட்டை இருந்து எழுந்திருக்க முடியாதவர்கள், உங்கள் கையையுயர்த்துங்கள். ...நம்பிடுவாய் ஏழை அன்னாள் ஜீன் உட்கார்ந்து கொண்டு சில சமயங்களில் இரவு முழுவதும் அதை வாசித்துக் கொண்டிருப்பது என் நினைவுக்கு வருகிறது. எல்லோரும் மிகவும் அமைதியாகவும் பயபக்தியாகவும் இருங்கள். ...நம்பிடுவாய் (இப்பொழுது ஜெப அட்டைகள் ஒன்று முதல் பதினைந்து வரை, அவ்வளவு தான் என்று நினைக்கிறேன்) ...நம்பிடுவாய் இங்கு கூட்டம் கூடுகின்றனர். எனவே நாம் தொடங்கி விடுவோம். என்ன சொன்னீர்கள்? இருக்கலாம்... 134(ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து!) அதிகம் பேர் வருகின்றனர். நாம் அழைத்ததைக் காட்டிலும் அதிகம். புரவாயில்லை. நீங்கள் இருக்கும் இடத்திலேயே அமைதியாக நில்லுங்கள். யாருமே... சும்மா... உங்களுக்கு... உங்களுக்கு ஜெபிக்கப்படும். ஆனால்... பாருங்கள், உங்கள் எண்ணை கூப்பிடும் வரைக்கும் காத்திருங்கள். அப்பொழுது இங்கு அநேகர் நின்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். கர்த்தர் ஒன்றை செய்யும்போது, இங்கு நின்று கொண்டிருப்பவர்கள் அதை பின்னாலுள்ளவர்களுக்கு மறைத்து, அதை காணாதபடி செய்து விடுவார்கள், பாருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவர்கள் ஆயத்தமாகும்போது, இந்த உறுமால்களுக்காக ஜெபிப்போம். 135அன்புள்ள தேவனே, வியாதியஸ்தரிடமிருந்தும் ஊனமுற்றோரிடமிருந்தும் வந்துள்ள உறுமால்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. கர்த்தாவே, நாங்கள் இப்பொழுது பேசின இந்த விசுவாசம், நீர் வேதத்தில் யூதா புத்தகத்தில் “பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக தைரியமாய்ப் போராட வேண்டும்” என்று கூறியுள்ளது என் ஞாபகத்துக்கு வருகிறது. பரிசுத்தவான்களின் சரீரத்திலிருந்து அவர்கள் உறுமால்களை எடுத்தனர். அவர்கள் விசேஷித்தவர்கள் என்பதனால் அல்ல, அவர்கள் விசுவாசிக்கும் மக்கள் என்பதனால், அவர்கள் எங்களைப் போல பாடுள்ள மனிதரே, எலியா அப்படியிருந்தான். அவன் மழை பெய்யக் கூடாதென்று கருத்தாய் ஜெபம் பண்ணினான். தேவனே, ஜனங்கள் மனந்திரும்ப வேண்டுமென்று அப்படி செய்தான். உமது வார்த்தையை நிறைவேற்றுவதற்கென அந்த விதமாக ஜெபம் செய்யும்படி அவனுக்கு நீர் வெளிப்படுத்தினீர். நீர் அந்த தீர்க்கதரிசிக்கு ஒரு தரிசனத்தைக் காண்பித்தீர் என்பதில் சந்தேகமில்லை. கர்த்தாவே, இந்த ஜனங்கள் சுகம் பெற வேண்டுமென்று இன்றிரவு வேண்டிக் கொள்கிறேன். நான் எலியா அல்ல. அவன் பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். ஆனால் அவன் வாழ்க்கையும் ஆவியும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே, அன்புள்ள தேவனே, உமது ஜனங்களின் ஜெபங்களை கெளரவிக்கும்படி நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். இந்த உறுமால்களுக்காக நாங்கள் ஜெபிக்கும் இந்நேரத்தில் எங்கள் எல்லோரையும் கெளரவித்து, அவைகள் வியாதியஸ்தர் மேல் வைக்கப்படும்போது சுகம் பெறுவார்களாக. 136பிதாவே, நாங்கள் மரித்துக் கொண்டிருக்கிற சந்ததி என்பதை உணருகிறோம். நாங்கள் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்... நாங்கள் நித்தியத்தை முகமுகமாய் சந்திக்கிறோம். உலகத்துக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. கொலைகள், சிறு பெண்கள் கற்பழிக்கப்பட்டு துண்டுதுண்டாக வெட்டப்படுதல், ஆண்கள் பெண்களைப் போல் தலைமயிரை வளர்த்துக் கொள்ளுதல், பெண்கள் ஆண்களைப் போல் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ளுதல், அவர்கள் சீர்கேடு உண்டாக்குகின்றனர். மானிட இனம் மரித்துக் கொண்டிருக்கிறது. உலகம் மரித்துக் கொண்டிருக்கிறது. எல்லாமே மரித்துக் கொண்டிருக்கிறது. சபை மரித்துக் கொண்டிருக்கிறது. ஓ தேவனே, ஜீவனைக் கொண்டு வாரும். ஓ தேவனே, விசுவாச ஜீவனைக் கொண்டு வாரும். கர்த்தாவே, இந்த ஜனங்களுக்கு வெளிப்படுத்தும். நான் ஜெபித்து என் கைகளை அவர்கள் மேல் வைக்கலாம். ஆனால் நீர் ஒருவரே அவர்களை சுகப்படுத்த முடியும், நீர் மாத்திரமே அவர்களை சுகப்படுத்த முடியும். பிதாவே, என் கைகளை இவைகள் மேல் வைத்து, இவர்கள் ஒவ்வொருவரையும் நீர் சுகமாக்க வேண்டுமென்று என் முழு இருதயத்தோடும் வேண்டிக் கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த ஜனங்களை சுகமாக்குவீராக. ஆமென். 137சகோதரனே, இந்த ஒலிபெருக்கி வேலை செய்கிறதா? இது உங்களுக்கு நன்றாய் கேட்கிறதா? எல்லோருக்கும் நன்றாய் கேட்கிறதா? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். ஏதாவது ஒரு வகையில் என் இருதயம்... இந்த சக்கர நாற்காலி, கட்டில்கள், டோலிகள் உள்ள இந்த ஜனங்களின் மேல்... அவர்களுக்கு ஜெப அட்டை கூட கிடைக்கவில்லை. பாருங்கள்? ஆனால் சகோதரனே, கவனி, இவர்களுக்கு ஜெப அட்டைகள் கிடைத்துள்ளன. ஆகையால் அவர்கள் சுகம் பெறுவார்கள் என்று அர்த்தமல்ல. கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிற ஜனங்கள் கூட ஒருக்கால்... ஜெப அட்டைகள் பெற்றுக் கொண்டதனால் அவர்கள் சுகம் பெறுவார்கள் என்று அர்த்தமல்ல. அவர்கள் சுகம் பெறுவார்கள் அல்லது சுகம் பெறமாட்டார்கள் என்று அது கூறுவதில்லை. அது அவர்கள் தேவன் மேல் கொண்டுள்ள விசுவாசத்தைப் பொறுத்தது. அது உண்மையென்று எத்தனை பேருக்குத் தெரியும்? அவ்வளவுதான், நீங்கள் தேவன் மேல் கொண்டுள்ள விசுவாசம். அது உண்மையென்று எத்தனை பேருக்குத் தெரியும்? நீங்கள் எவ்வளவுதான் பக்தியுள்ளவர்களாயிருந்தாலும், நல்லவர்கள் அல்லது கெட்டவர்களாயிருந்தாலும், தேவனுடைய கிருபை உங்கள் இருதயத்தில் விழாமல் போனால், நீங்கள் சுகம் பெறவே முடியாது. தேவன் இவ்வளவு காலமாக பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் நடத்தி வந்திருக்கிறார் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? இன்றிரவு நீங்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கும் காரணம், நீங்கள் வரிசையில் நிற்க வேண்டுமென்று தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டதனால் அல்ல, அதுவல்ல. நீங்கள் ஜெப அட்டையை பெற்றுக் கொள்ள நேர்ந்ததனால், இங்கு வந்து... (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி). 138இப்படித்தான் இங்குள்ள என் மதிப்புக்குரிய சகோதரர் கெர்ஹோல்ட்சர் தன் ஊழியத்தை அநேக ஆண்டுகளுக்கு முன்பு... (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி)... தேவன் மேல் விசுவாசம் கொண்டவராய், தேவன் விசுவாசத்தால் வியாதியஸ்தர்களை சுகப்படுத்துவார் என்று முழுமையாக விசுவாசித்தார். அது மாறவேயில்லை. தேவன் இந்த கடைசி நாட்களில், அவர் வாக்குத்தத்தம் செய்துள்ள வரங்களை அதனுடன் கூட்டியிருக்கிறார். தேவன் அதை செய்யக் காரணம்... அவர் செய்ய வேண்டும் என்பதனால் அல்ல, அவர் வாக்குத்தத்தம் செய்த காரணத்தால். அவர் வாக்குத்தத்தம் செய்திருந்தால், அதை நிறைவேற்ற வேண்டும். ஏனெனில் அவர் தமது வார்த்தையைக் காத்துக் கொள்ள வேண்டும். அவர் உங்களுக்கும் அப்படியே வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அதாவது, “நீங்கள் விசுவாசித்தால் அது நடக்கும்” என்று. நீங்கள் விசுவாசிக்கவில்லை என்றால் அது நடக்காது. நான் உங்களை விசுவாசிக்கச் செய்ய முடியாது, நீங்களும் உங்களை விசுவாசிக்க செய்து கொள்ள முடியாது. தேவன் அதை உங்களுக்குத் தரவேண்டும். விசுவாசித்தல் என்பது தேவனுடைய வரம். உங்களுடைய விசுவாசம் அல்ல. தேவனுடைய விசுவாசம். உங்கள் அறிவினால் விளைந்த விசுவாசம் ஒருக்கால் அது நல்லதென்று விசுவாசிக்கும். ஆனால் தேவனுடைய விசுவாசம் உங்கள் இருதயத்தில் இல்லாமல் போனால்... பாருங்கள், உங்கள் அறிவினால் விளைந்த விசுவாசம் அப்படி செய்ய அதை ஏற்றுக் கொள்ளும். தேவன் அதை உங்களுக்கு வெளிப்படுத்திக் கொடுக்கும் வரை உங்கள் முழு இருயத்தோடும் விசுவாசித்துக் கொண்டேயிருங்கள். பாருங்கள்? தேவன் அதை வெளிப்படுத்திக் கொடுக்கும் வரை விசுவாசித்துக் கொண்டேயிருங்கள். ஆனால் அவர் வெளிப்படுத்தும் வரைக்கும்... 139நீங்கள், “சகோ. பிரான்ஹாமே, என்ன சொன்னீர்கள்?” என்று கேட்கலாம். ஆம், ஐயா! தேவன் ஒரு தீர்க்கதரிசியை எசேக்கியாவிடம் அனுப்பி, “கர்த்தர் உரைக்கிறதாவது, நீ படுக்கையை விட்டு எழுந்திருக்க மாட்டாய், நீ படுக்கையிலேயே மரித்துப் போவாய் என்று அவனிடம் கூறினார். அது உண்மையா? அந்த தீர்க்கதரிசி முகத்தை... அந்த ராஜா தன் முகத்தை சுவற்றுக்கு நேராகத் திருப்பி மனங்கசந்து அழுது, “கர்த்தாவே, எனக்கு இன்னும் பதினைந்து வருடங்கள் வேண்டும். கர்த்தாவே, என் விண்ணப்பத்துக்கு செவி கொடுக்கும்படி உம்மை மன்றாடிக் கேட்கிறேன்'' என்றான். அரசியலில் ராஜா என்பவன் மிகப்பெரிய மனிதன். ஆனால் தேவனுடைய பார்வையில் தீர்க்கதரிசியே மிகப் பெரியவன். ஒருவன் தேவனுடைய ராஜா, மற்றவன் தேவனுடைய தீர்க்கதரிசி. எனவே தேவன் அந்த பிளவைகளுக்கு சில... கொண்டு போகும்படி... அவனுக்கு வெளிப்படுத்தினார்... (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி). உங்களுக்குத் தெரியுமல்லவா, உங்களுக்குப் புரிகிறதா? 140நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, நான் பிரசங்கித்த “சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வெளிப்படும் நாட்களிலும் நடக்கும்” என்னும் வேதவாக்கியத்தில், “சபை வெளிப்படும் நாட்களில்” என்றா உள்ளது? இல்லை! மனுஷகுமாரன் வெளிப்படும் நாட்களில் யார் வெளிப்படுவது? அறியப்படுவது? அது சரியா? வெளிப்படுவது? மனுஷகுமாரன் வெளிப்படும் நாட்கள் சோதோம் கொமோரா நாட்களுக்கு ஒத்ததாயிருக்கும். அதுசரியா? என்ன நடந்ததென்று பாருங்கள். அவர்களுக்கு சோதோம் கொமோராவில் இரண்டு முக்கிய தூதர்கள் இருந்தனர். ஏனெனில் அங்கு வெதுவெதுப்பான கிறிஸ்தவர்கள் இருந்தனர். அது சரியா? அவர்களுக்கு இரண்டு முக்கிய தூதர்கள் (இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள்) சோதோம் கொமோராவில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் ஒருவர் ஆபிரகாமின் குழுவுடன் தங்கிவிட்டார். அது சரியா? 141இப்பொழுது பாருங்கள்! சபையின் வரலாற்றிலேயே ஹாம் என்று முடிவு பெறும் பெயரைக் கொண்ட உலக தூதனை நாம் இதுவரை பெற்றிருக்கவில்லை. கிரஹாம் ஆறு எழுத்துக்கள் (ஆங்கிலத்தில் G-R-A-H-A-M ஆறு எழுத்துக்களை கொண்டதாயுள்ளது - தமிழாக்கியோன்). ஆனால் ஆபிரகாம் என்னும் பெயரை எழுத்துக் கூட்டினால் ஏழு எழுத்துக்கள் (ஆங்கிலத்தில் A-B-R-A-H-A-M ஏழு எழுத்துக்கள் - தமிழாக்கியோன்). பாருங்கள்? எனவே உலக சபை மனித எழுத்துக்களைக் கொண்ட (ஆறு, மனிதனால் உண்டாக்கப்பட்ட ஸ்தாபனம்) அதன் தூதனைப் பெற்றுள்ளது. அவர்களுக்கு சாங்கி, மூடி, ஃபின்னி, நாக்ஸ், கால்வின் முதலானோர் இருந்தனர், ஆனால் ஒருபோதும் ஹாம் என்பதில் முடிவடையும் பெயரைக் கொண்டவர் இருக்கவில்லை. அது சரியா? அவர்கள் இப்பொழுது அதை பெற்றுள்ளனர். அவர் தேவனால் அனுப்பப்பட்ட தூதன். அவர் அவர்களுடைய சுவர்களை தன்னால் இயன்றவரை அடித்து நொறுக்கி, “மனந்திரும்புங்கள், இல்லையேல் அழிந்து போங்கள்” என்கிறார். ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், தெரிந்து கொள்ளப்பட்ட, முன்குறிக்கப்பட்ட, உடன்படிக்கை செய்து கொண்ட ஆபிரகாமும் அவனுடைய கூட்டத்தினரும் கூட ஒரு தூதனைப் பெற்றுள்ளனர் (உ,ஊ). அவர் என்ன செய்தாரென்று கவனியுங்கள். அக்கினி விழுவதற்கு நேரம் நெருங்கிவிட்டது என்பதற்கு அவர் அவர்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். இப்பொழுது நாம் அக்கினியை தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அணுகுண்டு அக்கினியை, தேவனுடைய கோபாக்கினை. 142அந்த தூதன் ஒன்றை செய்தார். அவர் தமது முதுகை பின்னால் திருப்பினவராய், ஒரு ஸ்திரியிடம், அவள் அவர் கூறினதை சந்தேகிக்கிறாள் என்றும், அவளுடைய நிலை என்னவென்றும், என்ன நடக்கப் போகிறதென்றும் கூறினார். அது சரியா, அதே விதமாக மனுஷகுமாரன் தம்மை இந்நாளில் வெளிப்படுத்துவார் என்று கூறியுள்ளாரா? அது உண்மையென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நல்லது, இதோ ஒரு ஸ்திரீ நின்றுக் கொண்டிருக்கிறாள்... சபையின் காணக்கூடாத இணைப்பில், கிறிஸ்துவுடன் மணவாட்டியின் இணைப்பின்போது, அந்த தூதன் இப்பொழுது இங்கிருக்கிறார். அந்த இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் அவருடைய தீர்க்கதரிசிகளின் மூலமே பேசுகிறார். வேதம் அவ்வாறு கூறுகிறது. அவர் தமது தீர்க்கதரிசிகளுக்குத் தெரியப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார் என்று ஆமோஸ்: 3:7 உரைக்கிறது. அவர் எக்காலத்தும் அப்படி செய்து வந்திருக்கிறார். அவர் தமது போக்கை மாற்றினதேயில்லை. பாருங்கள்? ஒரு தீர்க்கதரிசி உண்மையானவனாயிருந்தால், தேவன் அவனிடம் கூறுவதை மாத்திரமே அவனால் உரைக்க முடியும். அது சரியா? அது உண்மை. 143இந்த ஸ்திரீயை நான் பார்ப்பதற்கு முன்பே அவளுடைய விஷயம் என்னவென்று அவர் என்னிடம் கூறுவாரென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவள் புற்றுநோயினால் அவதியுறுகிறாள். அது உண்மை. அது அவள் மார்பில் உள்ளது. அவள் ஒரு பையனை மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவனுக்கு ஒரு விதமான மனநிலை கோளாறு. நரம்புத்தளர்ச்சி போன்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது உண்மை. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது உண்மை இல்லையா? நீ பெற்றுள்ள நங்கூரமிடப்பட்ட விசுவாசம் அதை நீ ஏற்கனவே பெற்றுக் கொண்டாய் என்றும், அதை நீ நிச்சயம் பெறுவாய் என்றும் கூறுகிறது என்று விசுவாசிக்கிறாயா? அப்படியானால் போ. கர்த்தராகிய இயேசு உன்னை குணமாக்குவார். பாருங்கள்? பாருங்கள்? நீ விசுவாசிக்கிறாயா? உன் முழு இருதயத்தோடும்? இந்த ஸ்திரீயை நான் காணாமலே, அவளுடைய கோளாறு என்னவென்று கர்த்தராகிய இயேசு என்னிடம் கூறுவாரென்று விசுவாசிக்கிறீர்களா? எத்தனை பேர் அதை விசுவாசிக்கிறீர்கள்? இப்பொழுது, உங்களுக்குத் தெரியும்... நான் பார்த்தது கூட கிடையாது... நான்... ஒன்றே ஒன்று, நான் ஒரு பாவாடையை மாத்திரமே கண்டேன். எனக்குத் தெரியாது, அது ஆணா, பெண்ணா என்றும் கூட சொல்ல முடியாது. யாரோ நின்று கொண்டிருக்கிறார்கள். அவள் விசுவாசிக்க வேண்டும். ஸ்திரீயே நீ விசுவாசிக்கிறாயா? இங்கு நோயாளியே, நீ விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசித்தால், உன் கையையுயர்த்து. உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், நீ தேவனிடத்தில் கேட்கும் குழந்தையைப் பெற்றுக் கொள்வாய். பாருங்கள்? பாருங்கள்? நீ விசுவாசிக்கிறாயா? நீ தேவனிடத்தில் விசுவாசமுள்ளவளாய் இருக்கிறாயா? அது சுகமளிக்காது, அது அடையாளம் காண்பிக்கிறது. அது தேவன் பிரசன்னமாயிருக்கிறார் என்பதன் பேரிலுள்ள விசுவாசத்தை அடையாளம் காண்பிக்கும் கிரியையாயுள்ளது அவருடைய வார்த்தை வெளிப்படுதல். 144இந்த ஸ்திரியும் ஒரு பெரிய காரியத்தை விரும்பிக் கொண்டிருக்கிறாள். அது குழந்தையல்ல, அவளுக்கு வேண்டியது பரிசுத்த ஆவியின் அபிஷேகம். நீ என்ன செய்ய வேண்டுமென்று சொல்கிறேன். நீ சிகரெட்டு புகைப்பதை விட்டு விட்டால், தேவன் உனக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அருளுவார். போய், விசுவாசி, பார். நீ விசுவாசிக்கிறாயா? உனக்கு தேவன் மேல் விசுவாசம் உள்ளதா? இங்கு நின்று கொண்டிருக்கும் மனிதனை என் வாழ்க்கையில் நான் கண்டதேயில்லை. அவரை எனக்குத் தெரியாது. அவர் ஏதோ மார் வலியினால் அவதியுறுகிறார். அண்மையில் அவர் கீழே விழுந்ததனால் அது விளைந்தது. அவர் இந்த இடத்தைச் சேர்ந்தவரல்ல, அவர் ஆர்கன்ஸாவிலிருந்து வருகிறார். அவர் ஒரு பிரசங்கி. நீங்கள் வீட்டுக்கு திரும்பிச் சென்று சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள். பாருங்கள்? பாருங்கள்? பாருங்கள்? அந்த மனிதனின் முகத்தை நான் பார்க்கவேயில்லை. 145இங்கு ஒரு ஸ்திரீ நின்று கொண்டிருக்கிறாள். அந்த ஸ்திரீயை என் வாழ்க்கையில் நான் கண்டதில்லை. தேவன் அவளை அறிவார். அவளுக்குள்ள கோளாறு என்னவென்று அல்லது அதைக் குறித்த ஏதாவதொன்றை தேவன் எனக்கு வெளிப்படுத்துவாரானால், நீங்கள் விசுவாசிப்பீர்களா? நீங்கள் எல்லோரும்? உங்களைக் குறித்து நான் கூறியதை பிரசங்கிக்க வேண்டும் என்னும் விசுவாசத்தை அடையாளம் காண்பிக்கும் கிரியையாக மாத்திரமே இது உள்ளது. அதை தான் தேவன் வெளிப்படுத்தினார், இது அதை நிரூபிக்கும் கிரியையாயுள்ளது. இப்பொழுது, நீ குணமாவதற்கு விசுவாசமுடையவளாயிருக்க வேண்டும். இங்குள்ள இந்த ஸ்திரீயை எனக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். ஆம், அவளை எனக்குத் தெரியாது. ஆனால் அவளுக்குத் தெரிந்த ஒருவரை எனக்குத் தெரியும். அவர் எனக்கு முன்பாக நிற்கிறதை நான் காண்கிறேன். அவள் தலைவலியால் அவதியுறுகிறாள். அது சரிதானே, ஸ்திரீயே? தேவன் உனக்கு சுகமளிப்பாரென்று விசுவாசிக்கிறாயா, இவள் பெர்ரி க்ரீனின் சகோதரி. அது உண்மை. அவளை என் வாழ்க்கையில் நான் கண்டதேயில்லை. அது உண்மை. பெர்ரி க்ரீன் இங்கு நின்றுகொண்டு, என்னை உற்றுப் பார்த்து, அதன் பிறகு இப்படி போவதை நான் கண்டேன். அது உண்மை. பெர்ரிக்ரீன் கூட்டத்தில் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. நீ விசுவாசிக்கிறாயா? நீ எவ்வளவு விசுவாசிக்கிறாய்? நீ விசுவாசித்தால், எல்லாம் கூடும். நீ விசுவாசிக்காமல் போனால் ஒன்றுமே நடக்காது. 146அங்கு உட்கார்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அந்த தலை நரைத்த ஸ்திரீ. நீ தேவனை விசுவாசிக்கிறாயா? நீ அங்கு என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்தமுடியும் என்று விசுவாசிக்கிறாயா? உனக்கு மார்பில் கட்டி (tumor) உள்ளது. தேவன் அதை உன்னை விட்டு எடுத்துப் போடுவார் என்று விசுவாசிக்கிறாயா? அது உண்மை. நீ விசுவாசமுள்ளவளாயிருந்து அவரை விசுவாசி. இப்பொழுது அவள் எதை தொட்டாள்? அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட்ட ஸ்திரீ வேதம் கூறுகிறது. வேதாகமத்தை எடுத்து படிக்க விரும்புகிறவர்களே, அவர் நம்முடைய பலவீனங்களைக் குறித்து தொடப்படக் கூடிய பிரதான ஆசாரியராய் இருப்பதாகக் கூறியுள்ளார். அது சரிதானே? அவர் பிரதான ஆசாரியராக இங்கு நின்று கொண்டிருக்கிறார். ஜனங்கள் அவரைத் தொடுகின்றனர். இங்கு மெலிந்த ஸ்திரீ உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் கையுயர்த்தினாள். அவளை என் வாழ்க்கையில் நான் கண்டதில்லை. ஆனால் அவள் இப்பொழுது ஒன்றைத் தொட்டாள். அது என்னவெனில், அவளுடைய மார்பிலுள்ள கோளாறுக்காக தேவனிடம் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு வயிற்றிலும் கோளாறு உள்ளது. நீ விசுவாசிப்பாயானால், தேவன் உனக்கு சுகமளிப்பார். நீ விசுவாசிக்க வேண்டும். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும். 147ஒரு மனிதன் மிகவும் பின்னால் உட்கார்ந்து கொண்டு இந்தப் பக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறார் (இந்த பக்கம், இரண்டாம் வரிசை). அவருக்கு ஆஸ்துமா வியாதி உள்ளது. ஐயா, தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறீரா? நீங்கள் விசுவாசித்தால், தேவன் உங்களுக்கு சுகமளிப்பார். நீங்கள் விசுவாசித்தால், கேட்டதைப் பெற்றுக் கொள்வீர்கள். இங்கு ஒரு ஸ்திரீ உட்கார்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள், இந்த இடத்தில், தலை நரைத்தவள். உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால்... நீ விசுவாசிக்கிறாயா? சரி அப்படியானால், அந்த பித்தப்பை கோளாறு உன்னை விட்டு நீங்கி விடும் நீ விசுவாசித்தால். 148கட்டிலில் படுத்துக் கொண்டிருப்பவரே, இதைக் குறித்து என்ன நினைக்கிறீர்? தேவன் உமக்கு சுகமளிப்பார் என்று விசுவாசிக்கிறீரா? உமது கோளாறு என்னவென்று தேவன் என்னிடம் கூறினால், அவரை நீர் விசுவாசிப்பீரா? நீர் விசுவாசித்தால், அந்த புற்று நோய் உம்மை விட்டு நீங்கினவராய் வீடு திரும்புவீர். நீர் ஏன் படுக்கையை விட்டு எழுந்திருந்து, உம் படுக்கையை எடுத்துக் கொண்டு வீடு திரும்பக் கூடாது? நீர் விசுவாசிக்கிறீரா? நீங்கள் எல்லோருமே விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது என்ன செய்யப் போகிறீர்கள்? தேவன் அந்த விசுவாசத்தை உங்கள் இருதயத்தில் அளித்துவிட்டாரா? இங்குள்ள எல்லோரும் உங்கள் கைகளையுயர்த்துங்கள். தேவன் அந்த விசுவாசத்தை உங்கள் இருதயத்தில் வைத்திருந்தால், இந்த வரிசையில் உள்ள நீங்கள் ஒருவர் மேல் ஒருவர் கைகளை வையுங்கள். உங்கள் கைகளை வையுங்கள்... இப்பொழுதே வேகமாக, பரிசுத்த ஆவியானவர் அசைவாடிக் கொண்டிருக்கும்போது, உங்கள் கைகளை ஒருவர் மேல் ஒருவர் வையுங்கள். கட்டிலில் கிடந்திருந்த மனிதன் எழுந்து வேகமாக வரிசையில் ஓடி, மற்றவர்களுக்காக ஜெபம் செய்கிறார். 149இப்பொழுது நாம் எழுந்து நின்று தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம், எல்லோருமே. இனிமேலும் தொடர்ந்து நடத்த வேண்டிய அவசியமில்லை. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். உங்கள் வியாதி எதுவாயிருந்தாலும், அவரை நீங்கள் விசுவாசித்தால், இப்பொழுதே எழுந்து நின்று விசுவாசியுங்கள். சர்வ வல்லமையுள்ள தேவனே, ஆபிரகாமின் தேவனே, ஈசாக்கின் தேவனே, யாக்கோபின் தேவனே, உமது வல்லமையை அனுப்பி, இப்பொழுதே இக்கூட்டத்திலுள்ள ஜனங்களுக்கு சுகமளிப்பீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். தேவனுக்கு மகிமை! தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.